நமது வீட்டின் முகவரி – 13

இளமையின் காவியத்தில், அபூர்வ அத்தியாயம் நட்பு, அழகிய அத்தியாயம் காதல். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் குழந்தை மனம் – முதிர்ந்த மனம் இரண்டும் உண்டு. குழந்தை மனம், யாரிடமாவது ஆதரவு தேடி அலையும். முதிர்ந்த மனம், யாரிடமாவது பரிவையும் அன்பையும் பொழியும். மனிதனின் குழந்தை மனம் – முதிர்ந்த மனம் இரண்டுமே முழுவீச்சில் வெளிப்படுவது காதலில்தான்.

இளமையில் காதல் வயப்படுவது தவறில்லை. ஆனால், காதல் வராவிட்டால் பரவாயில்லை. பழ.சந்திரசேகரன் என்கிற கவிஞர் ஒருமுறை சொன்னார், “இளமைப்பருவமென்றால் காதலித்தே ஆக வேண்டுமென்ற கட்டாயம் ஏதுமில்லை” என்று.

ஒருவர் தன்னை முற்றாக முழுதாக இன்னொருவருக்கு அர்ப்பணிக்க முடியும் என்கிற அதிசயத் தகவலை, அவரது காதுக்கே பொல்லும் காதல் அழகானது. மனிதனுக்குள் இருக்கும் மென்மையான உணர்வுகளை அது மலர்த்துகிறது. தன்னைக் குறித்த அத்தனை உயர் மதிப்பீடுகளையும் தள்ளிவைத்துவிட்டு தன் காதலன் அல்லது காதலிக்காக உருகவும், கரையவும் தன்னால் முடியுமென்பதைத் தானே முதல்முதலாக உணரும் பருவம் இது.

ஆனால், காதல் வாழ்வின் முக்கிய அம்சம்; முடிவான அம்சமல்ல. சில பேர் காதலுக்காக வாழ்வையே தியாகம் செய்தேன் என்று தாடியை வருடிக் காட்டுவார்கள். சில பேர் வாழ்க்கைக்காகக் காதலையே தியாகம் செய்தேன் என்று மார் தட்டுவார்கள். வாழ்க்கைக்குள் இயல்பாக வந்து சேராதபோது காதல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்றை இழந்துவிடுவோமோ என்கிற தவிப்பு, அதனை இறுகப் பற்றிக்கொள்ளச் செய்கிறது.

அப்படித்தான், திடீரென்று காதலைத்தவிர எதுவும் முக்கியமில்லை என்று எண்ணுகிறவர்கள், வேலை, சுற்றம், நட்பு எல்லாவற்றையும் உதறத் தயாராகிறார்கள்.

காதலைவிட மற்றது முக்கியம் என்று கருதுகிறவர்கள், தன் காதல் ஜோடியைக் கழற்றி விட்டுவிட எத்தனிக்கிறார்கள்.

காதல், வாழ்வில் ஜீவசக்தி. வாழ்வதற்கான ஊக்கம் கொடுக்க வேண்டிய உன்னத உறவு. காதல் தோல்வி என்பது தவறான வார்த்தை. அது காதலர்களின் தோல்விதான்.

காதல் – இணைந்தாலும், பிரிந்தாலும் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும். உயிருக்குயிரான காதல் உறவுகள் கத்தரித்து விடப்படும்போது, தாங்க முடியாததுபோல் வலி எழும். அந்த வலியைத் தாங்குகிற ஆற்றலைக் காலம் தரும்.

முடிந்துபோன அந்தக் காதல் அனுபவம், வெளியே தெரியாத அளவு வலிமையை மனதுக்குத்தரும். அதனால்தான் ஒரு கவிதையில் இப்படி எழுதினேன்,

“உன்னை மட்டுமா கலைத்தது காதல்…
உலகில் யார்க்கும் உள்ளதுதான்
உண்மையில் சொன்னால் காதல்தோல்விகள்
நான்கோ ஐந்தோ நல்லதுதான்”

இது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். ஆனாலும் உண்மை இதுதான். காதலுக்காக உயிரை விடுபவர்கள் அதிகபட்ச அவசரக்காரர்கள் என்பது என் கணிப்பு. அந்த அடர்த்தியான அன்பு ஆராதிக்கக்கூடியதே தவிர ஆதரிக்கக் கூடியதல்ல.

அப்படியானால், காதலின் புனிதம் என்னாவது-?

இந்தக் கேள்வி உங்களுக்குத் தோன்றக்கூடும்.

அது பற்றிப் பேசுவோமே… அடுத்த அத்தியாயத்தில்!

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *