சிலரைப் பொறுத்தவரை, வெற்றியென்பது, வானத்திலிருந்து வருகிற வரம். கடவுள் கொடுக்கிற கொடை. ஜாதகம் செய்கிற ஜாலம். விதியின்மீது பாரத்தைப் போட்டுவிட்டு வீணாக நேரத்தைக் கழிப்பவர்கள், எப்போதும் சாதிக்கப் போவதில்லை. காலமும் இடமும் கருதிச்செய்வது வெற்றிக்கு வழியென்று வள்ளுவர் சொல்கிறார். ஆனால்,காலம் வருமென்று வெறுமனே காத் திருப்பவர்கள் வாழ்வில், புதுமைகள் பூப்பதில்லை.

வெற்றியாளர்களின் வரலாற்றிலெல்லாம் ஓர் ஒற்றுமையை உணர முடியும். சாதிப்பதற்கு சம்பந்தமேயில்லாத சூழலில் பிறந்து வளர்ந்து, சாதனையை சாத்தியமாக்கிக் கொண்டவர்கள் தான் அனைவரும்.

விரட்டும் வறுமை, மிரட்டும் வாழ்க்கைச் சூழல், அனைத்தையும் எதிர்கொண்டு போராடி வென்றவர்களே பெயர் சொல்லும் விதமாய் விளங்குகிறார்கள்.

சூழ்நிலை அமையட்டுமென்று சுதந்திரப் போராட்ட வீரர்கள் சும்மா இருந்திருந்தால், அடிமை இந்தியாவிலேயே நாம் அல்லல்பட்டுக் கொண்டிருப்போம். மின்விளக்கு, வாகனங்கள், மருத்துவ சாதனங்கள், ஆலைகள், அனைத்துமே முதல் முதலில் உருவானபோது அதற்கான சூழ்நிலை அமைந்திருக்கவேயில்லை.

”தேவைதான் உருவாக்கத்தின் தாய்” என்றொரு முதுமொழி உண்டு. வாழ்க்கை இலக்கின்றிச் செல்ல அனுமதித்தவர்கள், தங்களுக்குள் இருக்கும் ஆற்றலை அவமதித்தார்கள்.

விரும்பும் இலக்கில் பயணம் செய்யவும், விரும்புகின்ற வெற்றிகள் எட்டவும் வாகான வெளிச் சூழலை விஞ்ஞானம் சுதந்திரமாய் நிலைநிறுத்தியுள்ளது.

உயர்வுகளுக்கான உணர்வும் விருப்பமும் உள்ள உட்சூழல், நம் உள்ளத்தில் இருக்கிறதா என்பது தான் கேள்வி.

இணையதளத்தின் இன்றையயுகம், எண்ணியவற்றை எண்ணியவாறே எட்டிப்பிடிக்க கை கொடுக்கிறது. ஆனால், ஆமை ஓட்டினால் ஆன மனதைக் கொண்டு அவதிப்படுகிறார்கள்.

ஆமை ஓட்டினால் ஆன மனதில் இரண்டு சிரமங்கள் இருக்கின்றன. ஒன்று வேகக் குறைவு. இன்னொன்று, உள்ளொடுங்கும் இயல்பு.

உயர்வுக்கானப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும் தடைகள், இந்த இரண்டு குணங்கள்.

வேண்டிய வேகத்தை வெளிப்படுத்தாமையும், உள்ளொடுங்கும் தாழ்வு மனப்பான்மையும்தான் பல வீழ்ச்சிக்கும் வழி வகுத்துள்ளது.

அதிர்ஷட தேவதை, ஒரு சிறுமியின் வடிவெடுத்து, கந்தல் துணியில் சுற்றிப் பெரும் சுமையொன்றைத் தூக்க முடியாமல் தூக்கி வந்தது. ஒடிச்சென்று பலரும் தாங்கிப் பிடித்தனர். ஒரேயொரு மனிதன் மட்டும் முகம் திருப்பி அமர்ந்திருந்தான்.

அந்தச் சிறுமி அவன் முகவாய் தொட்டுத் திருப்பிக் கேட்டாள். ” எல்லோரும் என்னைத் தேடிவந்து உதவினார்கள் நீ உதவவில்லையே?” அந்த மனிதன் அலட்சியமாய்ச் சொன்னான், ” உன்னைப் பற்றி எனக்கென்ன கவலை”.

மௌனமாய் அகன்றாள் மலர் போன்ற சிறுமி. பத்தடி நகர்ந்தபின், தூக்கி வந்த கந்தலை அவிழ்க்கும்படி உதவி செய்தவரைக் கேட்டுக் கொண்டாள். உள்ளே ” தகதக ” வென்று தங்கக் கட்டிகள். கைகொடுக்க ஓடோடி வந்தவர்களுக்குக் கைநிறைய தங்கம் தந்து விடை பெற்றது அதிர்ஷட தேவதை.

சோம்பேறி மனிதன் ஓடிவந்து கேட்டான், ” என்க்குத் தரவில்லையே” அதிர்ஷட தேவதை அலட்சியமாய்ச் சொன்னது, ” உன்னைப்ற்றி எனக்கென்ன கவலை”.

வாழ்க்கையின் சிறிய வாய்ப்புகள் கூடக் கந்தல் துணி மூட்டைபோல் கண்ணுக்குத் தெரியும். அதையும் ஓடிச்சென்று தாங்கும் உள்ளம் இருந்தால், வாழ்வில் தங்கத்தை மழையாய்ப் பொழியும்.

மனிதன் சந்திக்கும் ஒவ்வொன்றுமே மாறுவேடத்தில் வரும் வாய்ப்புகள். நேரம் வந்தால் தானாக வரும் என்ற வறட்டு வார்த்தைகள் வாழ்க்கைக்குத் துணை செய்ய வாய்ப்பே இல்லை.

திறந்து கிடக்கும் உலகம் துணைக்கிருக்கும் போது, சூழ்நிலை சரியாய் அமையவில்லை என்று சொல்வது ஆகாது. முனைப்பும் உழைப்பும் தாமதமாக வரும். பலன் தரும். வீணாகப்போகாது.

சூழ்நில் தானாய் அமையும் என்று
சிலபேர் சொல்வார்கள்;

சூழ்நிலை தமக்காய் அமைப்பவரெல்லாம்
வாழ்க்கையை வெல்வார்கள்!

ஒவ்வொரு பொழுதும் விடிகிற போதே
உனக்கென விடிகிறது
கவ்வியிழுக்கும் உறக்கத்தில் விழ்ந்தால்
காலம் மறைகிறது!

சிப்பியின் வாய்போல் திறந்தமனதில்

வாய்ப்பும் விழுகிறது!
தப்பிவிடாமல் தாங்கிப் பிடித்தால்
வாழ்க்கை ஒளிர்கிறது!

வெல்லும் வாய்ப்புகள் இல்லைஎன்பவர்

வாழ்வில் திருப்பமில்லை!
உள்ளபடியே உன்னைத் தவிர்ப்பது
வெற்றியின் விருப்பமில்லை!

நீயாய் எழுதிய எழுத்துத்தானே
உனது தலையெழுத்து!~
சோர்வை நீக்கிக் செயல்படு; நீதான்
வெற்றியின் முதலெழுத்து!

 

( இன்னும் பேசுவேன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *