யுவன் சந்திரசேகரின் சிறுகதைத் தொகுப்பாகிய “ஏமாறும் கலை” வாசித்துக் கொண்டிருந்தேன்.

 

சுவாரசியமான சிறுகதைகள். நுட்பமான சித்தரிப்புகள். சில இடங்களில் வெடித்துச் சிரிக்க வைக்கும் சம்பவங்கள்.

இறந்தவர்களின் ஆன்மா இறங்கும் மீடியமாக மீடியம் என்கிற சொல் புழங்காத ஒரு பகுதியில் குப்பம்மா என்கிற பெண் இதில் காட்டப்படுகிறார்.
எம்ஜிஆர் புதிதாக தொடங்கிய கட்சி சார்பாக
மாயத்தேவர் தேர்தலில் நிற்கும் போது எதிர்த்து நிற்கும் திமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்ய புறப்படுகிறார்கள்.
அந்த சைக்கிள் பேரணியை எதிர்கொண்டு வழிமறித்து நிற்கும் குப்பம்மாவுக்குள் இருந்து கரகரத்த குரலில் அண்ணாத்துரை அவர்களின் ஆன்மா பேசுகிறது.

“தம்பீ ! ஒங்காள் நிச்சயமா செயிப்பான்.பஹுடர் பூச்சுக்கு சனங்கள் ஏமாற மாட்டார்கள்”

குப்பம்மா மயங்கி சரிந்த பிறகு பரம்பரை காங்கிரஸ்காரர் ஆன சுப்பா ரெட்டியார்” நிச்சயம் இது அண்ணாத்தொரை இல்லை”இன்று சந்தேகத்தைக் கிளப்ப மறுநாள் தனிஸ்லாஸ் மாமா கூடுதலாக சில பாயிண்டுகளை எடுத்து விட்டார்.

“ஒன்று . செயிப்பான் என்று அண்ணா சொல்ல மாட்டார்- வெல்வான் என்று தான் சொல்வார். இரண்டாவது பஹுடர் என்று சொல்ல மாட்டார்- அரிதாரம் என்று தான் சொல்வார். மூன்றாவது அவர் காஞ்சிபுரத்துக்காரர்-மதுரை வட்டாரத் தமிழ் பேச மாட்டார்.
நாலாவது தான் இன்னும் முக்கியமானது- அவர் பகுத்தறிவுவாதி- குட்டையனின் விபூதிக்கு எல்லாம் அடங்க மாட்டார்”.

கேட்டுக்கொண்டிருந்த சுப்பாரெட்டியார் சொன்னார்.
“இன்னொரு விசயத்தை விட்டு புட்டியே தனுசு. அவங்கெல்லாம் மைக்க புடிச்சா மணிக்கணக்கா பேசக்கூடியவுக. இப்படித்தேன் ஒரு சொல்லுல நிறுத்திக்கிருவாகளாக்கும்.”

அருமையான வாசிப்பு அனுபவம் தருகிற இந்தச் சிறுகதைகள் ஒவ்வொன்றிலும் உத்தரவாதமாக ஒருவரோ  இருவரோ தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

புத்தகத்தின் தலைப்பைக் கூட ஏமாறும் கலை என்பதற்கு பதிலாக “தற்கொலை செய்து கொள்ளும் கலை” என்று வைத்திருக்கலாம்.

சொல்லப்போனால் வாழ்க்கையில் தற்கொலை பற்றி ஒரு முறையாவது எண்ணிப் பார்க்காதவர்கள் மிகவும் குறைவு.

கிண்டர் கார்டன் தொடங்கி ஏழாம் வகுப்பு வரை மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தேன்.
13 பாடங்கள் இருக்கும்.

அவ்வளவு சுமைகளையும் ஏழாம் வகுப்பு வரை தாக்குப் பிடித்ததே அங்கிருந்த ஆசிரியைகள் கருணையால்தான்

அந்தப் பள்ளியில் ஆசிரியைகளை ஆன்ட்டி என அழைக்கப் பழக்கியிருந்தார்கள்.
தமிழாசிரியை கூட தமிழ் ஆன்ட்டி தான்.

நான் படிப்பில் மட்டும் தான் மந்தமே தவிர ஆன்ட்டிகளின் செல்லப்பிள்ளை.

எப்படியாவது கல்வியாண்டு முடிவில் அடுத்த வகுப்புக்கு வழி அனுப்பி வைத்து விடுவார்கள்.

ஆனாலும் பாடச் சுமை அதிகம் என்பதால் மாநில பாடத்திட்டம் நடைமுறையில் இருந்த வேறொரு புகழ்பெற்ற பள்ளிக்கு மாறினேன்.

அங்கு மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். ஒவ்வொரு வகுப்புக்குமே நான்கு ஐந்து பிரிவுகள் இருந்தன.

எட்டாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்புக்கு எட்டி குதித்து விட்டாலும் ஒன்பதாம் வகுப்பில் பாச்சா பலிக்கவில்லை..

நான் முன்னர் படித்த அதே பள்ளியிலிருந்து அதே காரணங்களுக்காக இந்தப் பள்ளிக்கு மாறி வந்தவர்களில் என்னுடைய நண்பன் ஜெய்சங்கரும் ஒருவன். அவனுடைய தந்தை புகழ்பெற்ற மருத்துவர்

இருவரும் ஒரே மாதிரியாக பள்ளியிலிருந்து மாறி வந்தது போலவே ஒரே மாதிரியாக ஒன்பதாம் வகுப்பில் திணறிக் கொண்டிருந்தோம்.

அப்போதைய காலகட்டத்தில் ஒரு நாள் மதிய உணவு இடைவேளையின் போது ஜெய்சங்கர் எனக்கு மட்டும் கேட்கும் விதமாக இந்த அறிவிப்பைச் செய்தான்.

“டேய் ! நான் பாஸ் ஆகிறது சந்தேகம்தான். பெயில் ஆயிட்டா சூசைட் பண்ணிக்குவேன். நீயும் பாஸ் ஆகுற மாதிரி தெரியல. அதனால நீயும் என் கூட ஜாயின் பண்ணிக்கலாம்”

“துணையோடு அல்லது நெடுவழி போகேல்” என்று படித்து இருப்பானோ என்னவோ.

தேர்வு முடிவுகள் வெளி வருவதாக அறிவிக்கப்பட்ட தேதிக்கு முதல் நாளே பள்ளியில் முடிவுகள் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு விட்டன.

நான் வீட்டுக்குத் தெரியாமல் ரகசியமாக பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிரில் ரமேஷ் பாபு வந்தான். அவன் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

அவனோடு துணைக்கு வந்த அவன் அண்ணன் என்னைப் பார்த்து உற்சாகமாக ” நீ ஃபெயில்” என்றார்.

அவருடைய உற்சாகத்துக்கு காரணம் சில ஆண்டுகள் முன் எஸ்.எஸ்.எல்.சி ஃபெயில் ஆகி வேலை தேடிக் கொண்டிருந்தார்.

நான் வீட்டில் விஷயத்தைச் சொல்லவில்லை

அன்று இரவு பாட்டிக்கு துணையாக ஒரு நாள் பயணமாக ஊருக்கு செல்ல வேண்டி இருந்தது.

திருக்கடையூரில் வீட்டில் ஒவ்வொரு விசாகத்துக்கும் வேல் பூஜை நடக்கும். அந்த நாளில் வெளியூரில் இருக்க நேர்ந்தாலும் தாத்தா பாட்டி இருவருமோ  ஒருவரோ அந்த ஒரு நாள் மட்டும் ஊருக்கு போய் பூஜை செய்து விட்டு திரும்புவது வழக்கம்.

சத்தம் இல்லாமல் ஊருக்கு கிளம்பிப் போனேன். ஜெய்சங்கரும் ஃபெயில்தான்.

அவன் எடுத்த முடிவு பற்றி யோசிக்கும் போதே திருக்கடையூரில் ஆனைகுளம் பூசை குளம் என இரண்டு குளங்கள் இருப்பது ஞாபகத்துக்கு வந்தது.

கோவையில் வீட்டுக்கு அருகே வாலாங்குளம் இருப்பதும் சேர்ந்து நினைவுக்கு வந்தது.

ஊர் போய் திரும்பியதும் வீட்டுக்கு வந்தால் வீடு மெளனமாக இருந்தது.
” அவனை யாரும் எதுவும் சொல்லக்கூடாது” இந்த தாத்தாவின் உத்தரவுக்கு மொத்த குடும்பமும் கட்டுப்பட்டிருந்தது.

மறுபடியும் பள்ளி திறந்த பிறகு அதே ஒன்பதாம் வகுப்பில் அதே ஜெய்சங்கரும் நானும் பக்கம் பக்கமாக அமர்ந்திருந்தோம்.

அந்த ஆண்டு கவனமாக படிக்க வேண்டியது அவசியத்தை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி எங்கள் இருவரையும் அழைத்து அறிவுறுத்தினார்.

அன்று மதிய உணவுக்குப் பிறகு ஜெய்சங்கரை தேடிப் போனேன். சாப்பிட்டு முடித்து விட்டு சூயிங்கம் மென்று கொண்டிருந்தான்.

“ஏன்டா ! ஃபெயில் ஆனா சூசைட் பண்ணிக்குவேன்னு சொன்னியே என்ன ஆச்சு”விளையாட்டாக கேட்டேன்.
என்னை நிமிர்ந்து உற்றுப் பார்த்தவன் மெல்லிய குரலில் கேட்டான்,”நான் ஏன் சூயிங்கம் சாப்பிடறேன் தெரியுமா?”

அவனே பதிலும் சொன்னான்.”சூயிங்கம் நிறைய சாப்பிட்டா கேன்சர் வரும்னு ரீடர்ஸ் டைஜஸ்ட்ல படிச்சேன். அதுக்காகத்தான் ”

சொன்னதோடு அவன் நிறுத்தி இருக்கலாம்.

தன் ஜியாமெட்ரி பாக்சை திறந்து ஒரு சூயிங்கம் எடுத்து என்னிடம் நீட்டினான்.
” இந்தா! நீயும் டெய்லி ஒன்னு சாப்பிடு”!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *