“சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்”எனும் முதுமொழியின் நாயகன் கந்தன். பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள் சஷ்டியில் நோன்பிருந்து மகப்பேற்றுக்கு உரியவர்கள் ஆவது தொடங்கி மனமாகிய பையில் அருள் சுரக்கும் என்பது வரை பல தாத்பர்யங்கள் இதிலே அடக்கம்.

மன்மதனை எரித்த நெற்றிக்கண் வழி முருகன் உதித்தான் என்பது காமத்தை அழித்தால் ஞானம் பிறக்கும் என்பதன் குறியீடு  என்பாரும் உளர்.

எல்லாவற்றையும் விட முக்கியம்,முருகன் அவதரிக்கவில்லை என்பதுதான்.குறிப்பிட்ட சங்கல்பத்திற்காக, எங்கும் நிறைந்திருக்கும் ,எல்லாமாகவும் பொலிந்திருக்கும் பரம்பொருள் வடிவுகொண்டு தோன்றியது.

அருவமும் உருவும் ஆகி-

அநாதியாய் பலவாய் ஒன்றாய்-

பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு –

இது பரம்பொருளின் நிர்க்குண நிராமய நிலை. தொழிற்படத் தேவையில்லாத நிலை.ஏனெனில், தங்கள் துயரைத் தீர்த்தருள வேண்டுமென சிவபெருமானிடம் விண்ணப்பித்த தேவர்கள்,எல்லையின்மை, அருவம் உருவம் போன்ற எல்லைகளுக்கும் அப்பாற்பட்ட தன்மை,மறைகளால் கண்டுணரப்படாத மாண்பு ஆகிய அம்சங்கள் கொண்ட சிவப்பரம்பொருள் தனக்கு நிகரான குமரனைத் தர வேண்டுமென்றே வேண்டுகின்றனர்.

"ஆதியும் நடுவு மீறும் அருவமு முருவு மொப்பும்
ஏதுவும் வரவும் போக்கு மின்பமுந் துன்பு மின்றி
வேதமுங் கடந்து நின்ற விமலஓர் குமரன் றன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நினையே நிகர்க்க வென்றார்".என்கிறது

கந்தபுராணம்.

அந்த சோதிப் பிழம்பு என்ன செய்கிறது?

“சோதிப் பிழம்பு- அது ஒரு மேனியாகி”

திருமேனி கொண்டு வருகிறது.

“கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே

ஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய”
 
வடிவும் முடிவும் கடந்த பரம்பொருள் கருணை கூர்ந்து மேற்கொண்ட திருவடிவே திருமுருகன்.கருணையின் வடிவமென்பதற்கு சான்றாக, திருவவதாரம்நிகழ்ந்து சிறிது காலத்திற்குள்ளாகவே இன்னொரு சம்பவமும் நிகழ்கிறது. ஆறு திருமுகங்களும் ஒரு திரு மேனியுமாக சரவணப்பொய்கையில் முருகக் குழந்தை தாமரை மலரில் வீற்றிருக்கின்றது.அக்குழந்தையைப் பேணி வளர்க்குமாறு கார்த்திகைப் பெண்களை சிவபெருமான் பணிக்கிறார்.அறுவரும் சென்று கைநீட்டி  அழைக்கின்றனர். என்ன கேட்டாலும் தருகிற கருணை மூர்த்தியாகிய கந்தன் தன்னைக் கேட்டதும் தனித்தனியே ஆறு குழந்தைகளாய் வடிவெடுக்கிறான்.
"மறுவறும் ஆர லாகும் மாதர்மூ விருவர்*தாமும்
நிறைதரு சவர ணத்தின் நிமலனை அடைந்து போற்ற
உறுநர்கள் தமக்கு வேண்டிற் றுதவுகோன் ஆத லாலே
அறுமுக வொருவன் வேறாய் அறுசிறார் உருவங் கொண்டான்".
 என்கிறார் கந்தபுராண ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார்.

ஒவ்வோர் உருவும் செய்யும் பிள்ளை விளையாட்டோ பேரழகு!
துயிலவோ ருருவம் துஞ்சித்  துண்ணென எழுந்து மென்சொற்
பயிலவோ ருருவம் யாய்தன் பயோதரம் பவள வாய்வைத்து 
அயிலவோ ருருவம் நக்காங் கமரவோ ருருவம் ஆடல்
இயலவோ ருருவம் வாளா இரங்கவோ ருருவஞ் செய்தான்.   

ஓருருத் தவழ மெல்ல ஓருருத் தளர்ந்து செல்ல
ஓருரு நிற்றல் செல்லா தொய்யென எழுந்து வீழ
ஓருரு இருக்கப் பொய்கை ஓருரு வுழக்கிச் சூழ
ஓருருத் தாய்கண் வைக ஒருவனே புரித லுற்றான்.    
    
ஆறு மழலைத் திருவுருவங்களை முன்வைத்து, ஓர் அரிய
 தத்துவத்தை கச்சியப்பர்உணர்த்துகிறார். நினைத்த மாத்திரத்தில்
 ஆயிரம் வடிவெடுக்கக் கூடியவன் இவன்.இவனே
உயிர்கள் தோறும் நிறைந்திருக்கும் குகன் " என்கிறார்.
 

இத்திறம் இருமூன் றான யாக்கையுங் கணம தொன்றில்
பத்துநூ றாய பேதப் படும்வகை பரமாய் நின்ற
உத்தம குமரன் றான்எவ் வுயிர்தொறும் ஆட லேபோல்
வித்தக விளையாட் டின்ன மாயையால் விரைந்து செய்தான்.
பரம கருணையாளன்...இந்த பாலமுருகன்
(வருவான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *