பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டிருந்த அந்த விழாப் பந்தலின் முன்வரிசையில், புன்னகை மாறாத முகத்துடன்,வருபவர்களை வணங்கிக் கொண்டும்,வணங்குபவர்களை வாழ்த்திக் கொண்டும் இருந்தார் அந்தப் பெரியவர்.அவருடைய பிறந்தநாளை அர்த்தமுடன் கொண்டாடும் விதமாக,அவர்தம் குடுபத்தினர் ராயவரம் சு.கதி.காந்தி மேனிலைப்பள்ளிக்குஒன்றரை கோடிரூபாய்கள் மதிப்பில் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்திருந்தார்கள்அந்தக் கட்டிடங்களின் திறப்புவிழா நிகழ்ச்சி அது..அந்தப் பெரியவரின் பெயர் திரு. எம்ஏஎம்.சுப.பழனியப்பச் செட்டியார்.அவர் வயது 100  !

யாருடைய உதவியுமின்றி நிற்பதும் நடப்பதும் கூட ஆச்சரியமில்லை.மிகுந்த தெளிவும் நுணுக்கமும் தேவைப்படும் பங்கு வர்த்தகத்தில் இன்றளவும் அவர் உற்சாகத்துடன் ஈடுபடுகிறார்.

புதிய கட்டிடங்களின் திறப்புவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம்,தியாகராசர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கருமுத்து.திரு.தி.கண்ணன்,
கோவை பாரதீய வித்யா பவன் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்,ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.

முக்கிய விருந்தினர்கள் ஒவ்வொருவராய் பந்தலுக்குள் நுழைய,குறித்த நேரத்தில் மத்திய அமைச்சர் வந்து விடுவார் என்ற தகவல் பரவியது.அமைச்சர் வருவதற்குள் அந்தப் பள்ளியின் சுவாரசியமான வரலாற்றைப் பார்த்துவிடுவோம். சு.கதி.காந்தி மேனிலைப்பள்ளி வைரவிழா கண்டது.இந்தியா சுதந்திரம் பெறும் முன்னர் ராயவரம் திரு.சு.கதிரேசன் செட்டியார் என்பவர் காந்தி பெயரில் ஒரு பள்ளி தொடங்க விரும்பினார். அப்போதிருந்த ஆங்கிலேய அரசு,காந்தி பெயரில் பள்ளி தொடங்கத் தடை விதித்தது.உடனே தன் பெயரின் முதல்பகுதியையும் முதலெழுத்தையும் இணைத்து, தன் பேரனின் பெயர் காந்தி என்று வாதாடி சுகதி.காந்தி மேல்நிலைப்பள்ளி தொடங்கினாராம் அந்தப் பெரியவர்.
மூத்த புதல்வர் திரு.பி.எல்.சுப்பிரமணியம்
பள்ளித் தலைமையாசிரியரின் வரவேற்புரையோடு விழா தொடங்கியது. பழனியப்பச் செட்டியார் அவர்களின் புதல்வரும் கோவையின் பிரபல தொழிலதிபருமான திரு.பி.எல்.சுப்பிரமணியன் நூற்றாண்டு விழா தொடர்பான அறக்கட்டளை குறித்தும் அறப்பணிகள் குறித்தும் அறிமுகவுரை நிகழ்த்தினார்.தன் தந்தையாரின் எளிமை,குணநலன்கள்,விருந்தோம்பல் பண்பு, வயதுக்கும் அப்பாற்பட்ட சுறுசுறுப்பு ஆகிய பண்புகள் பற்றிக் குறிப்பிட்ட அவர், கோவையில் தான் வசிக்கும் வீட்டினை தன் காலத்திற்குப் பிறகு விற்று அந்தத் தொகையை அறக்கட்டளையில் சேர்க்கும் விதமாய் ஏற்பாடுகள் செய்திருப்பதாக அறிவித்தார்.அந்த வீட்டின் மதிப்பு பலகோடி ரூபாய்கள்!!
விழாவில் உரையாற்றிய மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.ப.சிதம்பரம், “இதுவரை பல நிறுவனங்கள்,அமைப்புகள்,இயக்கங்கள் ஆகியவற்றின் பங்கேற்றிருக்கிறேன்.ஆனால் ஒரு மனிதர் வாழ்வாங்கு வாழும்போதே அவருடைய நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது இதுவே முதல்முறை.இங்கிருக்கும் பலருக்கும் இதுவே முதல்முறையாக இருக்கும்.குறிப்பாக இங்கிருக்கும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள்.
விழா நாயக்ர் திரு.பழனியப்பச் செட்டியார் அவர்களிடம், அவருடைய வாழ்க்கை முறை குறித்துக் கேட்டேன்.அவர் எவ்வித மருந்துகளையும் உட்கொள்வதில்லையாம்.தினமும் காலையில் ஒருமணிநேரம்,மாலையில் ஒருமணிநேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வதுதான் தன் ஆரோக்கியத்தின் அடிப்படை என்கிறார்.யாரையும் மனம்நோகவோ மரியாதைக்குறைவாகவோ பேச மாட்டேன்,எனக்கு உடன்பாடில்லாத கருத்தினை யாராவது சொன்னால் அங்கிருந்து நகர்ந்து விடுவேன் என்கிறார்.இவையெல்லாம்தான் இவருடைய ஆரோக்கியத்தின் அடித்தளங்களாக இருக்க வேண்டும்.செல்வத்துப் பயனே ஈதல் என்பதற்கேற்ப அவரும் அவர்தம் வழித்தோன்றல்களும் பல அறக்கொடைகளை வழங்கி வருகிறார்கள்”என்று தன் பாராட்டு மொழிகளைப் பாங்குடன் பதிவு செய்தார்.

அடுத்துப் பேசிய தியாகராஜர் கல்வி நிறுவனங்களின் தலைவரும் மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் ஆலய அறங்காவலருமான கருமுத்து.திரு.தி.கண்ணன்,”ஆரோக்கியம் குறித்து அதீத அக்கறை கொண்டிருக்கும் எத்தனையோ மருத்துவர்கள் கூட நூறாண்டுகள் வாழ்ந்ததில்லை.வாழ்க்கை முறையாலும் விரிந்த மனப்பாங்கினாலும் “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்”என்ற குறளுக்கு பெரியவர் தன் வாழ்க்கை முறையால் உரையெழுதிக் கொண்டிருக்கிறார். ஈகைப்பண்பை உயிருக்கான ஊதியம்  என்கிறார் திருவள்ளுவர்.ஒரு மனிதன் தன் உயிருக்குக் குறைந்தபட்ச ஊதியமாவது வழங்க வேண்டுமென்று சொன்ன ஒரே சிந்தனையாளர் திருவள்ளுவர்தான்.அந்தப் பெரும்பணியை திரு.பழனியப்பச் செட்டியார் குடும்பத்தினர் மிகச் செம்மையாக செய்து வருகிறார்கள்” என்றார்.
கோவை பாரதீய வித்யா பவன் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்,”பெரியவர் பழனியப்பச் செட்டியார் அடிமை இந்தியாவில் 34 ஆண்டுகள் வாழ்ந்தவர். மிகப்பெரிய கால மாற்றங்களைக் கண்கொண்டு காணும் அனுபவக் களஞ்சியமாகத் திகழ்கிறார்.அவரை வாழ்த்துகிற வயது இங்கிருக்கும் யாருக்கும் இல்லை.எனவே நாம் பேசுவதற்கு பதிலாக அவரைப் பேசவிட்டு நாம் அனைவரும் கேட்க வேண்டும். கல்விமுறை மாறினால் பல நல்ல மாற்றங்கள் வரும்.இவருடைய வாழ்க்கை அனுபவங்கள் புத்தகமாக வெளிவந்து பாடமாக வேண்டும்.தன் வாழ்க்கைமுறையை சீராக அமைத்துக் கொண்டால் ஒரு மனிதர் நூறாண்டு கடந்தும் வாழ முடியும் என்பதற்கு பெரியவர் கண்கண்ட உதாரணமாகத் திகழ்கிறார்” என்றார்.

இப்போது என் முறை., “நம்நாட்டில் கலைமகளுக்கு மட்டும் கோயில்கள் மிக அரிதாகவே உள்ளன.ஏனெனில் கோயில் என்பது ஓர் எல்லைக்குள் கடவுளை நிலைநிறுத்தும் ஏற்பாடு. கல்விக்கு எல்லையே இல்லை என்பதால் கலைமகளுக்குக் கோயிலே இல்லை. இதுபோன்ற கல்வி நிறுவனங்கள்தான் கலைமகளுக்கான கோயில்கள்.விழாமேடையில் பெரியவர் பழனியப்பச் செட்டியார் அவர்களின் தம்பி அமரர் காசி அவர்களின் புதல்வர் திரு.இலட்சுமணன் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்.அப்போது அவர் சுவாரசியமான தகவல் ஒன்றைச் சொன்னார்.
திருச்சியில் வசித்து வந்த திரு.காசி அவர்கள் தன் சகோதரர் பழனியப்பச் செட்டியாருக்கு மாம்பழம் ஒன்றை அனுப்பினாராம்.இவர் தம்பிக்கு ஃபோன் செய்து,”என்ன தம்பி! ஒரு பழம் அனுப்பியிருக்கிறாய்”என்று கேட்க,”அண்ணா! இங்கே நம் வீட்டுத் தோட்டத்திலுள்ள மாமரம் ஒன்றில் இரண்டு கனிகள் பழுத்தன.ஒன்று உங்களுக்கு இன்னொன்று எனக்கு” என்றாராம்.சகோதர பாசத்திற்கும் சரியான இலக்கணமாய் இந்த சம்பவம் திகழ்கிறது.

நூறாண்டுகள் வாழும் ஒருவரைக் காணச் செல்கையில் என்ன சொல்வது என்பதற்கு வைணவ மரபில் ஒரு வார்த்தை உண்டு.வடகலை மரபில் வேதாந்த தேசிகரும் தென்கலை மரபில் மணவாள மாமுனியும் நூறாண்டுகள் வாழ்ந்தனர். அவர்களைக் காணச் சென்றவர்கள் “இன்னுமொரு நூற்றாண்டு இரும்” என்று வணங்கிக் கூறினர்.

“நானிலமுந் தான்வாழ நான்மறைகள் தாம்வாழ
மாநகரின் மாறன் மறைவாழ-ஞானியர்கள்
சென்னியணி சேர்தூப்புல் வேதாந்த தேசிகனே!
இன்னுமொரு நூற்றாண் டிரும்”
என்ற பாடலும்,
“அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ-கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ மணவாள மாமுனியே
இன்னமொரு நூற்றாண் டிரும்”
என்ற பாடலும் இதையே உணர்த்துகின்றன. அதேபோல நூற்றாண்டு காணும் பெரியவர் திரு.பழனியப்பச் செட்டியார் அவர்களை “இன்னுமொரு நூற்றாண்டு இரும்” என்று வணங்கி அவர்தம் ஆசிகளைப் பெறுவோம்” என்றேன்.
விழாநாயகரின் இளைய புதல்வர் திரு.பி.எல்.நாகப்பன்   நன்றி நவின்றார். விழ நிகழ்ச்சிகளை குழந்தைக் கவிஞர் திரு.அழ.வள்ளியப்பா அவர்களின் புதல்வி திருமதி தேவி நாச்சியப்பன் தொகுத்து வழங்கினார்.
வந்திருந்த அனைவருக்கும் அளிக்கப்பட்ட அறுசுவை விருந்தில் பல்லாயிரக்க்ணக்கானவர்கள் சாப்பிடும் பந்தி முழுவதும் பேரனின் தோளில் கைபோட்டு நடந்து பந்தி விசாரணை செய்த பெரியவர் திரு.பழனியப்பச் செட்டியார்,
திரு.பழனியப்பச் செட்டியார் குடும்பத்தினர்
சில நாட்களுக்குப்பின் நடைபெற்ற கனகாபிஷேக வைபவத்தில் கலந்து கொள்ள வந்திருந்த ஏழாயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கும் சளைக்காமல் சலிக்காமல் திருநீறு பூசி ஆசீர்வதித்திருக்கிறார்.

இந்தப் பரபரப்பான யுகத்திலும் நெறியான வாழ்வாலும் சரியான மனப்பான்மையினாலும்   வாழ்வாங்கு வாழ முடியும் என்ப்தை உணர்த்தும் பெரியவர் திரு.பழனியப்பச் செட்டியார் அவர்கள் போற்றத்தக்கவர் மட்டுமல்ல…பின்பற்றத்தக்கவரும் கூட.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *