கனவுகள் பருகிய கண்களுக்குக்
காரிய வீரியம் வரவேண்டும்!
மனதினில் மழைவிழும் தருணத்திலே
முயற்சியின் விதைகள் எழவேண்டும்!
காலத்தின் சுழற்சிகள் நிற்பதில்லை
கடுங்குளிர் நடுவே தைபிறக்கும்!
வேலைகள் தொடங்கி நடத்துகிற
விபரம் இருந்தால் வழிபிறக்கும்!
முன்னோர் பழமொழித் தூண்களிலே
முட்டுக்கொடுத்தே நிற்காதே
சொன்ன மொழிகளின் பொருளறிந்து
செயலாய் மாற்ற மறக்காதே
வார்த்தைகள் விதையாய் விழும்போது
வாழ்க்கை முளைவிடும்; வளர்த்துவிடு;
பார்த்தவை கேட்டவை உரமாகும்
பூக்களை உனக்குள் மலர்த்திவிடு.




