நவராத்திரி கவிதைகள் 3(1/10/2019)

வாலை இதழ்களில் வளரும் நகை-அது
வானத்துப் பொய்கையில் மலரும் முகை
பாலா விழிகளில் சுடரும் நகை- அதில்
பரவும் நெருப்பினில் அழியும் பகை

சூலத்தின் முனைகளில் ஒளிர்வதென்ன -விரல்
சொடுக்கிடும் முன்னர் ஒளிவதென்ன
நீல ண்டத்தில் நெளிவதென்ன -அவள்
நீவிய குண்டலி நாகமன்றோ

சாந்தத் திருமுகம் சிரித்திருக்கும்-அவள்
சந்நிதித் தூண்களும் சிலிர்த்திருக்கும்
காந்தக் கயல்விழி குளிர்ந்திருக்கும்-நுதல்
காட்டிடும் கண்மிசை கனலிருக்கும்

கோடையும் பனியும் அவள் அசைவே- பயிர்
கொழிப்பதும் காய்வதும் அவள் இசைவே
பாடல்கள் அவளது பவனிரதம்-கலை
பயில்பவர் அடைவது அவளின்பதம்

திக்குகள் அவள்முகம் தேடுவதும்-புவி
திடுக்கிடும் படியவள் ஆடுவதும்
இக்கணம் இந்நொடி நிகழ்வதுதான்- இவள்
இங்கிதம் எப்படிப் புகழ்வதுநாம்

சாம்ப சதாசிவன் மேனியிலே-இடம்
ஷாம்பவி ஆள்வது சாஸ்வதமாம்
தேம்பி அழுகிற பிள்ளைமுன்னே- தேவ
தேவியின் பொற்கிண்ணப் பால்வருமாம்

வையங்கள் ஆள்கிற வீரையவள் -அந்த
வான்முகில் பொழிகிற தாரையவள்;
பொய்யிந்த வலியென்று காட்டிடுவாள்-ஒரு
பொற்கணம் தனில்நம்மை மீட்டிடுவாள்
– மரபின்மைந்தன் முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *