உங்களையே நீங்கள் கேட்டுப்பார்க்க வேண்டிய கேள்வி இதுதான். உங்களால் ஆளுமைமிக்க மனிதராக விளங்க முடிகிறதா? இந்தக் கேள்வியைப் படித்தவுடனேயே உங்கள் நண்பர்கள் – உங்களுக்கு வேண்டியவர்கள் – உங்களைப் பற்றிச் சொல்லும் பாராட்டு மொழிகளும், உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்கள் உங்களிடம் காட்டும் பணிவும் உங்கள் நினைவுக்கு வரும். “ஆமாம்! நான் ஆளுமைமிக்க மனிதர்தான்” என்று ஒரு குரல் உள்ளே எழும். இவை, உங்களுக்குள் இருக்கும் ஆளுமைப்பண்பின் ஆரம்ப அறிகுறிகள்தான்.

இதுவரை சந்தித்திராத ஒரு மனிதரைப் பார்க்க நேர்கையில், பழகத் தொடங்கி பத்து நிமிஷங்களுக்குள் அவரை உங்களால் ஈர்க்க முடிகிறதென்றால், உங்கள் ஆளுமைப்பண்பு தீர்க்கமாக இருப்பதாய்ப் பொருள்.

அறிமுகமான வட்டத்தில் மட்டுமன்றி, உங்களுடன் பழக நேர்கிற மூன்றாம் மனிதருக்கோ, உங்கள் பணிகளைப் பற்றிக் கேள்விப்படுகிற புதியவர் ஒருவருக்கோ, உங்கள்மீது வியப்பு கலந்த பிரியமோ – மரியாதையோ தோன்றுமேயானால், அதுதான் உங்கள் ஆளுமைப் பண்பின் அழுத்தமான அடையாளம்.

இந்த ஆளுமைப்பண்பு வளர்கிறபோது உங்கள் வருகை எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. உங்கள் வார்த்தைகள் மற்றவர்களால் ஏற்கப்படுகின்றன. உங்களைத் தவிர்க்க நினைப்பவரும் உங்கள்பால் ஈர்க்கப்படுகிறார்.

“அப்படியா! இதற்கு மந்திர சக்தி எதுவும் வேண்டுமா?” என்று நீங்கள் கேட்கலாம். இது மந்திர சக்தியல்ல. இதற்குத்தான் மனித சக்தி என்று பெயர்.

இந்த அபரிமிதமான சக்தியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால், என்னென்ன வேண்டும் என்பதைப் போலவே என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதும் முக்கியம்.

பலபேர் ஆர்ப்பாட்டமாகப் பேசுவதும் ஆரவாரமாக நடந்துகொள்வதும் ஆளுமை என்று நினைத்துக்கொள்கிறார்கள். உண்மை என்னவென்றால், அப்படி நடந்துகொள்ளக்கூடிய மனிதருக்கு ஒரேயரு ரசிகர்தான் இருப்பார். அந்த மனிதர் அவரேதான். பொருத்தமில்லாமல் துருத்திக்கொண்டிருக்கும் காரணத்தாலேயே விலையுர்ந்த முந்திரிகூட, “முந்திரிக்கொட்டை” என்ற வசவுச் சொல்லை வாங்கிக்கட்டிக்கொள்கிறது.

உங்கள் செல்வமோ – செல்வாக்கோ – சிறப்புப் பட்டங்களோ – பொது இடங்களில் உங்களாலேயே வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டால், அவற்றுக்கும் மதிப்பிருக்காது. நீங்களும் மதிப்பிழக்க நேரிடும்.

உங்கள் ஆளுமையை வலிமையாக வெளிக்காட்டப் போவது, உங்கள் பணிகளும் பணிவும் மட்டும்தான். வலிமைமிக்க மனிதர் எளிமைமிக்கவராய் விளங்கும்போதுதான் அவர் இருக்கும் இடமே அவரின் தாக்கத்தை உணர்கிறது. அவரைக் கூர்ந்து கவனிக்கிறது.

ஆர்ப்பரித்து வருகிற காட்டு யானையைக் கண்டால் மிரண்டு விலகுகிற மனிதன், கோவில் யானையைக் கண்டால் அருகில் சென்று ஆசீர்வாதம் வாங்குகிறானே… இது ஏன்?

வலிமைமிகுந்த யானை பணிவின் வடிவமாய் கட்டுப்பட்டு நிற்பதுதான் காரணம். இதற்கு உளவியல் பூர்வமான காரணம் ஒன்றும் இருக்கிறது. தன்னுடைய நிலையில் மனிதன் உயர்கிறபோது, அவனிடம் இனிமையான இயல்பான பண்புகள் இருக்காது என்கிற கணிப்போடுதான், சராசரி மனிதன் சாதனையாளர்களை நெருங்குகிறார்.

விறைப்பான முகம், புதைந்துபோன புன்னகை – அதைவிட வேகமாய் சில சமயம் வெளிப்படும் செயற்கைப் புன்னகை – உயிர்ப்பில்லாத ஓரிரண்டு சொற்கள், கம்பீரம் என்று நினைத்து கடுகடுப்பாய் இருக்கிற முகம் – இவையெல்லாம் உங்களை மேலும் அந்நியப்படுத்துவதோடு, இனந்தெரியாத எதிர்ப்புணர்வை ஏற்படுத்துகிறது.

எனவே மனிதர்கள் உங்களிடமிருந்து தள்ளி நிற்பதோடு உங்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உங்களிடம் பயன்கருதிப் பழகுபவர்கள் மட்டுமே பணிந்தும் குழைந்தும் பேசுகிறார்கள்.

“பெருக்கத்து வேண்டும் பணிவு” என்கிறார் திருவள்ளுவர். “நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்” என்கிறார் கண்ணதாசன்.

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *