Thiru Jayamohanகோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஒருங்கிணைப்பில் ஜெயமோகன் கீதை குறித்து நிகழ்த்தும் மூன்று நாட்கள் தொடர் நிகழ்ச்சியின் முதல் நாள் உரையை வலையேற்றத்தில்தான் கேட்க முடிந்தது.

கீதையை அணுகுவதற்கான மாற்று மனநிலையை இந்த உரையில் ஜெயமோகன் முன்வைக்கிறார். கீதை சொல்லும் நால்வருணம் சாதி சார்ந்ததல்ல கருங்கல்லில் தொடங்கி,விலங்குகள் மனிதர்கள் என அனைத்துமே நால்வகைகளாக அன்று பிரிக்கப்பட்டன என்கிறார்.

கீதையை வாசிக்காதவர்களுக்கும் வாயில் வருகிற சொல் கர்மயோகம். அது செயலைக் குறிப்பதல்லசெயல் தொடர்பு முடிவிலி என்கிறார்.

முடிவிலாச் செயல் தொடர்பை கத்தரிக்கும் விதமாகவே ஆன்மீகம் கர்ம வினைக் கோட்பாட்டை அணுகுவதை இங்கு நினைவுபடுத்திக் கொள்கிறேன்

இந்த உரையின் முக்கியமான இரண்டு அம்சங்கள்,மகாபாரத காலம் எது? கீதை எப்போது எழுதப்பட்டது? ஆகிய இரண்டு கேள்விகளையும் ஜெயமோகன் அணுகுகிற முறை.

4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிரதியாகவே வியாச பாரதம் இருக்கக்கூடும் என்கிறார்.அதாவது கி.மு.இரண்டாயிரம்

இதற்கு காத்திரமான காரணங்களையும் எடுத்து வைக்கிறார்.உலோக கால அடிப்படையில் பார்த்தால் பாரதத்தில் இரும்பு பேசப்படுவதை ஓர் உதாரணமாகச் சொல்கிறார். பௌத்த மத தாக்க்கத்தால் நியாய சாத்திரம் வலுப்பெற்ற காலத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது என்பதும் அவர் நூலின் அமைப்புமுறை வைத்துச் சுட்டும் மற்றொரு காரணம்.

வியாசரின் எழுத்துகளை விடவும் பத்து மடங்கு இடைச்செருகல் அதில் உள்ளதையும் சுட்டுகிறார்.

இரண்டாவதாக கீதை மகாபாரதத்தின் இடைச்செருகலென்று சொல்லப்படும் வாதத்தை தான் ஏற்பதாகவும் சொல்கிறார்.

பாரதத்தின் மொழிநடைக்கும் கீதையின் மொழிநடைக்கும் இருக்கும் மிகப்பெரிய வேறுபாட்டை அறிஞர்கள் சுட்டுவதை உணர்த்தும் ஜெயமோகன், “சங்க இலக்கியத்தின் நடுவே பாரதியார் கவிதைகளை வைத்தது போல வியாச பாரதத்தின் நடுவே பகவத் கீதை இருக்கிறது” என்கிறார்.

கிருஷ்ணனால் முன்னரே எழுதப்பட்டு விரிவாக்கப்பட்டு,பாரதத்தில் துல்லியமான இடத்தில் கீதை பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதும் அவருடைய பார்வை.

ஜெயமோகன் வரிகளிலேயே சொல்வதெனில் “கிருஷ்ணன் தெய்வமா என்றால், தெய்வம் என்று சொல்வதில் எவ்விதத் தவறும் இல்லை.அவன் ஒரு தலைவன் -தத்துவஞானி-மேதை.”வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”
“தெய்வம் மனுஷ்ய ரூபேண” என்னும் சொற்றொடர்கள் கொண்டு
கண்ணனை முன்வைக்கிறார்.

கிருஷ்ணன் ஓர் அதிமனிதனாக காணப்படும் பார்வையும் முன்னரே உள்ளதுதான். Krishna-The Man and his Philosophy என்னும் நூலில் ஓஷோவும் இந்தப் பார்வையை முன்னெடுக்கிறார்.

பாரத காலம் தொடங்கி பாகவத காலத்துக்குள் கண்ணன் பெருந்தெய்வமாக வடிவம் பெறுகிறான்.இந்தப் புரிதல்களுடன் கீதையைத் தனது பார்வையில் முன்வைக்கப்போவதாக ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.

மகாபாரத காலம் ,குறித்து சர்ச்சை நெடுங்காலமாகவே உள்ளது. சேரனும் பாண்டியனும் தொடர்புடைய பகுதிகள் இந்தக் கால முரணுக்கொரு சான்று.கபாடபுரத்திலிருந்து சில பாண்டியர்களும் பாண்டி நாட்டிலிருந்து சில பாண்டியர்களும் ஒரே நேரத்தில் ஆட்சி புரிந்துள்ளனர். ஒருவன் பாண்டவர்களுக்கு ஆதரவாகவும் இன்னொருவன் பாண்டவர்களுக்கெதிராகவும் போரிட்டிருக்கக் கூடும்.

அதேபோல புறநானூற்றிலும் சிலம்பிலும் சுட்டப்படுகிற சேர மன்னன். இரு படையினருக்கும் உணவளித்தவன்.சங்க காலத்து செம்மீன் சங்கம்!! (செஞ்சிலுவை சங்கம் போல) . இவர்களுடைய காலம் பற்றிய கேள்விகளும் ஊடாடுகின்றன.

இந்தப் பின்புலங்களை வைத்துப் பார்க்கையில் ஜெயமோகனின் பார்வையை புரிந்து கொள்ள முடிகிறது,அவரது புரிதலும் புரிதலை சொல்லத் துணிதலும் வியப்புக்குரியவை..

இனி மகாபாரத காலம் என்று அவர் வரையறுக்கும் காலம் மகாபாரதம் நிகழ்ந்த காலமா அல்லது வியாச பாரதம் எனும் பிரதி உருவான காலமா என்கிற கேள்வி முன்னிற்கிறது.

இரண்டாவதாக கீதை களத்தில் சொல்லப்படவில்லை என்னும்போது ,அதில் வருகிற விசுவரூபம் உள்ளிட்ட அம்சங்களும் கேள்விக்குள்ளாகும். ஜெயமோகனின் அடுத்தடுத்த உரைகள் இவற்றைத் தெளிவுபடுத்தக் கூடும்.

ஜெயமோகனின் உரையை வலையேற்றம் செய்துள்ள கீதா அவர்களுக்கு நன்றி.
https://soundcloud.com/j-speech/geetha-history

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *