“அதோ நீல மயில் ஒன்று தோகை விரித்தாடுகிறது என்றாள் சம்பகலதை. அதோ இன்னொரு இன்று மயில்  அதோ என்று கை நீட்டிக் கூவினர் கோபியர். நதிக்கரையில் மலைச்சரிவில் மரக்கிளைகளில் அலர்ந்தெழுந்தன ஆயிரமாயிரம் பீலி விழிகள். வான்நோக்கி பிரமித்து நின்றன பித்தெழுந்த நீல பார்வைகள்”
 
.”நீலம்” நாவலில் ஜெயமோகன்.
 
வெண்முரசு நாவல் வரிசையில் கிருஷ்ணார்ப்பணமாய் மலர்ந்திருக்கும் நாவல் நீலம்.
ஆயிரம் ஆயிரம் மயிற் பீலிகள் கண்களாய் விரிய கண்ணனைக் கண்டது போன்ற அனுபவத்தை இந்த நாவல் ஏற்படுத்துகிறது.
மகாபாரதத்திலும் பாகவதத்திலும் நடமாடக் கூடிய ஒவ்வொரு பாத்திரத்தையும் அதன் விஸ்வரூப நெருக்கத்தில் விவரிப்பது வெண்முரசு நாவல்களின் தனித்தன்மை என்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தேன்.
அப்படி சில விஸ்வரூபங்கள் நீலம் நாவலிலும் வெளிப்படுகின்றன. கண்ணனுக்கு  ஒன்பதாண்டுகள் முன்னேயே பிறந்து கண்ணன் பித்துகொண்டு அவனைக் குழந்தைப்பருவம் முதல் கொஞ்சி எடுத்து அவனுக்கு எல்லாமுமாய் இருந்த ராதை இந்த நாவலின் முதன்மைப் பாத்திரம்.
 
“உன் பெயர் இனி யுக யுகங்களுக்கு வாழும். அடி ஆயர்குல சிறுக்கி! பிரம்ம கணத்தில் அவன் பெயர் அழிந்த பின்னும்
 அரைக்கணம் உன் பெயர் வாழும்“(ப-14) என்று தென்றல் பேசி செல்வதாய் எழுதுகிறார் ஜெயமோகன்.கண்ணன் பெயர் அழிந்த பின்னும் அரைக்கணம் வாழும் பெயருடையவள் ராதை எனில் அந்தத் தன்மை அவளுக்கு சித்தித்த விதம் குறித்து விரிவாகப் பேசுகிறது நீலம்.
கண்ணன் வரும் நொடி வரைக்கும் தான் ஏன் இருக்கிறோம் இன்னும் தேடல் ராதையின் சித்தம் தவிக்கிறது.
“இங்கிருக்கிறேன் எவரோ மறந்து விட்டுச் சென்ற வைரம் போல”என்று மறுகுகிறாள்.(ப-17)
ராதை பருவமெய்தி நிற்கிறாள். அவளை உரிய இடத்தில் அமர்த்துகிற வேளையில் அவளுடைய தாய் ” தென்கடல் முனை நின்ற தெய்வதிரு வே வாழ்க” என்று மகளைக் கை தொழுகிறாள்(ப-17). கன்னியாகுமரியாய் கண்ணுக்குத் தெரியும் ராதை, மணம் கொண்டு சென்ற பின்னரும் கண்ணன் பித்திலேயே இருந்து அந்த வாழ்வைத் துறந்து தாய்வீடு திரும்புகிறாள். அப்போதும் தன்னை கடலோரம் காத்திருக்கும் கன்யாகுமரியாகவே உணர்கிறாள்.
 அவள் தன் கண்ணன் பரதவன் என்றும் கடலுக்குள் சென்றுள்ளான் என்றும் சொல்கிறாள்.
 
