ஒருபுறம் புதிய புதிய தொழிலகங்கள் தொடங்கப்படுகின்றன. மறுபுறம் சில நிறுவனங்கள் மூடப்படுகின்றன. இதற்கு என்னதான் வெளிச்சூழல்கள் காரணமாக இருந்தாலும், அந்தத் தோல்விக்கு முக்கியப் பொறுப்பேற்க வேண்டியது, அதன் நிர்வாகம்தான். நிர்வாகக் குறைபாடுகள் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு விதங்களில் வெளிப்பட்டு ஒரு நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது.

பொதுவாக, ஒரு நிறுவனம் வீழ்ச்சியடைவதற்கு என்னவிதமான நிர்வாகம் காரணமாக இருக்கும் என்று தெரிந்துகொள்வது அவசியம்.

புத்தாயிரத்தின் ஆரம்பத்தில் பல தொழில் வல்லுநர்கள் கூடி இந்த நூற்றாண்டுக்கான நிர்வாக மறுமலர்ச்சி பற்றி விபரமாக ஆராய்ந்தார்கள். அப்போது, கணேஷ்சர்மா என்கிற நிர்வாகவியல் நிபுணர், ஐந்துவிதமான காரணங்களைப் பட்டியலிட்டு, இதில் ஏதாவது ஒரு மிதமான மனநிலை இருந்தாலும் அது நிர்வாகத்தின் வீழ்ச்சிக்கு வழிசெய்யும் என்று கருத்துத் தெரிவித்தார்.

அவசரம்:
தலைமை வகிப்பவர், நம்பிக்கையையும் துணிச்சலையும் பறைசாற்ற முடிவுசெய்து சில அவசரமான முடிவுகளை எடுக்கிறார். அது வெற்றிபெறும் என்றும் அடித்துச்சொல்கிறார். அப்பேர்ப்பட்ட முடிவுகளை, அவர் மேல்வைத்த நம்பிக்கையால் மொத்த நிறுவனமும் பின்பற்றப் போகிறது. எந்த ஆராய்ச்சிகளையும் புள்ளி விபரங்களையும் பாராமல் தடாலடியாக முடிவுகள் எடுத்து ஆதனால் வீழ்ச்சி ஏற்படுகிறது.

சந்தேகம்:
எந்தச் சூழலையும் எதிர்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் பிறப்பதால் அதீத எச்சரிக்கையோடும் அதில் கட்டுப்பாடுகளையும் கொண்டும் சில நிறுவனங்கள் தங்கள வேலைகளை நடத்துகின்றன. இவற்றில் கட்டுப்பாடுகள் காரணமாக போட்டியாளர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு வேலைகள் மந்த கதியில் நகரும். புதுமைகள், நவீன முயற்சிகள் போன்றவற்றுக்கு இந்த நிறுவனங்கள் இடம்கொடுப்பது கிடையாது. இப்படி இருந்தாலும் சராசரி செயல்திறன் குறைந்துகொண்டே போய் வீழ்ச்சி ஏற்படலாம்.

நிர்ப்பந்தம்:
இது கருத்துச் சுதந்திரமே இல்லாமல் அதிகாரத்தையும் அச்சுறுத்தலையும் மட்டுமே மையப்படுத்தி நடத்துகிற நிறுவனங்களில் நிகழும். எந்த ஓர் இலக்கையும் வகுத்துக்கொள்ளாமல், மற்ற விஷயங்களிலேயே அதிக கவனம் செலுத்துவார்கள். நன்கு வேலை பார்க்கிற ஊழியரைக் கூட, அவர் செய்கிற சின்ன சின்னத் தவறுகளைப் பெரிதுபடுத்தி ஊக்கம் குன்றுமாறு செய்துவிடுவார்கள். இதுபோன்ற காரணங்களால், ஓர் எல்லையைத் தாண்டி எட்டியும் பார்க்காத நிலையிலேயே நின்றுவிடுகிற அந்த நிறுவனம் மெல்ல மெல்லத் தேயத்தொடங்கி வீழ்ச்சியடைந்து விடுகிறது.

விரக்தி:
சொந்தக் காரணங்களாலோ, இயல்பாக ஏற்படும் சறுக்கல்களாலோ, விரக்தி மனப்பான்மையில் ஒரு நிர்வாகம் நடந்துகொள்ளுமென்று சொன்னால், அந்த நிறுவனமே ஆமை வேகத்தில் நடக்கும். “ஏதோ! காலத்தை ஓட்டியாக வேண்டும்” என்கிற கணக்கு ஏற்படுமென்றால் அங்கே புதிய முயற்சிகளுக்கு இடமிராது. கால ஓட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் மிகவும் பின்தங்கி விடுகிறவர்கள்கூட இந்த மனநிலையிலேயே நிறுவனத்தை நடத்தி ஓய்ந்துவிடுகிறார்கள்.

அவசியம்:
வெவ்வேறு தொழில்களைத் தொடங்கிவிட்டு, எதையுமே நிர்வகிக்க நேரமில்லாமல் சிலர் தடுமாறுவது உண்டு. அவர்களாகவே சில தொழில்கள் தானாக நடந்துவிடும் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். அத்தகைய அலட்சிய மனோபாவம் உள்ளவர்களால் எந்த வளர்ச்சியையும் கொண்டுவர முடியாது. அலுவலகத்துக்குள் சிதறிக் கிடக்கும் திறமைகளை ஒருங்கிணைப்பதற்கோ, அவர்களை ஊக்கப்படுத்துவதற்கோ ஒரு முயற்சியையும் எடுக்காமல் தங்கள் போக்கிலேயே போகக்கூடிய தலைமை, அந்த நிறுவனத்தை செயலிழக்கச் செய்துவிடும்.

இதுபோன்ற மனநிலைகள் எல்லோருக்கும் ஏதாவொரு கட்டத்தில் ஏற்படும். அப்போது விழித்துக்கொண்டு தங்களுக்குள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி நிர்வாகிகள் நிலைமையை சீர் செய்ய வேண்டும்.

ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிற அலுவலர்கள் தவறு செய்தால், ஒன்று நிர்வாகமே அதைக் கண்டுபிடிக்கும். இல்லையென்றால் சக அலுவலர்கள் மூலமாக நிர்வாகத்தின் பார்வைக்கு அந்த விஷயம் தெரியவரும்.

மாறாக, நிர்வாகமே, தவறு செய்தால் அதை சுட்டிக்காட்டவோ, அதன் விளைவுகளை எடுத்துச் சொல்லவோ வேலை பார்ப்பவர்கள் தயங்குவார்கள். தன் தவறு நிர்வாகத்திற்கே தெரிந்தால்தான் உண்டு. அதனால்தான், தன் செயல்கள் சரியாக உள்ளனவா என்பதை நிர்வாகத்தில் இருப்பவர்கள் தாங்களே பரிசீலித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

– மரபின் மைந்தன் ம. முத்தையா
(உலகப்புகழ் பெற்ற நிர்வாக உத்திகள் என்ற புத்தகத்திலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *