‘வேலை இழக்க நேர்கிறதா’ என்ற தலைப்பில், வெளிவந்த கட்டுரை என்னை அசைத்துப் போட்டது. காலத்தின் தேவையுணர்ந்து எழுதப்பட்டிருக்கிறது என்று பலரும் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள்.
பணச்சிரமமாய் இருந்தாலும், மனச்சிரமமாய், அதிலிருந்து மீண்டு வருவதற்கென்று சில அடிப்படையான மன உணர்வுகளும் உறுதியும் அவசியம்.

முதலில் பணத்தை எடுத்துக் கொள்வோம். பணம் குறைவாக இருப்பாதால் உங்களைக் குறைவாகவோ, அதிகம் இருப்பதால் உங்களை அதிகமாகவோ மதிப்பிடவேண்டியதில்லை. இந்த அடிப்படையில் மதிப்பிடும்போது, உங்களிடம் இருக்கும் பணத்தின் மதிப்புதான் உங்களின் மதிப்பு என்ற முடிவுக்கு வந்து விடுகிறீர்கள். உண்மையில், உங்கள் மதிப்புக்கேற்ற வகையில்தான், உங்கள் பணத்தின் மதிப்பு கூடவோ குறையவோ செய்யும். உங்கள் சிந்தனைத்திறன், செயல்திறன், சமயோசிதம் ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் வருமானத்தை வளர்க்கவும் குறைக்கவும் முடிகிறது

எந்த ஒரு சிரமமான சூழலிலும் இருவகை உணர்வுகள் உங்கள் இதயத்தில் எழும். “இதை எப்படி சமாளிக்க போகிறோம்” என்ற சந்தோகம் ஒரு புறம். “இதை எப்படியும் சமாளித்துவிடுவோம்” என்ற எண்ணம் மறுபுறம். இதில் எந்த எண்ணத்திற்கு ஊக்கமம் உயிரும் கொடுக்ப் போகிறீர்கள் என்பது, உங்களைப் பெறுத்தது. “எப்படியும் சமாளித்துவிடுவோம்” என்ற எண்ணம், வெறும் எண்ணமாக இல்லாமல், தீர்மானமாக மாறும்போது அது தீர்வுக்கான திசைகளைத் திறந்துவிடுகிறது.

வாழ்க்கையில் நம்பிக்கையுடன் இருப்பவர்கள் எல்லாமே அச்சம் இல்லாமலும், அவநம்பிக்கை இல்லாமலும் வாழ்வதாக அர்த்தமில்லை. ஆனால் அச்சத்ததை உற்சாகத்தால் வெற்றி கொண்டிருக்கிறார்கள். அவநம்பிக்கையை நம்பிக்கையால் வெற்றி கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு தான் விஷயம்.

சறுக்கலில் இருந்த எழுந்து கொள்ளும் போதுதான் நிதானம் தேவைப்படுகிறது. பலரும் சறுக்கி விழுந்தவுடன், “பலர் முன்னிலையில் விழுந்துவிட்டோமே” என்ற பதட்டத்தில் பரபர வென்று எழ முயல்கிற போதுதான் இன்னொரு தடவை விழுகிறார்கள். ஏற்கெனவே விழுந்து விட்டோம் என்கிற எண்ணம்தான் இன்னொரு தடவை விழுச்செய்கிறது. நிதானமாய், அதேநேரம் உறுதியாய் வீழ்ச்சியிலிருந்து தன்னை மீட்டுக் கொள்வதுதான் முக்கியமான விஷயம்.

பின்னடைவுக் காலங்களில் இந்தப் பக்குவத்துக்குத்தான் அதிகபட்ச முக்கியத்துவத்தை அளிக்கவேண்டும்.

கடந்த காலத்தின் பதிவுகளையே கட்டிக் கொண்டு கிடப்பவர்கள் எதிர்காலத்தை நோக்கி எட்டு வைக்க முடியுமா என்ன? ஆகவே, அழுத்தமான சூழுலில் அகப்பட்டுக் கொள்ளும் போதெல்லாம் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி, “அடுத்தது என்ன!”

கடந்த காலத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி அல்லது நஷ்டத்தின் அதிர்ச்சியிலேயே ஒருவர் உறைந்து போய் உட்கார்ந்துவிட்டார் என்றால், தன் எதிர் காலத்தைக் கடத்திக் கொண்டு போகிற வாய்ப்பை, கடந்த காலத்திடம் கொடுத்துவிட்டார் என்பது தான் அர்த்தம்.

புதிதாய் மூச்சுக்காற்றை நுரையீரலில் நிரப்பிக் கொள்ளக்கூட நீங்கள் பழைய மூச்சை வெளியேற்றுகிற வேலையை விநாடிதோறும் செய்து கொண்டே இருக்கிறீர்கள். இது பழைய நினைவுகளுக்கும் பொருந்தும், எல்லாவற்றையும்விட முக்கியம் ஒன்று. காலச் சூழலோ, தொழிலோ கடுமையாக இருக்கிறது என்பதாலேயே நீங்கள் உங்களையே கடுமையாக நடத்த வேண்டுமென்று கட்டாயமில்லை.

வெளிச்சூழல் வெறித்தனமான வேலைக்கும் வேகத்திற்குமான அவசியத்தை முன்வைக்கிற போதெல்லாம், உங்களை மென்மையாகவும், பிரியமாகவும் நீங்களே அணுகுங்கள். உங்கள் பலங்களை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்களை எப்படி வேண்டுமானாலும் பார்க்கட்டும். உங்களை, சாதனையாளராக நீங்கள் முதலில் பாருங்கள். உங்கள் செயல்திறன் உச்சம் மிக இயல்பாக வெளிப்படுவதை நீங்களே உணர்வீர்கள்.

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *