கீதையின் இடம் எது என்னும் கேள்வியில் தொடங்கி,கீதையின் இடம் இது என்னும் சுட்டுதலில் நிறைவுற்றது ஜெயமோகனின் இன்றைய உரை.மிக மெல்லிய தாள்களில் தங்க டாலருக்குள் பொதியப்பட்ட கீதையை, ஜோதிடர் சொல்கேட்டு கழுத்தில் அணிந்திருந்த ஒருவரைப் பற்றிய சித்திரத்துடன் தொடங்கியது உரை. உரையின் போக்கில்,மெய்யியலின் ஆகப்பெரிய பிரம்மாண்டமான இந்து தர்மம்,ஜோதிடனின் வழிகாட்டுதலில் ஆலயங்களைத் தேடிப் போகும் கூட்டத்தை உருவாக்கியிருக்கும் சூழலில் இந்நிலைக்கொரு மாற்றாய் கீதை திகழும் என்னும் முரணழகு மிளிரும் தன் நம்பிக்கையையும் அவர் முன் வைத்தார்.

கீதைக்கு இந்த முக்கியத்துவம் வந்தது, ஐரோப்பியர்கள் அதனை மொழிபெயர்த்து கொண்டாடியதுதான் என்றார் ஜெயமோகன். இருக்கலாம். நம் பாட்டன் காலத்தில் வீட்டுக்கு வீடு கீதை இருந்தது.ஆனால் கீதையை வாசிக்கும் முறையில் வாசிக்கப்படவில்லை.மறைஞான நூலொன்று பிரபலமாக்கப்படுவதால் நேரக்கூடிய பிழைகள் அனைத்துமே கீதைக்கு நேர்ந்தன என்றார்.கீதைக்கு நேர்ந்த ஆகப் பெரிய நன்மை,அதை வாசிக்க முற்பட்ட வெகுமக்களில் பலரும் சாங்கிய யோகத்தைத் தாண்டாததுதான் என்றார்.கீதையிலிருந்து சில உபதேச மேற்கோள்கள் உருவாக்கப்பட்டதையும்,அந்த வரிகள் மூலமாக கீதையைப் புரிந்து கொள்ள முற்படுவதையும் குறிப்பிட்ட ஜெயமோகன்,அது “ஒரு சிற்பத்தை நக்கிப் பார்த்துப் புரிந்து கொள்ள முற்படுவது போல” என்றார்.

ஒரு நூலை குருமுகமாகக் கேட்க வேண்டும் என்னும் மரபு இந்து தர்மத்தில் நெடுங்காலமாக வலியுறுத்தப்படுவது நாம் அறிந்த ஒன்று.
மனனம் செய்த நூலை குருமுகமாய் உணர்ந்து மேலெடுத்து அதனை தியானிக்கும் பழங்கால முறையே கீதையை வாசிக்கும் முறை என்றார்

கீதை இந்து தர்மத்தின் மூலநூல் அல்ல, என்றவர் மூலநூலின் இலக்கணங்களையும் விரிவாகப் பேசினார். ஒரு நெறியின் மூலநூலானது தன்னை மறுப்பதற்கான வாய்ப்புகளை முற்றாக அடைக்கும்.ஆனால் கண்ணன் தன் சொற்களை அர்ச்சுனன் அப்படியே ஏற்க வேண்டுமென எதிர்பார்க்கவில்லை. “இந்தக் கருத்துகள் உனக்கு உகந்தவையா என யோசி என்கிறான்.கண்ணன் இடையனே தவிர நல்ல மேய்ப்பனல்ல.மனிதர்களை மந்தை போல் நடத்த அவன் முற்படவில்லை” என்றார்..

ஆனால் கண்ணன் கீதையின் பிற்பகுதிகளில் “என்னை சரணடை” என்று அர்ச்சுனனிடம் சொல்வதை இங்கு சேர்த்துப் பார்க்க வேண்டும்.தன்னுடன் சீடனின் இருப்பினை நீட்டிக்கும் போது விவாதத்தை ஒரு குரு நீட்டிக்கிறார்.சரணடைவதற்கான சூழலை சூட்சுமமாக உருவாக்குகிறார்.சீடன் அதற்குத் தயாராக இல்லாத போது தன் பூரணத்துவத்தை வெளிப்படுத்துகிறார் போலும் என்னும் எண்ணம் எனக்குள் ஓடியது.

இந்து மதத்தின் மூலநூலாக வேதங்கள் கருதப்பட்டாலும் சைவம் சாக்தம் போன்றவற்றின் சில பிரிவுகளுக்கு வேதம் மூலநூல் அல்ல என்றவர், இந்து தர்மத்தின் மூன்று முக்கிய நூல்கள் உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை என்ற இடத்தில் ஜெயமோகனின் உரைப்போக்கு அவரையும் மீறிய தன்னெழுச்சி கொள்ளத் தொடங்கியது.

“கீதையை எத்தனை பேர் கைக்கொண்டனர்! சங்கரரும் மத்வரும் ராமானுஜரும் உரைகள் எழுதினர். பக்தி மார்க்கத்தில் நிம்பர்கர்,வல்லபர்,சைதன்யர் ஆகியோர் உரைகள் கண்டனர். பின்னர் திலகர் கீதா ரஹஸ்யம் எழுதினார். அன்னிபெசன்ட் எழுதினார்..டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதினார். வினோபா காந்தி பாரதி ஜெயகாந்தன் என எல்லோர் கைகளிலும் கீதை இருந்தது.கீதை எப்போதும் யுகசந்தியாகவே இருந்து வந்துள்ளது. இத்தனை அலைகளிலும் மிதந்து வந்த பொன்படகாக கீதை நம்மிடம் வந்து சேர்ந்திருகிறது”என்னும் இடத்தில் ஜெயமோகன் உணர்ச்சி வசப்பட்டிருந்தார்.

நவகாளி யாத்திரையின் போது காந்தி தன் பதின்ம வயது பெயர்த்திகளோடு வந்து சேர்ந்த போது அத்தனை சீர்குலைவுக்கும் அவரே காரணம் என்னும் குற்றச்சாட்டு எல்லாத் திசைகளிலும் எழுந்த போது இரண்டு மணிநேர உறக்கத்திற்குப் பின் எழுந்த காந்தி கீதையை வாசித்தார்..தன் நிலைப்பாட்டில் உறுதி கொண்டவராய் கூப்பிய கைகளுடன் இசுலாமியர் வசிக்கும் இடத்திற்குச் சென்றார்.அவரால் அமைதியை நிலைநாட்ட முடிந்தது.”ஆகவே கொலைபுரிக”என அறிவுறுத்தியதாய் சொல்லப்பட்ட கீதை காந்தியின் கைகளில் அகிம்சைக்கான ஆயுதமாய் இருந்தது” என்றார்.

வேதத்தின் உயிர்ப்பு மிக்க கவிதையாகிய சுருதி கீதம் பகுதியின் தன் மொழியாக்கத்தை அவர் வாசித்த போது ஃஅவையினரும் வேறொரு தாத்தில் சஞ்சரித்தனர்.அதன் சாரத்தை சிவவக்கியரின் பாடலுடன் ஒப்புநோக்கி இத்தகைய பெரும் தத்துவங்களையும் கோட்பாடுகளையும் இணைக்கும் பொன்பட்டு நூலாக கீதை திகழ்வதைக் கூறினார்.

கீதையில் பலரும் எழுதிச் சேர்த்துள்ளனர் என்னும் பொருள்பட கீதையை மாபெரும் இலக்கியத் திருட்டு என்று மார்க்சீய ஆய்வாளர் கோசாம்பி கூறியதை சுட்டிய ஜெயமோகன் “மகத்தான நூல்கள் தன் வடிவம் மாறாமல் இருப்பவையல்ல.ஒரு கற்சிலை போல் நிற்பவை அல்ல” என்றார்.அதற்கு அரண் சேர்க்கும் விதமாக கீதைக்கு எழுதப்பட உரைகளை சுட்டினார்.உரைகள் வழி விவாதத்தை வளர்ப்பது வேறு. ஒரு பிரதியில் பலரும் எழுதிச் சேர்க்கும் இடைச்செருகல் என்பது வேறு. இடைச்செருகல்கள் பெரும்பாலும் மூலப்பிரதியின் அடர்த்தியை நீர்த்துப் போகச் செய்பவை.

இலக்கணமும் வடிவத் துல்லியமும் பிரதியின் செம்மையைக் காவல் காத்து நிற்க, உரைகள் அந்தக் கருவூலத்தின் விலைமதிப்பில்லாத செல்வங்களை அள்ளி வந்து காட்டுகின்றன.

திருக்குறளின் ஓரெழுத்தைக்கூட யாரும் மாற்றி எழுத இயலாது. ஆனால் அந்தக் குறட்பாக்கள் நவில்தொறும் நயம்புதிதாய்க் காட்டுவன.

எனவே கீதையில் பலர் எழுதிச் சேர்த்துள்ளனர் என்னும் கோசாம்பியின் குற்றச்சாட்டை எதிர்கொள்ள ஒரு சிறந்த நூலுக்கு அதுவே அடையாளம் என்னும் ஜெயமோகனின் வாதம் ஏற்கும்படியாய் இல்லை.

மற்றபடி ஜெயமோகனின் ஆலாபனையில் புதிய சஞ்சாரங்கள் கொண்டு திகழ்ந்தது இன்றைய அமர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *