கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் வீட்டுமனை குடியிருப்பு ஒன்றில் சில ஆண்டுகள் முன் ஒரு வில்லா வாங்கியிருந்தேன் .வார இறுதிகளில் அங்கு செல்வது வழக்கம். அக்கம்பக்கத்தவர்கள் அன்பானவர்கள். அவர்களுக்கு அக்டோபர் மாத நமது நம்பிக்கை இதழை அன்பளிப்பாக வழங்கினேன்.
நடைப்பயிற்சி முடிந்து வருகையில் ஒரு வீட்டிலிருந்து பெரியவர் ஒருவர் வந்தார்.பலமுறை பார்த்திருக்கிறேன். பார்க்கும் போதெல்லாம் பரஸ்பரம் வணக்கமும் புன்னகையும் பரிமாறிக் கொள்வோம்.
“ஒரு நிமிஷம்” என்றபடியே வந்தவர் கைகளில் நமது நம்பிக்கை இதழின் ஒரு பக்கம் மடித்து வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பக்கத்தில் ஒரு புகைப்படம். பாரதியார் தன் குடும்பத்தோடும் இன்னும் ஒருசிலரோடும் நிற்கிறார்.
அந்தப் புகைப்படத்தில் பாரதியார் பக்கத்தில் தலைப்பாகையுடன் நிற்பவரை சுட்டிக் காட்டி “இவர்தான் எங்கப்பா” என்றார் அந்தப் பெரியவர். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ” அவர் பெயர் என்ன?” என்றேன். “அப்பா பெயர் விஜயராகவாச்சாரியார். என்பெயர் வீரராகவன்” என்றார்.
‘ எங்க அப்பாவுக்கு போஸ்டல் டிபார்ட்மென்ட் ல உத்தியோகம். பாரதியார் கூடவே இருக்கார் னு அவரை குண்டூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணீட்டாங்க. அப்போ எல்லாம் அப்பாவுக்கு 28 ரூபாய் சம்பளம்.ஆனா அரிசி மூட்டை இரண்டு ரூபா தான். சம்பளம்  வாங்கினதும் அப்பா ஒரு மூட்டை அரிசி வாங்கிப்போய் பாரதி வீட்டில போட்டுட்டு வந்துடுவாராம்.பாரதியாரை நான் பார்த்ததில்லை” என்றார்.

விஜயராகவாச்சாரியார் புதல்வர் திரு.வீரராகவன்
“சுதேசமித்திரன் பத்திரிகைல  போடறதுக்காக ரா.அ.பத்மநாபன் அப்பாகிட்டே பாரதியார் பற்றி ஒரு கட்டுரை கேட்டார். அப்பா சொல்லச் சொல்ல நான் தான் எழுதினேன்” என்றவர் அதன் கையெழுத்துப் படியையும் கொண்டு வந்து காட்டினார்.
ரா.அ.பத்மநாபன் தொகுத்த “பாரதியைப் பற்றி நண்பர்கள்” எனும் நூலில் அந்தக் கட்டுரை உள்ளது. இந்த விஷயம் திரு. வீரராகவன் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. எனவே அடுத்த சந்திப்பில் அந்தநூலை அவருக்குப் பரிசளித்தேன். அச்சில் அந்தக் கட்டுரையைக் கண்டதும் அவர் முகம் மலர்ந்தது.
அச்சு அசலாய் தன் தந்தையையும் அவர் தோளுரசி நிற்கும் மகாகவியையும் அந்தப் பக்கங்களில் தரிசித்தார் போலும்!
விடைபெற்றேன். சில விநாடிகளில் பின்னாலேயே என்னை அழைத்தபடி வந்தார்.”உங்க அன்பளிப்புன்னு கையெழுத்து போட்டுக் கொடுங்க என்றார்.
எளிய மனிதர்களின் அரிய அன்பின் அமுத தாரை பழகியல்லவா அந்த மகாகவி வாழ்ந்திருக்கிறான்.

Comments

  1. kavigjan bharathi marayavillai, ovvoruu viduthalai thagham petra ullanghalil kudikondullar, avarukkagha avar nanbarghal petra i (thu) nbanghal than enne! vaazgha! Ayya avarghalukku en manamarndha nandrigal

  2. அவர் பல்லாண்டு காலம் நலமோடும் வளமோடும் வாழ வேண்டும் வாழ்க வளமுடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *