மும்பை விமான நிலையத்தில் குடியேற்றம் பகுதியில் இருந்த இளம் அலுவலர், என் கடவுச்சீட்டைப் பார்த்தபடி, “விஸா ஆன் அரய்வல்?” என்று கேட்டார். நானும் ஆமென்று சொன்னேன். ஆனால் மொரீஷியஸில் இந்தியர்களுக்கு விஸா தேவையில்லை என்று அங்கே சென்ற பின்தான் தெரிந்தது.

என்னை அழைத்திருக்கும் மகாத்மா காந்தி நிறுவனம் எவ்வளவு செல்வாக்குள்ள நிறுவனம் என்று மொரீஷியஸில் இறங்கி சில நிமிடங்களிலேயே புரிந்தது.அவர்களின் கடிதத்தைக் காண்பிட்தவுடன் குடியேற்றம் பகுதியில் தொடங்கி, சுங்க இலாகா வரை எல்லோருமே மரியாதையுடன் வழியனுப்பினர் MGI என்ற சொல் மந்திரம் போல் வேலை செய்தது.

விமான நிலைய வாயிலில் பல்வேறு ஓட்டுநர்கள் கைகளில் பெயர்ப்பலகையுடன் நடத்திய பிரம்மாண்டமான அணிவகுப்பு மரியாதையை கம்பீரமாகப் பார்வையிட்டேன்.ஒன்றில் கூட என்பெயர் இல்லை.பேராசிரியர் ஜீவேந்திரனை நான் பார்த்ததும் இல்லை. ஒருவேளை விமானநிலையத்துக்குள் காத்திருக்கிறாரா என்று பார்க்க உள்ளே வந்தேன்.குறுந்தாடியும் கழுத்துப் பட்டியுமாக ஒருவர் வேகவேகமாய் உள்ளே வந்தார்.”இவர்தான் ஜீவேந்திரன்”என்று பட்சி சொல்லியது. “வணக்கம்” என்ற என் குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினார்.உற்சாகமாய் வரவேற்றவருடன் வெளியே வந்தேன். என் எடை தெரியாததாலோ என்னவோ,எதற்கும் இருக்கட்டுமென்று எட்டுப்பேர் அமரக்கூடிய வேன் ஒன்றை அனுப்பியிருந்தார்கள்.

பரிசுக்குலுக்கலில் குலுக்குவது போல் வேன் குலுக்கி எடுக்க,
விமானக் களைப்பும் சேர்ந்து கொள்ள அரை மயக்கத்தில் பயணம் செய்தேன். “மதிய உணவு வேண்டாம்”என்றதும் பேராசிரியர் குழம்பினார். மகாத்மா காந்தி நிறுவனம் என்பதால் உண்ணாவிரதம் ஏதும் தொடங்கிவிட்டேனோ என்கிற கலக்கம் அவருக்கு. அறைக்கு வந்து சேரும்போது மதியம் ஒன்றரை மணியிருக்கும்.நிறுவன வளாகத்திலேயே உள்ள அதிதியன் விருந்தினர் விடுதியில் அறை.  “மூன்று மணிக்குத் தயாராகி விடுவீர்களா” என்று தயக்கத்துடன் கேட்டு விடைபெற்றார் ஜீவன்.

அறையைக் கூட சரியாய்ப் பார்க்காமல் படுக்கையில் விழுந்தவனை பட்சி மிகச்சரியாய் இரண்டரை மணிக்குஎழுப்பி விட்டது. குளித்துத் தயாராகி வெள்ளை வேட்டி சட்டையில் வந்தமர,பேராசிரியர் கதவைத்தட்ட சரியாக இருந்தது.(பதிவின் இந்தப் பகுதியை வழங்குவோர்,ராமராஜ் வேஷ்டிகள் சட்டைகள் மற்றும் வேட்டிக்கான பிரத்தியேக வெள்ளை பெல்ட்டுகள்).

அருகிலேயே தமிழ்க்கோயில்களின் கூட்டமைப்பு வளாகம் இருந்தது. பசிய புல்பரப்பின் நடுவே அழகான திருவள்ளுவர் சிலை. அருகிலேயே விழா அரங்கம்.பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் அருகே வந்து வரவேற்றனர்.அரங்கிற்குள் நுழைந்தால் இன்ப அதிர்ச்சி.பேரூராதீனத்தைச் சேர்ந்த சைவப்பற்றாளர் திரு.ஜெயப்பிரகஷ் மற்றும் சிரவையாதீனம் திரு.ஜெகந்நாத ஓதுவார் உட்பட சில ஓதுவாமூர்த்திகளும் வாத்தியக் கலைஞர்களும் வந்திருந்தனர்.

மொரீஷியஸ் நட்டின் அமைச்சர்கள் மூவரும் அரங்கிலிருந்தனர். ஓதுவார்கள் கடவுள்வாழ்த்து பாடினர். திருக்குறள் பாடினர்.மற்றபடி விழா முழுவதும் ஆங்கிலத்தில்தான். ஆமாம் .மொரீஷியஸில் வாழ்கிற தமிழர்கள் பலருக்கு தமிழ் தெரியாது. விழா நிறவில் அமைச்சர்களும் விருந்தினர்களும் தமிழமைப்புகளின் உறுப்பினர்களும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினோம்.

அதன்பின் விழா அரங்கில் தேநீர் விருந்து. இன்னும் சகஜ நிலைக்கு வராததால் அந்த சிற்றுணவே போதுமென்று  சொல்லி மதிய உணவைத் தவிர்த்து விட்டேன். பேராசிரியர்   ஜீவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.மீண்டும் ஒருமணிநேர ஓய்வு.மாலையில் குட்லாண்ட்ஸ் என்ற பகுதியில் உள்ள  ஆலயம் ஒன்றிற்கு செல்வதாய் ஏற்பாடு. உடலும் மனமும் தெளிந்திருந்தது.

ஏறக்குறைய நாற்பது ஏக்கர்கள் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் மகாத்மா காந்தி மையம் மொரிஷியஸ் அரசு மற்றும் இந்திய அரசின் கூட்டு முயற்சியில் உருவானது.1970 ல்  இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி மொரீஷியஸின் முதல் பிரதமர்சீவுசாஹர் ராம்கூலன் ஆகியோர் இணைந்து அடிக்கல் நாட்டினர்.இந்த நிறுவனத்திற்காக 1970 ல் மொரீஷியஸ் பாராளுமன்றம் பிரத்யேகமாய் ஒரு சட்டமே இயற்றியது.பள்ளிகள் நுண்கலைக் கல்லூரிகள் இந்தியவியல் கல்விகள் என்கிற வரிசையில் தமிழ்த்துறையும் இயங்குகிறது.இவைதவிர பள்ளிகளும் இயங்குகின்றன.

மகாகவி சுப்பிரமணிய பாரதி பெயரில் ஓர் அரங்கமும் அமைந்துள்ளது. வளாகத்துக்கு வெளியே சுப்பிரமணிய பாரதி பெயரில்  கண் மருத்துவமனை ஒன்றையும் பார்த்தேன்.இவைதவிர மகாத்மா காந்திநிறுவனத்தின் முக்கிய அங்கம்,அங்கிருக்கும் ஆவணக்காப்பகம். மகாத்மா காந்தி நிறுவன வளாகத்தின் பெரும்பகுதி பசுமையின் பிடியில் இருக்கிறது. இங்கே அமைந்திருக்கும் புல்வெளிகளும் நந்தவனங்களும் கண்ணும் கருத்துமாய் பராமரிக்கப்படுகின்றன.இதில் அமைந்திருக்கும் அதிதியன் விருந்தினர் விடுதியில்தான் அறை.
அதிதியன் விருந்தினர் விடுதி
காந்தி சில சமயங்கள் தங்கும் பிர்லா மாளிகையை விட பலமடங்கு பெரிதாக மகாத்மா கந்தி நிறுவனம் அதிநவீன வசதிகளுடன் உருவாகியிருந்தாலும் அதிதியன் விருந்தினர் விடுதி கட்டும் போது மட்டும் அவர்களுக்கு காந்தியின் எளிமை ஞாபகத்துக்கு வந்து குளிர்சாதன வசதி செய்யாமல் விட்டு விட்டார்கள். நான் விரும்பினால் ஏதேனும் விடுதி ஒன்றில் குளிர்சாதன வசதி கொண்ட அறை ஏற்பாடு செய்து தருவதாக சொன்னார் பேராசிரியர் ஜீவன்.ஆனால் இந்தப் பசுமையும் ஏகாந்தமும் வேறெங்கும் கிடைக்காது என்றார். சூழல் எனக்கு மிகவும் பிடித்ததால் அங்கேயே தங்க ஒப்புக் கொண்டேன். விசாலமான் அறை.வெள்ளையர்கள் காந்தி பெயரைச் சொன்னாலே சூடாவார்கள் என்பதைக் குறிக்கும் விதத்திலோ என்னவோ,குளியலறையிலிருந்த தண்ணீர் சூடேற்றும் சாதனத்தில் Made in England  என்றிருந்தது.
வளாகத்தில் அமைந்திருக்கும் காந்திசிலை
குட்லாண்ட்ஸ் நோக்கி மீண்டும் குலுங்கும் பயணம். ஏறக்குறைய முக்கால் மணிநேரப் பயணத்தில் குட்லாண்ட்ஸ் சென்றடைந்தோம்.ஆங்காங்கே ஆகாயம் நோக்கி சுட்டுவிரல் உயர்த்தும் பாவனையில் மேல்நோக்கி நிற்கும் ஒற்றைப் பாறைகளுடன் குன்றுகள்
ஊருக்கு நடுவே அழகான சிவன் கோவில் ஒன்று. உள்ளே நுழையும்போது,ஆண்களும் பெண்களும் பதின்வயதினரும் குழந்தைகளுமாய் நானூறுக்கும் அதிகமானவர்கள் திரண்டிருந்தனர். தைப்பூச விழா அங்கே பத்து நாட்கள் கோலாகலமாக நிகழ்கிறது. வயது பேதமில்லாமல் எல்லோரும் விரதமிருக்கிறார்கள். காவடி,பால்குடம் எடுக்கிறார்கள். அலகு குத்திக் கொள்கிறார்கள்.
ஆனால் உண்மையான பக்தியுடன் அங்கிருந்தவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு சதவிகிதத்தினர் தமிழைப் புரிந்து கொள்ள சிரமப்படுபவர்கள். மொரீஷியஸில் நான் கலந்து கொண்ட ஐந்து கூட்டங்களில்,தமிழ் மாணவர்களிடையே பேசிய ஒரு கூட்டம் தவிர மற்ற நான்கு கூட்டங்களில் ஆங்கிலத்தில்தான் பேசினேன். குட்லாண்ட்ஸ் கோவிலில் நாங்கள் நுழைந்தபோது ஒருவர் ஆறெழுத்து மந்திரம் குறித்தும் முருகன் என்னும் மூர்த்தத்தின் குண்டலினித் தத்துவம் குறித்தும் ஆங்கிலத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.அவரைத் தொடர்ந்து நான் அழைக்கப்பட்டேன்.
சுப்ரமண்யா குன்று பற்றிய செய்திகளுடன் தொடங்கினேன். பின்னர் கற்பனைக்களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகளின் பாடல் ஒன்றின் பொருளை ஆங்கிலத்தில் முதலில் விளக்கினேன்

You know, once Shiva was in deep meditation at Kailash.suddenly he could hear Lord Ganesha crying.” என்ற போது பட்டுப்பாவாடை சட்டையிலிருந்த சிறுமிகள் கண்களை அகல விரித்துக் கேட்கத் தொடங்கினர்.
கல்லூரி மாண்வனாக இருந்தபோது ஒருமுறை தனிப்பட்ட உரையாடலில் திரு.சுகிசிவம், கி.வா.ஜ.விடமிருந்துதான்  கற்றுக் கொண்ட உத்தி ஒன்றைச் சொன்னார். முதலில் பாடலின் பொருளை விளக்கிவிட்டு பிறகு பாடலைச் சொல்வது.தமிழகத்தில் தமிழில் பேசும்போது நான் பின்பற்றும் இந்த உத்தி என் ஆங்கில உரைகளிலும் கைகொடுத்தது.

கூட்டம் முடிந்து கோவில் நிர்வாகத்தில் ஆர்வமுடன் ஈடுபடும் தொழிலதிபர்களான திரு.சுப்பிரமணியம் தம்பதியர் திரு.சொக்கலிங்கம் தம்பதியர் ஆகியோரின் அன்பான உபசரிப்பில் இரவு உணவு.நான் விளையாட்டாக பேராசிரியர் ஜீவனிடம்”நான்கூட இன்று விரதமிருந்துதான் சாப்பிடுகிறேன்” என்று சொல்ல அவர் சங்கடத்தில் நெளிந்தார்.

நாகை மாவட்டம் தரங்கம்படி பக்கமுள்ள பெரம்பலூரில் இருந்து இரண்டாண்டு ஒப்பந்தத்தில் அழைத்து வரப்பட்டிருந்த வாத்தியக் கலைஞர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அதிதியன் விடுதி திரும்பினேன். மிச்சமிருந்த களைப்பையும் உறிஞ்சிக் குடிக்கும் உத்வேகத்துடன் கவ்விக் கொண்டது உறக்கம்.

(தொடர்வோம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *