குழந்தைகள் பெற்றோரிடம் தங்கள் தேவைகளை பட்டியலிடுவது பழக்கம். அன்று தொடங்கியது இந்த வழக்கம். மனிதனின் தேவைகள் எப்போதும் தீர்வதேயில்லை. தேவைகளை தீர்மானிக்க ஆர்வம் அடிப்படை. ஒரு குழந்தையை இனிப்புக் கடையில் விட்டால் ஆர்வம் காரணமாய், தீர்மானிப்பதற்குள் தடுமாறிப் போகிறது.

அதேநேரம் அந்த இனிப்புகளை தின்னத் தொடங்கி திகட்டினாலோ, விட்டால் போதும் என்று தோன்றுகிறது. காலப்போக்கில் அந்த கடைக்கு போனதைக்கூட அந்த குழந்தை மறந்துவிடக் கூடும். ஆனால் மனிதனைப் பொறுத்தவரை ஆர்வத்தின் அடிப்படையில் எழுகிற தேவைகளும் தேடல்களும் நிர்ப்பந்தங்கள் ஆக மாறிவிடுகின்றன. தனக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ உள்மனதில் ஏற்படும் உந்துதல் காரணமாகவே சிலவற்றை தன்னிடம் தக்கவைத்துக்கொள்ள மனிதன் தீர்மானிக்கிறான்.

இந்த நிர்ப்பந்தங்களை கையாளத் தெரியாமல் மனிதன் தடுமாறுகிற போது அவனால் சூழ்நிலை கைதியாக மட்டுமே வாழ முடிகிறது. இரண்டில் எது வேண்டும் என்று கேட்டால் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்தல் இயல்பானது. ஆனால் இரண்டுமே வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் அது நிர்ப்பந்தத்தின் அழுத்தமான பிடியால் விளைவது.

காசிக்கு சென்றால் பிடித்த எதையாவது விட்டுவிட்டு வாருங்கள் என்பார்கள். இதன் காரணம் என்னவென்றால் காசி என்னும் மகத்தான அனுபவம் ஏற்பட்ட பிறகு அதுவரை பெரிதென்று கருதியவை பெரிதல்ல என்னும் பக்குவம் ஏற்பட்டிருக்கும் என்பது தான். இப்போது காசிக்குப் போனால் எதையாவது விடவேண்டும் என்பதையே ஒரு நிர்ப்பந்தமாக பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். பிடித்ததை விடுங்கள் என்பது ஒரு ஆலோசனை. ஆன்மீகத்தில் இன்னொரு படி நிலை எடுத்து வைப்பதற்கான ஒரு வழி.

இன்று மனிதன் தேவைகளுக்கு நடுவே தேர்ந்தெடுக்க திணறுகிறான். ஆனால் ஒரு மனிதனை தேவைகளுக்கும் தேவையின்மைக்கும் நடுவே தேர்ந்தெடுக்கச் சொன்னால் அவன் தேவையின்மையை தேர்ந்தெடுக்க வேண்டும்.மாணிக்கவாசகர் இப்படி ஒரு மனநிலையை ஊக்குவிக்க ஓர் அருமையான பாடலை சொல்கிறார்.

“உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரைகழற்கே
கற்றாவின் மனம் போல கசிந்துருக வேண்டுவனே”
என்கிறார்.

உற்றார் என்று சிலர் இருக்கும் வரை தான் நமக்கு ஊர் பெயர் என்னும் அடையாளங்கள் அவசியமாகின்றன. ஆனால் உற்றவர்கள் தொடர்பிலிருந்து விலகும்போது பேரும் ஊரும் அவசியமின்றிப் போகின்றன. மற்றவர்களுடன் தொடர்பு வேண்டாம் என்று தன்னுள் அடங்கும் மனம் கற்றவர்களுடனும் தொடர்பு வேண்டாம் என்று முடிவு செய்கிறது.

ஏனென்றால் கற்றவர்களுடன் விவாதிக்கும்போது அது அகங்காரத்தை தூண்டிவிடுகிறது. இங்கே ஏற்பட்டிருக்கும் பக்குவம் இனிமேல் கற்க வேண்டியதில்லை என்கிற எண்ணம் அல்ல. மாறாக இதுவரை கற்றவை போதும் என்கிற பக்குவம் ஆகும். இதைத்தான் கற்பனவும் இனி அமையும் என்கிறார் மாணிக்கவாசகர்.

தேவைகளை கடந்து போகிற போது பல அடையாளங்கள் உதிர்கின்றன. அடையாளங்கள் உதிர்கின்ற போது சுயம் மலர்கின்றது. தன்னை உணர்தல் சாத்தியமாகிறது. தேவையின்மையை தேர்ந்தெடுக்கும் சூழல் வந்தால் சுயம் மலர்வதற்கான பக்குவம் வந்திருப்பதாக பொருள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *