நீங்கள்  கடந்த இருபதாண்டுகளாகக் கோவையின் இலக்கிய உலகுடன் பரிச்சயம் கொண்டவராக இருந்தால் கோவை பழநிசாமி என்னும் பெயரையோ அப்பெயர் கொண்ட மனிதரையோ ஒருமுறையேனும் கடந்து வந்திருக்கக் கூடும்.

விஜயா பதிப்பகத்தில்,வேனில் கிருஷ்ணமூர்த்தியின் நந்தினி அச்சகத்தில்,கோவையில் பரவலாக நடைபெறும் பற்பல இலக்கியக் கூட்டங்களில்,அவர் அடிக்கடி தட்டுப்படுவார். அணை போட முடியாத ஆர்வக்காரர். தன் சட்டைப்பையிலோ கால்சட்டைப் பையிலோ சமீபத்தில் அவர் எழுதிய கவிதையை எப்போதும் இருப்பில் வைத்திருப்பார்.

பாரத ஸ்டேட் வங்கியில் நல்ல பணியில் இருந்தவர்.அதன் தொழிற்சங்கத்திலும் முக்கியப் பொறுப்பு வகித்தவர்.ஓய்வு பெற்றார்.அதன்பின் அதிக தொடர்பில்லை.

சில நாட்களுக்கு முன் விஜயா பதிப்பகத்தில் சந்தித்தேன்.தன்னுடைய புதியநூல் ஒன்றைத் தந்தார்.கூடவே ஒரு தகவலையும் சொன்னார்.”சிறியவயதில் கடந்து வந்த சிரமங்கள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன் .எவ்வளவு பேர் விரும்பிப் படிப்பார்களோ தெரியவில்லை. சென்னையில் மாணவர் நகலத்தில் குறைவான எண்ணிக்கையில் அச்சிட்டுத் தருகிறார்கள்.எனவே அங்கேயே அச்சிட்டேன் ” என்றார்.

அன்று கோவையில் வாகன நெரிசல். காரிலேயே புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். பயணத்திலேயே 35 பக்கங்கள் படித்திருந்தேன்!!ஆலுவலகம் சென்றபின் மதிய உணவின் போதும் மதிய உணவின் பின்னும் தொடர்ந்து படிக்கத் தூண்டியது அந்தப் புத்தகம்.

இதற்கு முன்னர் அவரின் கவிதை நூல்கள் ஒன்றோ இரண்டோ தந்திருந்தார். அவை என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை.ஆனால் இந்தப் புத்தகம் கீழே வைக்கவே விடவில்லை. விவசாய நிலமிருந்ததால் ஓரளவு வசதியானகுடும்பத்தில் பிறப்பு. அப்பா ஆலைத் தொழிலாளி. பழநிசாமி அப்பாவுக்கு செல்லப் பிள்ளை.அண்ணனையும் தம்பியையும் விட அப்பாவுக்கு அதிக செல்லம்.

அம்மாவுக்கு சில பிரச்சினைகள். கோயில் கோயிலாய் மாந்திரீகம். இருந்தாற்போல் இருந்து அம்மாவின் நடவடிக்கைகள் மாறும். குடும்பத்தில் சண்டைகள். காலம் இவர்கள் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது.பெற்றோர் பிரிகின்றனர். பள்ளிக் கட்டணம் ஐந்து ரூபாய் கட்டவேண்டுமென்றால் அம்மாவை விட்டுவிட்டு தன்னுடன் வர நிபந்தனை விதிக்கும் அப்பா. மகன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வெழுத கையெழுத்து போடமறுத்துவிட்ட அப்பா. ரேஷன் அட்டையையும் பிடுங்கிக் கொண்டு தொடர் பட்டினியில் வாடவிட்ட அப்பா.

இந்தச் சூழலில் பசியிலும் பட்டினியிலும் சகோதரர்கள் படித்து முன்னுக்கு வந்த வாழ்க்கை அப்பட்டமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.”பசும்புல் சித்திரங்கள்” என்னும் பெயரே, தந்தை கைவிட்ட சூழலில் புல்லறுத்து பிள்ளைகளைக் காப்பாற்றிய இவரின் தாயாரின் ஞாபகச் சித்திரம்தானாம்.

தன் அன்னையை தந்தை கத்தியால் குத்திவிட காவல்நிலையத்தில் தந்தையின் மீதே புகார் கொடுத்ததை, தாயை எந்நாளும் காப்பேன் என்று வாக்கு கொடுத்ததை, அந்தத் தாயும் எதிர்பாராமல் மரணமடைந்ததை உருக்கமாக விவரிக்கும் கோவை பழநிசாமி வாசிப்பவர் மனதில் உயர்வது வறுமை தாங்கி வளர்ந்ததால் மட்டுமல்ல.

அன்னை உயிரோடிருக்கும் போதே சொத்துத் தகராறில் அப்பாவின்  சகோதரர்கள் அப்பாவைத் தாக்கிய செய்தி கிடைக்கிறது.அன்னை தவித்துப் போனாலும் பழநிசாமி பாராமுகமாயிருக்கிறார். பின்னர் உடன்பிறப்புகளோடும் அன்னையோடும் சென்று அப்பாவை பார்த்ததும்.”நம்ம வீட்டுக்கே போயிடலாம் வாங்க” என்று அன்னையும் தம்பியும் அழைக்க கைத்தாங்கலாய் அப்பாவை அழைத்து ம்அட்டும் அவர் நம் மதிப்பில் உயரக் காரணமல்ல.

தன் இளமைப் பருவத்தின் மிக முக்கியமான எட்டு வருடங்களை நரகமாக்கிக் கொடுத்த அப்பாவை அவர் தொண்ணூறு வயது தாண்டி வாழ்ந்த்ச்போதும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்ட பக்குவத்திலும்    பொறுப்புணர்விலும் பொறுமையிலும் பழநிசாமி மீதான மதிப்பு கூடுகிறது.நன்கு படித்து நல்ல வேலையில் இருக்கும் அவர் மகனும் அதே போல் குடும்பப் பற்றோடும் பிணைப்போடும் இருப்பதஈந்நூலில் பழநிசாமி பதிவு செய்கிறார்.

இந்த நூலை “கணவனால் கைவிடப்பட்ட இளந்தாய்மார்களுக்கும் இளந்தளிர்களுக்கும்”காணிக்கைஆக்கியிருக்கிறார் கோவை பழநிசாமி. குடும்பமென்னும் கட்டமைப்பும் , சேர்ந்து வாழும் கூட்டமைப்பும் கலைந்து போகும் இக்காலத்தில் முதல் சுற்று உறவுகளே தள்ளி நிற்கும் சூழலில் இந்த வாழ்க்கைச் சித்திரம் பரவலாக வாசிக்கப்பட வேண்டிய நூலாகும்.

சாமான்யர்கள்போல்வாழ்பவர்களின் வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை பாடங்கள்!!

வெளியீடு:மனோன்மணி பதிப்பகம் அமுது இல்லம்,10, வெங்கடசாமி நகர்,அத்திப்பாளையம் பிரிவு கணபதி கோவை 641006தொடர்புக்கு திரு.கோவை பழநிசாமி :(4671 03003

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *