“எப்போ வருவாரோ”
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பாக கடந்த சில ஆண்டுகளாகவே கோவையில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஆன்மீகத் தொடர் நிகழ்ச்சி .இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் 14 வரை ஆன்மீக அருளாளர்கள் குறித்து அறிஞர்கள் பலர் உரை நிகழ்த்தினார்கள். ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு ஆன்மீக அதிர்வுகளில் லயிப்பார்கள்.

ஒவ்வோர் ஆண்டும்,உரைகளின் ஒலிப்பதிவு வேண்டுவோர்,ஒரு சிறு தொகை செலுத்தினால் குறுந்தகடுகள் அவர்கள் இல்லம் தேடி வரும்.இந்தத் தொகை ஒரு தொண்டு நிறுவனத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது.இத்தனை ஆண்டுகளாக எப்போ வருவாரோ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் பங்கேற்று வந்தாலும்,குறுந்தகடுகள் உருவாக்குவதற்கான செலவுகள் போக,மீதத்தொகை தொண்டு நிறுவனங்களுக்குத் தரப்பட்டு வருவதாய் தவறாக நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் குறுந்தகடு வாங்குபவர்கள் சும்மா வாங்கக்கூடாது என்பதற்காக தொகை பெறப்படுகிறதே தவிர,அந்தத் தொகை அப்படியே தொண்டு நிறுவனத்திற்கு தரப்படுகிறது என்பதை அறிந்து   அதிசயித்தேன்.

இந்த ஆண்டு குறுந்தகடு பதிவுகள் வழி வந்த ஒரு இலட்சத்து இருபதாயிரத்து சொச்சம் ரூபாய்களும்  தோழர் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. பத்தாண்டுகள் முன்னர் தொடங்கப்பட்ட தோழர் அறக்கட்டளை,அரசு மருத்துவமனையில் மரணமடைகிறவர்களின் கேட்பாரற்ற சடலங்கள்,சாலையோரங்களிலும் விபத்துகளிலும் அடிபட்டுச் சாகிற அனாதை பிணங்கள் ஆகியவற்றை உரிய இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்கிற அறப்பணிகளை ஆர்வமுடன் செய்கிறது.
இதுவரை இரண்டாயிரம் பிணங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.இந்த அறக்கட்டளையை நான்கு நண்பர்கள் சேர்ந்து தொடங்கியுள்ளனர். “நாலு பேருக்கு நன்றி-அந்த நாலு பேருக்கு நன்றி” என்ற பாடலின் நாயகர்களே இவர்கள்தானோ என்று எண்ணத் தூண்டும் அந்த நண்பர்கள்,திரு.சாந்தகுமார்,திரு.ஜீவானந்தம்,திரு.அண்ணாத்துரை,திரு. சம்பத்குமார் ஆகியோர்.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் திரு.கிருஷ்ணன் அவர்களிடமிருந்து தோழர் அறக்கட்டளை சார்பில் திரு.சாந்தகுமார் மேடைக்கு வந்து அந்தத் தொகையைப் பெற்றுக் கொண்டார்.
இந்த நண்பர்கள் பகுத்தறிவு இயக்கத்தை பின்புலமாகக் கொண்டவர்கள்.”எப்போ வருவாரோ” நிகழ்ச்சியோ,பக்தர்களின் சங்கமம். ஆனாலும் தொண்டின் தகுதியறிந்து திரு.கிருஷ்ணன் செய்த இந்த உதவி எல்லோரையும் நெகிழச் செய்தது.
விழாவின் நிறைவில் திரு.சாந்தகுமாரை சந்தித்த சிலர்”உங்கள் தொண்டு சிறக்கட்டும்” என்று வாழ்த்தினர்.பதறிப்போன திரு.சாந்தகுமார்,”இந்தத் தொண்டு சிறக்கக் கூடாது. அனாதையாக யாரும் சாகக் கூடாது” என்றார்.சிகிச்சை பலனளிக்காமல் கைவிடப்பட்டவர்கள் எவ்வளவு பேர் என்றாலும் அவர்கள் அனாதைகள் என்றால் நாட்கணக்கிலோ,வாரக்கணக்கிலோ மாதக்கணக்கிலோ இறுதிவரை பராமரித்து அடக்கம் செய்ய ஓர் இல்லத்தைத் தொடங்குவது தன்  நோக்கம் என்கிறார் சாந்தகுமார். அதற்கும் திரு.கிருஷ்ணன் உதவுவதாக வாக்களித்திருக்கிறார்.
திரு.கிருஷ்ணன் அவர்களுக்கு அவையினரின் நன்றிமடல்
காரேறச் சென்ற திரு.கிருஷ்ணனுக்கும் திரு.சாந்தகுமாருக்கும் ஏதோ உரையாடல் நிகழ்வதை அறிந்து,அருகில் சென்று கவனித்தேன்.”எங்கள் அறக்கட்டளைக்கு 80 ஜி வரிவிலக்கு உண்டு. நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாமே” என்றார் திரு.சாந்தகுமார். “ஏங்க! பொதுமக்கள் பணத்தை அவங்க கிட்டே வாங்கி உங்ககிட்டே கொடுத்திருக்கேன்.அதுக்கு நான் எப்படி 80 ஜி வாங்க முடியும்”என்றார் திரு.கிருஷ்ணன்.”என்ன மாதிரியான மனிதர்கள்” என்று நெகிழ்ந்து, “முன்மாதிரியான மனிதர்கள்”என்று மகிழ்ந்து அங்கிருந்து மெல்லக் கிளம்பினேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *