ஜெயமோகனின் மூன்றாம் நாள் கீதை உரையினை வலையேற்றத்தில் கேட்டேன்.முரண்பாடுகளுக்கும் முரணியக்கத்துக்கும் நடுவிலான வேறுபாடுகளை விரித்துரைக்கும் இந்த அமர்வு நிறைய விவாதங்களை முன்னெடுக்கும் தளமாக அமைந்ததில் மகிழ்ச்சி. விவாதத்திற்கு முன்னதாக இந்த உரையின் முக்கியமான பகுதிகள் என்று நான் கருதும் சிலவற்றைப் பதிவு செய்கிறேன்.
தன் வாழ்வில் தொடராக நிகழ்ந்த சோக நிகழ்வுகளால் உயிராகிய காண்டீபத்தை தண்டவாளத்தில் கிடத்தமுற்பட்டு
புறப்பட்டுப் போன புலர்காலைப் பொழுதில் ஒரு புல்லினில் வெய்யில் ஊடுருவிய காட்சி “கீதை முகூர்த்தம்” நிகழ்ந்ததைக் குறிப்பிடும் இடமும் அதன்வழி தன் நிலைமாற்றத்தையும் உரையின் மத்தியில் விவரிக்கிறார்.
உள்ளபடியே ஒரு ஞானாசிரியன் ஓர் உயிரை ஆட்கொள்ள ஸ்தூலமாகவோ ஒலியாகவோ வேறொரு வடிவிலோ வெளிப்படுவது வாழ்வின் உச்ச விளிம்பின் கணங்களில்தான்.அதையே நடராஜ குரு பின்னர் ஜெயமோகனிடம்சொல்கிறார்.எந்தவொரு நூலையும் உயிர்த்துணையாய் கொள்ள அத்தகைய தருணங்களே திறப்புகள்.
தன்னை மதியாதவருக்கு இதனை சொல்லலாகாது என்று கண்ணன் சொன்னதும், கீதையைப் படிக்க வேண்டாம் நோயில்லாதவன் மருந்து சாப்பிட்டால் மருந்தே நோய் என்று ஜெயமோகனுக்கு அவருடைய பெரியப்பா சொன்னதும் ஒரே தொனியில்தான்.
பீஷ்மர் ஒரு கர்மயோகியானது எப்படி என்பதையும் அவருடன் காந்தியை ஒப்பிட்டு இருவருமே முள்படுக்கையில் இருந்தவர்கள் ஏதொன்றையும் எதிர்பாராமல் இருந்தவர்கள் என்றும் ஜெயமோகன் சொல்கிற இடம் சுவாரசியமானது. காந்தி கூட ஆகஸ்ட் 15 க்குப் பிறகு அவ்வப்போது முள் படுக்கையிலிருந்து எழுந்ததுண்டு. ஆள்பவர்கள் தன் சொற்கள் சிலவற்றைக் கேட்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு இருந்ததுண்டு என்பது வேறு விஷயம்.
அதேபோல நிகழப் போவதை அறிந்திருந்தாலும் அதில் தான் மாற்றவோ ஆற்றவோ ஒன்றுமில்லை என்று விலகி நின்ற விதுரனுடன் அரவிந்தரை ஒப்பிடுவதும் மிகப் பொருத்தம்.
ஜெயமோகனின் இரண்டாம் நாள் உரை பற்றிய என் பதிவில் “யோசித்துப்பார்” என்ற கண்ணன் சரணடையச் சொன்னதை சுட்டியிருந்தேன். அது எனக்கு வந்த ஒரு கேள்வி என்று (பெயர் குறிப்பிடாமல்) சொன்னதுடன் இரண்டும் வெவ்வேறு யோகங்கள் என்று பதிலுரைத்திருக்கிறார் ஜெயமோகன்.
முதலாவதாக அது என் கேள்வியல்ல.சுட்டுதல். இரண்டும் வெவ்வேறு யோகங்கள் என்பதை நான் அறியாதவனல்ல என்பதையும் ஜெயமோகன் அறியாதவரல்ல. கண்ணனின் இயல்பு விவாதிப்பதல்ல. விவாதம் என்பது எதிர்தரப்பின் கருத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வதாக இருக்கும். ஆனால் ‘நீ யோசித்துப் பார்’என்று கண்ணன் அர்ச்சுனனிடம் சொல்வது,அவனை உரையாடலில் ஈடுபடுத்தும் நோக்கில்தானே தவிர அர்ச்சுனனின் சுய சிந்தனைகளைக் கேட்கும் பொருட்டல்ல.
அர்ச்சுனனையும் கண்ணனையும் நர நாராயணர் என்று சொன்னாலும்,கண்ணனின் பூரணத்துவம் பற்றி பிரக்ஞையற்றவனாகவே அர்ச்சுனன் இருக்கிறான்.ஓர் உண்மையை தான் சூரியனுக்குச் சொன்னதாகவும் சூரியன் இஷ்வாகுவுக்குச் சொன்னதாகவும் கண்ணன் சொல்லும்போது “நீ எப்படி சொல்லியிருக்க முடியும்” என்று கேட்கிறான் அர்ச்சுனன். அதன்பிறகு தான் கடவுள் என்று சுய அறிமுகம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.
அதனால்தான் சுவாமி சித்பவானந்தர்,கீதை உரையின் முன்னுரையில்”அர்ச்சுனன் விலங்குத் தன்மையைக் கடந்து வந்துள்ளான்.ஆனால் தெய்வத்தன்மையில் இன்னும் அவன் நிலைபெறவில்லை” என்கிறார். கண்ணனுடன் கலந்துரையாடும் தகுதி பாண்டவர்களில் சகாதேவனுக்கே உண்டு. கண்ணனின் பூரணத்துவத்தை அறிந்தவன் அவனே. தான் தூது போகலாமா வேண்டாமா என்ற கேள்வியை பாண்டவர்கள் ஒவ்வொருவரிடமும் கண்ணன் ஒரு பகடையைப் போல் உருட்டுகிறான். ஒவ்வொருவரும் தன்னிடம் கண்ணன் கருத்துக் கேட்பதாய் எண்ணிக் கொண்டு ஒவ்வொரு விதமாய் பதில் சொல்கிறார்கள். ஆனால் கண்ணன் ஏற்கெனவே எல்லாம் முடிவு செய்துவிட்டுத்தான் வந்திருக்கிறான் என்பதை சகாதேவன் ஒருவனே அறிந்திருக்கிறான்.”குறித்த செய்கை அந்தத்தில் முடியும் வகை அடியேற்குத் தெரியுமோ ஆதி மூர்த்தி” என்கிறான்.அவனைத் தனியே அழைத்துப் போய் விவாதிக்கிறான் கண்ணன்.
அர்ச்சுனனுக்கோ விசுவரூப தரிசனம் கிட்டும் வரையில் நாரணனாகிய பூரணனே கண்ணன் என்பதே தெரியாது.அதனால்தான் “தனித்திருந்த போதோ பிறர் மத்தியிலோ உங்களை அவமதித்ததெற்கெல்லாம் மன்னிப்புக் கேட்கிறேன்” என்கிறான்.(விசுவரூப தரிசன யோகம் -41,42 சுலோகங்கள்)மைந்தனுக்குத் தந்தை போலவும் காதலிக்குக் காதலன் போலவும் தோழனுக்குத் தோழன் போலவும் பொறுத்தருளக் கடவது” என்கிறான்( வி.த.யோகம்-44வது சுலோகம்).இவனை சுயபுத்தி கொண்டு யோசித்துப் பார் என்று கண்ணன் உண்மையான பொருளில் சுட்டியிருக்க வாய்ப்பில்லை என்பதையே முந்தைய பதிவில் சுட்டியிருந்தேன்.
முரணியக்கம் என்பதன் மேலைச்சிந்தனையைச் சொல்லி அதன் இந்தியமரபாக யோக மீமாம்சை பற்றி
மூன்றாம் நாள் உரையில் சொல்கிறார். யோகம் என்னும் சொல் மூன்று விதங்களில் புரிந்து கொள்ளப்படுவதை சுட்டுகிறார்.ஆந்த சொல்லுக்கு மூன்று பொருள்கள் உண்டு என்கிறார். 1)யோகப் பயிற்சிகள் 2)சாங்கிய தரிசனத்தின் துணை தரிசனம்(பிரபஞ்சமாகிய பருப்பொருளில் முக்குணங்கள் பொருந்தியிருக்க உயிர்கள் தன் மூலமாகிய பரம்பொருளில் ஒன்றாதல் 3) கீதையில் சுட்டப்படும் ஒன்றாதல்
சொல்லப்போனால் மூன்று இடங்களிலுமே யோகா என்னும் சொல் ஒரே பொருளில்தான் வழங்கி வருகிறது. வெகுமக்கள் புரிதல் என்பது வேறு. யோக மரபில் யோகாசனத்தைக் குறிப்பதல்ல யோகா. அது படைப்பின் மூலத்துடன் உயிர் பொருந்துகிற இலக்கைக் கொண்டு மேற்கொள்ளும் சாதனைகளைக் குறிக்கும்.
ஈஷா வகுப்புகளில் ஒருவர் “சத்குரு! யோகா செய்தால் உடல்நலம் மனநலம்,ஆனந்தம் ஆகியன கிடைக்குமாமே” என்றபோது “ஆமாம்!அவையெல்லாம் யோகாவின் பக்க விளைவுகள். விடுதலையே யோகாவின் நோக்கம்” என்றார்.யோகாவின் முதல்படி ஆசனத்துடன் பொருந்துவது.’ஸ்திரம்,சுகம்,ஆசனம்.”ஊச்சம் படைப்பின் மூலத்துடன் பொருந்துவது.
ஜெயமோகனே விளக்கும் இரண்டாம் இடமும் அதையே சொல்கிறது.பிரபஞ்சமும் நாமும் வேறல்ல’ஏன்பது. அர்ஜுன விஷாத யோகம் என்பதே அர்ச்சுனனுக்கு வருகிற பதட்டம்கூட தன் மூல இயல்புடன் பொருந்துவதற்குத் தயாராக ஒரு வாய்ப்பு என்பதையே புலப்படுத்துகிறது. எனவே வெகுமக்கள் வேறு விதமாய் விளங்கிக் கொண்டாலும் யோக மரபிலும் தத்துவ மரபிலும் யோகம் என்னும் சொல் பொருந்துதல்-ஒருமை என்ற விதங்களிலேயே புரிந்து கொள்ளப்படுகிறது.
முரணியக்கம் என்பது ஏற்கும் தன்மையிலேயே நிலை கொள்கிறது .காயிலே புளிப்பவனும் கனியிலே இனிப்பவனும் நோயிலே படுப்பவனும் நோன்பிலே உயிர்ப்பவனும் அவனே என்னும் ஏற்கும் தன்மையே தெளிவு,சரணடைதல் விலகியிருந்து காணுதல் எல்லாவற்றையும் நிகழ்த்துகிறது