” காலூன்றி நின்று நானொரு கரும்பாறை ஆனேன் .காலங்கள் என்மீது வழிந்தோடக் கண்டேன்.கன்னி என் கண்ணீர் கடல் மணலாயிற்று” என்கிறாள் ராதை (ப-208)
உலகின் முடிவுறாத காத்திருப்புகள் எல்லாம் தானே ஆன  அனுபவம் ராதைக்கு நிகழ்கிறது.  காத்திருத்தலில் கல்லாய்ச் சமைவதும் காதலாய்க் கனிவதும் தாய்மையில் நிறைவதும் ராதைக்கு நிகழ்வதை நீலம் நாவல் உணர்த்துகிறது.

  நாவலின் நிறைவில் காளியாய் அலறி எழுந்து கோயில் கொள்கிறாள்.

ஒன்பது வயதில் அவள் பருவம் எய்தியது பற்றி ஆயர்குடிப் பெண்கள் பேசிக் கொள்கிறார்கள்.” இந்த மரம் எளிதில் தீப்பற்றும்” என்கிறாள் ஒருத்தி. (ப-20)

அப்படி தனிமையில் அமர்த்தப்பட்ட நிலையில்தான் ஒன்பது பிராயத்தள் ஆகிய ராதை குழந்தைக்  கண்ணனின் வருகையை அறிந்துஅவனைத் தேடி ஓடுகிறாள்.

நீலம்  பாகவதத்தின் நாவல் வடிவம் என்று ஆசிரியர் குறிப்பு காணப்படுகிறது. கண்ணன் குழந்தையாய் தவழ்ந்த குறும்புப் பொழுதுகள் விரிவாக விவரிக்கப்படுகின்றன.
ஆய்ச்சியர் ஒவ்வொருவர் கைகளிலும் கண்ணன் ஒவ்வொரு குழந்தையாக உரு மாறுகிறான் படித்துறை தோறும் பெயர் மாறும் நீல நதி பெருக்கு போல பற்றும் விறகின் பரிமளத்தை எழுப்பும் நீலத் தழல் போல. கணந்தோறும் ஒரு கண்ணன். கைகள் தோறும் ஒரு மைந்தன்“என்கிறார் ஜெயமோகன்.(ப-68)
பூதனை குறித்து தொன்மத்தில் சொல்லப்படும் செய்திகள் வேறு. வஞ்சனையின் வடிவமாகவே வார்க்கப்பட்டவள் அவள். ஆனால் நீலம் காட்டும் பூதனையோ தாய்மையின் பேருருவாய்த் திகழ்கிறாள்.
அவளைக் குறித்த அத்தியாயத்திற்கு பாலாழி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அவள் கரு கொண்டிருந்தபோது மனதில் கண்ணனைச் சுமந்து இருந்தாள் என்பதுபல ஒரு குறிப்பு மின்னல்வெட்டுப் போல வந்து போகிறது.
“பாலாழி அலை எழுந்து நுரை கொண்ட அவள் நெஞ்சில் பைந்நாகப் பாய் விரித்து பள்ளி கொண்டிருந்தான் அவள் மைந்தன்“(ப-82).
ஆண் குழந்தைகள் பிறந்ததும் கொல்லப்பட வேண்டும் என்ற கம்சனின் ஆணையால் குழந்தையை இழந்தவள் பூதனை என்றும் அந்த விநாடி முதல் அவள் சீற்றம் கொண்ட தெரிந்தால் என்றும் நீலம் அவளை காட்டுகிறது
எங்கே இளம் குழந்தைகளை கண்டாலும் ஓடிச்சென்று அள்ளிக்கொண்டு முலையூட்டும் பிடியாக அவள் சித்தரிக்கப்படுகிறாள்.
கம்சனின் அமைச்சன்  கிருதசோமன் அவளை மயக்கமுறச் செய்து முலையில் நஞ்சு தடவி ஆயர்குடி நோக்கி அனுப்புகிறான்.
நீலம் காட்டும் பூதனை கண்ணனை முலையார உண்பித்து அவனுடைய விஸ்வரூப தரிசனத்தையும் பெறுகிறாள். அந்த இறுதிக் கணத்தில் தன் மொத்த வாழ்வையும் மீண்டும் வாழ்ந்து வினைகள் எல்லாம் கரையப் பெறுகிறாள்.
அவள் முன் முலை அருந்தி நெளிந்தது. கைகால் வளர்ந்து காளையாகி எழுந்தது. வில்லேந்தி தேர் ஊர்ந்து முடிசூடி மனை வளர்ந்தது. ஆழியும் வெண் சங்கும் ஏந்தி அரங்கமைந்து அமர்ந்தது. வான் நிறைத்து வெளி நிறைத்து தான் நிறைத்து கடந்தது”(ப-86)
என்று குறமகள் கூற்றாக ஜெயமோகன் எழுதும் போது பாகவதக் களத்தில் இருந்தபடி பாரதம் முழுவதையும் பார்த்துவிடுகிறாள் பூதனை என்று புரிந்து கொள்கிறோம்.
பீஷ்மரின் அம்புப் படுக்கை நினைவுக்கு வருகிறது.
கைகளில் ஏந்தி வளர்த்த கண்ணன் காளையாய் வளர்ந்து ராதைக்கு யாதுமாய் ஆகிறான்.
ராதையை பெண் கேட்டு பலரும் வருகின்றனர். அவளோ கண்ணனுக்காக தாய்மையில் கனிந்தவள்.
 
“கன்னிப் பருவம் காணாமல் அன்னை என்றானாள். இனி மூதன்னையாகி முழுமை கொள்வாள்“என்று தோழி சம்பகலதை கேலி பேசுகிறாள்.(ப-148)
“மானிடர்க்குப் பேச்சுப்படில் வாழுகில்லேன் ” என்றாள் பெரியாழ்வார் பெண்ணாகிய கோதை.
என்னுள்ளம் விரிந்தமைய விண்ணிலும் வெளியில்லை அன்னையே” என்கிறாள் நீலம் காட்டும் ராதை. (ப-151)
கோபியர் ஆடைகளைக் கவர்ந்து நதியோரத்தில் கண்ணன் லீலை செய்த தினத்தில் இரவில் வீடு திரும்பும் ராதை பெற்றோர் பார்த்த வரனை மணக்க தயார் என அறிவிக்கிறாள்.
அப்படி அறிவித்துவிட்டு”நிலத்தமர்ந்து முழங்காலில் முகம் வைத்து நத்தை என இறுகிக்கொண்டாள்
என்கிறார் ஜெயமோகன்.(ப 157)
தன்னுள் அவள் ஆழ்ந்து போகும் போதெல்லாம் இந்தக் கோலத்தில் தான் அமர்கிறாள்.
இரண்டாம் அத்தியாயத்தில் இதே காட்சி முன்னரே விவரிக்கப்பட்டுள்ளது. தன் பிறப்பின் நோக்கத்தை தனக்குள் தேட அவள் தீவிரம் கொள்ளும்போது “தன்னுள் தானே நுழைந்து மீண்டும் ஒரு விதையாக ஆக விழைபவள் போல கால்களை மடித்து மார்போடு இறுக்கி கைகளால் வரிந்து முறுக்கி மூட்டுகளின் மேல் முகம் சேர்த்து அமர்ந்துகொண்டாள்“(ப-15).
கேள்வி எழுந்த போதும் விடையை எதிர்கொள்ள தயாராகும் போதும் ராதையின் அமர்ந்த கோலம் ஒன்றே போல் இருந்திருக்கிறது.
அபிமன்யு என்பவனோடு திருமணம் நடந்த பிறகும் அவள் உள்ளமும் உணர்வும் கிருஷ்ண மயமாகிக் காதலில் கனிகின்றன.
அதன்பின் ராதையின் செவிகளுக்கு மட்டும் ஓயாமல் கேட்கிறது வேய்குழல் நாதம். புகுந்தவீட்டிலும் பொருந்தாமல் கிருஷ்ணதவம் கொள்கிறாள். கண்ணனை வெளியே தேடியவள் தன்னுள் காணத் தொடங்கும் தருணத்தை ஜெயமோகன் துல்லியமாய் அவள் மொழியாகவே விவரிக்கிறார்.
எங்குளாய் நீ?  என் நெஞ்சுளாய். நிறைந்த கண்ணுளாய்.கருத்துளாய்.எங்கும் நீயே நின்றுளாய். இன்றென் நெஞ்சலர்ந்து காடாயிற்று நீ சூடும் தண்துழாய்:(ப-204)
கண்ணன் உடனான  கலவிப்பெருக்கில் படிந்து நீராடியபின் அவள் படிவமாகிறாள். கோயில் கொள்கிறாள்.கோயில் கொள்ளும் முன்பான அவளின் களிநடம் காளிநடமாய் களிகொள்கிறது. அந்த இடத்தில் பாரதியின் வரிகளைப் பொருத்தமாக எடுத்தாள்கிறார் ஜெயமோகன் (ப- 271)
கண்ணனின் பெயர் அழிந்த பின்னும் அரைக்கணம் வாழும் அவள் பெயர் என்று முன்னர் சொன்னதன் விரிவு இங்கே காணப்படுகிறது.
தன் உந்தி மலர்ந்த தாமரையில் உறைபவனைத் தொட்டான் பாற்கடலோன்.”எழுக காலம்” என்றான்.நான்முகமும் திகைக்க “ஆணை” என்றான்.தன் நாவிலுறையும் இறைவியிடம் சொன்னான் ,”எழுக சொல்!”.அவள் தன் கைதிகழ்ந்த வீணையிடம் சொன்னாள் “எழுக நாதம்”. அது தன் குடத்தில் உறைந்த இருளிடம் சொன்னது,”எழுக இன்மை!”. இன்மை எழுந்த இனிமை. இனிமை மலர்ந்த நாதம். நாதமாகிய சொல். “ராதை” ஆம் என்னிடம் சொன்னது காலம்“.(ப-271-272)
கம்ச வதம் முடித்து பாண்டவர் வசம் ஆட்சியை கொடுத்து ஆயர்குடி மீள்கிறார் அரசர் கிருஷ்ணர்.ராதையின் ஆலயம் செல்கிறார். வேய்குழல் வேண்டும் என்கிறார். அனைவ்ர்ம் அலைமோத தான் ஒளித்து வைத்திருந்த வேய்குழலைக் கொணர்ந்து தருகிறாள் ஒரு சிறுமி. அவள் பெயர் ராதை.கிருஷ்ணரின் ஆணைப்படி அனைவரும் விலகி சிறுமி ராதை மட்டும் ஒளிந்திருந்து வாய்பொத்தி சிரிப்படக்கிக் கேட்க, யாதவர் அரசியாம் ராதையின் சந்நிதியில் கண்ணன் குழலூதி நிற்கும் காட்சியுடன் நாவல் நிறைகிறது.
வெண்முரசு என்னும் பெரும் படைப்பின் அங்கமாய் விளங்கும் நீலம் நாவலில் கவின் ஒளிவீசும் அம்சங்கள் ஏராளம். நம் தேசத்தின் காவியங்களை நாம் எப்போதும் தத்துவங்களின் மடியில் அமர்ந்தே வாசிக்கிறோம்.
கண்ணெதிரே விரியும்பிரம்மாண்டமான திரைச்சீலையில் விதம் விதமாய் காட்சிகள் தோன்றும்போது நம் இருப்பை ஸ்திரப்படுத்துவது நம்மை தாங்கும் அந்த மடி தான்.

” விண்ணில் இருந்து நோக்கும் தெய்வங்களுக்கு கீழே விரிந்து இருக்கும் நதிகளும் மலைகளும் நாடுகளும் நகரங்களும் கொண்ட விரிநிலம், ஒரு பெரும் ஆடுகளம். அதைச் சுற்றி அமர்ந்து அவர்கள் சிரித்து அறைகூவியும் தொடை தட்டி எக்களித்தும், காய் நகர்த்தி களி கொண்டு விளையாடுகிறார்கள். கைநீட்டி காய் அமைக்கும் தெய்வத்தின் கரங்களுக்கு தெரிவதில்லை கீழே கண்ணீரும் குருதியுமாக கொந்தளித்து அமையும் மானுடச் சிறுவாழ்க்கை
” என்கிறார் ஜெயமோகன் (ப-39)கம்பர் இதையே “அலகிலா விளையாட்டு” என்கிறார்.” உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே”
இந்தச் சிறுவாழ்க்கை தனக்கென வாழப்படும் போது  பல அனுபவங்கள் கொடூரமானவையாகத் திகழ்கின்றன. அச்சம் சூழ்கிறது. அத்தகைய வாழ்வின் வலிகள் எத்தகையவை என்பதை முதுசெவிலி வாய்மொழியாக ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
 ” அஞ்சுபவன் உள்ளத்தில் ஐந்து பேய்கள் குடியேறுகின்றன பெண்களே.ஐயமும் தனிமையும் விழிப்பும் குரூர்மும் என அவற்றை அவன் அறிவான்.ஐந்து பேய்களையும் தேர்க்குதிரைகளாகக் கட்டி விரையும் ஆறாவது பெரும்பேய் குடியேறுகிறது. அதை ஆணவம் என்கின்றனர் சான்றோர்(ப-39)

இங்கே ஒன்றை நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். பாகவதக் கதைகளில் ராதை பற்றிய குறிப்பு பின்னால்தான் வருகிறது. எனவே ராதை என்கிற பாத்திரமே கற்பனையான இடைச்செருகல் என்று கொள்ளலாமா என்று ஓஷோவிடம் கேட்டார்கள்.

அதற்கு ஓஷோ,” அப்படி இல்லை. ராதை தான் என்கிற தன்மையே இன்றி கண்ணனுடன் முழுதாக ஒன்றிப் போனவள். அவளைத் தனியாக பிரித்தறிய சிறிது காலம் ஆனது” என்றார். இந்த எண்ணம் பாரதியிடமும் வெளிப்படுவதை எட்டயபுரமும் ஓஷோபுரமும் எனும் என் நூலில் விரிவாக குறிப்பிட்டு இருக்கிறேன்.

தன்பொருட்டு வாழும் வாழ்வில் அந்த ஐந்து குணங்கள் மனிதனை ஆட்டுவிக்கின்றன. ஆனால் ஒருவர் தானற்ற தன்மையில் இன்னொருவருக்கோ இன்னொன்றுக்கோ தன்னை ஒப்புக் கொடுத்து வாழ்கையில் தனிமையும் விழிப்பும் தவமாகின்றன. அப்படி தவத்தின் கனலாய்க் கனன்றவள் ராதை என்பதையும் அந்தத் தவமானது தான் எதைநோக்கித் தவம் செய்கிறோமோ அந்த நிலையான பொருளை விடவும் அரைக்கணம் அதிகம் வாழும் வல்லமையை அருளும் என்பதையும் காட்டுகிறது நீலம்.
ஜெயமோகனின் முதற்கனல் பற்றிய பத்து விமர்சனக் கட்டுரைகள்
————————————————————————————————————

http://marabinmaindanmuthiah.blogspot.in/2014/09/1.html

http://marabinmaindanmuthiah.blogspot.in/2014/09/blog-post_27.html

http://marabinmaindanmuthiah.blogspot.in/2014/09/3.html

http://marabinmaindanmuthiah.blogspot.in/2014/09/4.html

http://marabinmaindanmuthiah.blogspot.in/2014/09/5_26.html

http://marabinmaindanmuthiah.blogspot.in/2014/09/6.html

http://marabinmaindanmuthiah.blogspot.in/2014/09/7.html

http://marabinmaindanmuthiah.blogspot.in/2014/09/8.html

http://marabinmaindanmuthiah.blogspot.in/2014/10/9.html

http://marabinmaindanmuthiah.blogspot.in/2014/10/10.html

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *