21.09.2013. திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் “மண்வாசனை” கூட்டத்தில் கவியரசு கண்ணதாசன் குறித்து உரை நிகழ்த்தப் போயிருந்தேன்.மண்வாசனையை எழுப்பும் விதமாய் மழை வெளுத்து வாங்கியது.கூட்ட அரங்கில் மேடைக்கு இடதுபுறம்நெடிய்துயர்ந்த மரமொன்றின் நிமிர்வுக்கு வாகாய் இடம்விட்டுக் கட்டியிருந்தார்கள்.

அந்த மரத்தை சுட்டிக்காட்டி திரு.இல.கணேசன் என்னிடம் சொன்னார்:
“இந்த மரம் பாரதியார் காலத்திலிருந்தே இருக்கிறது”என்று. பாரதி பார்த்த மரம்.பாரதியைப் பார்த்த மரம் என்ற எண்ணம் மனதை மலர்த்தியது. பாரதியுடன் ஒரேவீட்டில் வாழ்ந்த உயிரல்லவா அது!!

மேடையில் பேசும்போது குறிப்பிட்டேன்.”பாரதி வாழ்ந்த வீட்டில் கூட்ட அரங்குக்குப் பக்கத்தில் இந்த மரம் இருப்பதில் ஒரு பொருத்தம் இருக்கிறது.இந்த மேடையில் ஏறிப் பேசுபவர்கள், வெறும் வாய்ச்சொல் வீரர்களாக இருந்துவிட்டால்,தாங்கள் சொல்வதில் தங்களுக்கே நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தால்,இந்த நெடிதுயர்ந்த மரத்தின் கிளைகள் ஆகாயத்தில் இருக்கும் பாரதிக்கு சேதி சொல்லும்..”பாரதி! நெட்டை மரங்களென நின்று புலம்பினார்…பெட்டைப் புலம்பல்” என்று  .

அங்கிருந்து தஞ்சைக்குப் போய் வெற்றித்தமிழர் பேரவையின் பாபநாசம் ஒன்றிய அமைப்பாளர் திரு.பரமகுரு இல்லப் புதுமனை புகுவிழாவுக்கு கவிஞர் வைரமுத்து அவர்களுடன் ஆவூர் சென்றேன்.ஊரெல்லைக்குள்
நுழையும்போது கவிஞர் கேட்டார்,”முத்தையா! ஆவூர் மூலங்கிழாரின் ஊர் இந்த ஆவூர் தானா?”என்று.உள்ளூர்ப் புலவர் ஒருவர் அதனை உறுதி செய்தார்.மேடையில் அமர்ந்தபிறகு, “கவிஞர்! நீங்கள் சொன்னது சரிதான்”என்றேன்.

“கிழார்” என்று பெயர் கொண்டவர்கள் பெரும்பாலும் சோழதேசத்துப் புலவர்கள்தான்.அதனால்தான் கேட்டேன்”என்றார் அவர்.

பாரதி பார்த்த மரம்,ஆவூர்க்கிழார் வாழ்ந்த மண் ஆகியவற்றின் அண்மையும் நெருக்கமும் சொல்லத் தெரியாத-சொல்லித் தெரியாத பரவசத்தைத் தந்தது.
இருந்தும் சொல்லப் பார்க்கிறேன்…

வானத்தையே முட்டிப்பார்க்க வளர்ந்தமரம் தவிக்கும்-அதை
வருடித்தந்த பாரதியின் விரல்தடமும் இருக்கும்
கானத்தையே உறிஞ்சிகிட்டு கிளம்பிவந்த வீரம்-அட
கவிஞன்பேரைச் சொன்னதுமே இலையில்சொட்டும் ஈரம்

பசிய இலை படபடக்க பாட்டுச்சொல்லியிருப்பான் -அவன்
பட்டபாட்டை சொன்னபடி பசியில்தூங்கி இருப்பான்
நிசியினிலே கண்முழிச்சு நடந்திருப்பான் பாவம்-அட
நாக்கிருந்தா இந்தமரம் நூறுகதை கூறும்

ஆடிப்பாடி திரிஞ்சதெல்லாம் அந்தமரம் அறியும்-அந்த
ஆனைதள்ளி விட்டகதை அதுக்குத்தானே தெரியும்
வாடிநின்ன விருட்சத்துக்கு நிழல்கொடுத்த மரமே-ஒன்
வேருக்குள்ளே ஊறுவதும் அவன்கவிதை ரசமே

எங்கபுலவன் விரல்தடத்தை பார்த்துப்புட்டு போறேன் -ஒரு
சங்கப்புலவன் கால்தடத்தைத் தேடிப்பார்த்து வாரேன்
தங்கம் ஒண்ணை தந்துபுட்டு தூங்குதய்யா ஊரு-அந்தத்
தமிழன்வாழ்ந்த குடிசையெங்கே?சொல்லுறது யாரு?

கால்தடமோ விரல்தடமோ கண்ணில்தெரியாது–அட
காலத்தில் பதிச்சதடம் அழிக்க முடியாது
நூல்வடிவம் எடுத்தவர்க்கே நிரந்தரமா இருப்பு- அதில்
நல்லதமிழ் தந்தவர்க்கே நிலவு போல ஜொலிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *