நவராத்திரி கவிதைகள் 4(2/10/19)

தோகை விரித்திடும் பொன்மயில் அழகில்
தென்படும் பசுமை அவள்கொடைதான்
வாகைகள் சூடிட நீதியும் எழுகையில்
வெறிகொண்டு தொடர்வது அவள் படைதான்
யாகங்கள் யாவிலும் ஆடிடும் கனல்மிசை
ஏகி நடப்பது அவள் நடைதான்
நாகத்தின் படத்திலும் நாதத்தின் இசையிலும்
நாளும் அசைவது அவள் இடை தான்

சூத்திரம் எழுதிய ஞானியர் நெஞ்சினில்
சூட்சுமம் ஆனவள் பராசக்தி
பாத்திரம் நிரம்பிடும் தானிய வகைகளில்
பவித்திரம் ஆனவள் பராசக்தி
காத்திடும் வலிமையின் காருண்ய ரூபமாய்
கண்ணெதிர் தெரிபவள் பராசக்தி
சாத்திர விதிகளைத் தாண்டிய ரூபமாய்
சாகசம் செய்பவள் பராசக்தி

ஆலய வாயிலில் பூச்சரம் விற்கையில்
அவளே வெய்யிலில் வாடுகிறாள்
காலமும் நேரமும் கருதா உழைப்பினில்
காளி மரநிழல் தேடுகிறாள்
தூலமும் உயிரும் தூளியில் ஆடிடும்
தருணம் அவளே பாடுகிறாள்
காலகாலனின் உடுக்கை அசைவுக்குக்
கால்கள் மாற்றி ஆடுகிறாள்

பிச்சியென் றலைவதும் பெருங்கலை ஆள்வதும்
பிறவியை அறுப்பதும் அவள்தானே
உச்சியில் திலகமாய் சூரியச் சாந்தினை
சூடி நடப்பதும் அவள்தானே
அர்ச்சனை வேளையில் ஆதங்கப் பார்வைக்கு
ஆறுதல் தருபவள் அவள்தானே
கர்ச்சனை சிங்கத்தின் முதுகினில் ஏறி
ககனங்கள் ஆள்வதும் அவள்தானே
-மரபின் மைந்தன் முத்தையா
2019 நவராத்திரி கவிதைகள் -5

எழுதப் படாத ஏடுகளில்- வந்து
எழுது கோல்முனை தீண்டுகையில்
உழுத நிலத்தில் பயிர்போலே-அங்கே
உதித்திடும் எண்ணம் கொடுப்பது யார்?
பழுது நிரம்பிய மனதுக்குள்ளே -உயர்
பாட்டும் இசையும் பிறப்பதெங்கே
தொழுது சொல்வேன் இவையெல்லாம்- தினம்
தருவது வாணியின் கருணையன்றோ

பாரதி சரஸ்வதி பேரெழிலாள்- ஒளி
பொலிந்திடும் வெண்மலர் வீற்றிருப்பாள்
நேருறக் கலைகளை ஆண்டிருப்பாள்- அவள்
நேர்த்தியில் கீர்த்தியாய் நிறைந்திருப்பாள்
சீரிய விரல்களின் கோலங்களில்- எழில்
சித்திரம் தீட்டிடும் தூரிகையில்
காரியம் யாவையும் நிகழ்த்திவிடும்-எங்கள்
கலைமகள் பதமலர் வணங்கிடுவோம்

நான்முகன் படைக்கின்ற உலகமெல்லாம்- எங்கள்
நாயகி கலையின்றி சிறந்திடுமோ
வான்வரை வளர்புகழ் பெருமையெலாம்- அவள்
வாரித் தராவிடில் வந்திடுமோ
தேன்மழை அவளது பெருங்கருணை- எட்டுத்
திக்குகள் ஆள்வதும் அவள் அறிவே
மான்விழி நோக்கினில் கலைமகளே -பல
மாண்புகள் நிறைந்திட அருளுகிறாள்

சுவடிகள் தேன்மலர் ஜெபமாலை -அன்னை
சுந்தரக் கரங்களில் தவழ்ந்திடுமாம்
தவம்செய்த பயனாய் ஒரு வீணை- எங்கள்
தேவியின் திருமடி கிடந்திடுமாம்
நவமென ஒளிர்ந்திடும் கலைகளெலாம்- அவள்
நளினத் திருவிரல் நகங்களடா
அவள் விரல் துகள்படக் காத்திருப்போம்- நாம்
அதன்பின்னர் அவனியை ஆண்டிருப்போம்

– மரபின் மைந்தன் முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *