கீதை தொடர் உரைகளின் நிறைவு நாளில் முந்தைய மூன்று நாட்களின் உரைகளை முதலில் தொகுத்துச் சொன்ன ஜெயமோகன் கீதையை வாசிக்கும்முறை பற்றி விரிவாகச் சொன்னார்.மனனம் ஸ்வாத்யாயம்,தியானம்என்னும் படிநிலைகளுக்கு உட்படுத்தி,ஒரு பிரதியை அணுகும்போது வாசிப்பனுபவம் முழுமை பெறுவதை விளக்கினார்.

அப்போது எனக்கொன்று தோன்றியது. தியன சுலோகங்கள்,அல்லது நம் முயற்சியின்றி நமக்குள் ஒலிக்கத் தொ0டங்கும் மூத்தோர் வரிகள்,தனி கவனத்திற்குரியவை.எப்போதோ அவை எழுதப்பட்டு விட்டாலும் நமக்கென்று முதிர்கணமொன்றில் அருளப்படுபவை.

ஆயிரமாயிரம் வரிகளைக் கடந்து வருகையில் நம் சூழலுக்கொப்பவோ நம் தகுதிக்கொப்பவோ சில சூழல்களுக்கொப்பவோ அன்றைய பொழுதுக்கான வரிகள் சில நாட்களில் நம்மைத் தேர்ந்து தேடி வரும்.நம்முடன் இருக்கும்.

குறிப்பிட்ட காலமொன்றில் நான் யோகப் பயிற்சிகளையோ உடற்பயிற்சிகளையோ சரிவர மேற்கொள்ளாமல் விடுத்த காலங்களில்,நீரிழிவு நோய் தீவிரப்பட்டு இன்சுலின் ஊசி செலுத்திக் கொள்ள வேண்டி வந்தது. சில மாதங்களுக்குப் பிறகு,மருந்தினை நிரப்பி ஊசியை உட்செலுத்தும் நொடியில் ஒரு தன்னிரக்கம் தோன்றுவதை உணர்ந்தேன்.அந்தத் தன்னிரக்கத்தை வெல்ல வேண்டியவனானேன்.ஈஷாவில் எனக்கு உணர்த்தப்பட்ட ஏற்கும் தன்மை ஓர் உந்துதலாக இருந்தது.

என் கவனக்குறைவாலோ கர்மவினைகளாலோ வந்ததே இந்நோய் என்பது ஒரு புரிதலாகவும் உணர்தலாகவும், என்னுள்டஆழப்பட்டது.அப்போது மூன்று சொற்கள் எனக்குள் தீவிரமாகப் பதிந்தன. “நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்”.அந்தச் சொற்களை இறுகப் பற்றிய வண்ணமே அந்த கூர்முனைப் பொழுதுகளை நான் கடந்து வருகிறேன்.

வழுக்குகிற நிலத்தில் ஊன்றுகோல் போல ,நம்மை சான்றோரின் சொற்கள் தாங்கிப் பிடிக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்”.

அந்த வரிகள் நினைவின் அடுக்குகளிலிருந்து வருபவையல்ல..ஆகாயத்தின் அடுக்குகளிலிருந்து அனுப்பப்படுபவை.அதே போல நம்மைக் கண்டடையும் வரிகள் ,ஆசிரியர்கள், நூல்கள் குறித்தெல்லாம் இன்றைய உரையில் விரிவாகப் பேசினார் ஜெயமோகன்.நிலா நிரம்பிய நள்ளிரவொன்றில்,பாலைவனமொன்றைப் பார்க்க நேர்கையில் சர்வமும் ஜகம் மீதான மோகத்தில் இருக்கிறது என்னும் வரி தன்னுள் சுழன்றதைச் சொன்னார். தன் குருவுடன் நீண்ட நடைக்கான வாய்ப்பு கிடைக்கையில் கீழே கிடந்தஒற்றை இறகை அவர் கையிலேந்தி அதிலிருந்த மூன்று நிறங்கள் முக்குணங்களின் அடையாளமாய் இருப்பதை சுட்டி,பறக்க விரும்பும் பறவையின் தீவிரம் அந்தச் சிறகில் சுடர்வதாய் சொல்ல, தான் பிரமீளின் கவிதையைச் சொன்னதையும் காட்சிப்படுத்தினார்.

கீதையின் அமைப்பு யோகம் என்னும் சொல் போன்றவை குறித்துப் பேசிய ஜெயமோகன், முந்தைய நாள் உரைக்குப் பின்னர் நண்பர்களுடன் பேசும்போது ஒருவர் சாங்கிய யோகத்திலிருந்து கர்ம யோகியாகி பின்னர் ஞானயோகத்துக்கு நகர்வதுபோல அது பின்னோக்கி நகர வாய்ப்பிருக்கிறதா என்னும் கேள்வி எழுந்ததை சுட்டி ஞானத்திலும் காலத்திலும் முன்னோக்கிய நகர்வே சாத்தியம் என்றார்.

திருநீறு பூசினால் சளி பிடிக்காது என்பது போன்ற அசட்டு அறிவியல் விளக்கங்களை தான் ஏற்றுக் கொண்டதில்லை என்ற ஜெயமோகன் ஒருபடி மேலே போய் ” இந்த அடையாளங்கள் அனைத்துமே குறியீடுகள்தான். அறிவியல்தன்மை இல்லை என்றார். அசட்டு அறிவியல் விளக்கங்கள் நமக்கும் தேவையில்லைதான். ஆனால் யோக அறிவியல் இதனை வேறு விதமாகப் பார்க்கிறது. சூட்சும நிலையில்,மனித உடலில் உள்ள சக்கரங்களில் திருநீறு இடும்போது ஏற்கும் தன்மை அதிகமாகிறது.சக்திமிக்க தலங்களின் அதிர்வைப் பெற முடிகிறது.வழிபாட்டில் பயன்படுத்தப்படும் ஒவ்வொன்றும் கருவிகளாகவே கருதப்படுகின்றன.” பூதி சாதனம்” என்றொரு சொல் உண்டு.

கீதையின் வாசகங்களுக்கான பொருள் சூழல்சார்ந்தவையே தவிர நேர்ப்பொருள் கொள்ளலாகாது என்றார்.Terxt ஐ விடContext தான் முக்கியம்.அவிர்ப்பாகத்தை உண்ணுபவன் அதிக பலனடைவான் என்பதை நேரடியாகப் பொருள் கொண்டால் வேள்வியில்கிடைக்கும் உணவை மூன்று வேளையும் சாப்பிடுவது என்றாகிவிடும். பிறருக்கு நலன் தருவதை நினைந்து செய்யும் எதுவும் வேள்வி. உலகம் வாழ வாழ்வோர் உலகம் நலன் பெற தான் உழைக்கும் நல்லோர் என்பதே பொருள் என்றார்.அவர் அப்படி சொல்கையில்
“ஊருக்கு உழைத்திடல் யோகம்-நலன்
உற்றிடுமாறு வருந்துதல் யாகம்” என்ற மகாகவி பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தன.

அதேபோல,மூவகைக் காமங்களுக்கான உவமைகள் பற்றிச் சொன்னார்.நெருப்பிலிருந்து எழும் புகை போன்ற காமம்,கண்ணாடியை மறைக்கும் மாசு போன்ற காமம், கருவை மூடும் கருப்பை போன்ற காமம். இதில் மூன்றாவது வகை காமம் பத்திரமானது என்றார். இறை ப்பிரேமையை இவ்வகைக் காமமாக உருவகிப்பது வழக்கம்.”மற்றை நம்
காமங்கள் மாற்று” என்னும் ஆண்டாளின் வரியில் காமம் என்னும் சொல் உலகப் பற்றுகள் அனைத்தையும் குறித்தால் கூட மூவகைக் காமங்களையும் அந்த வரியில் பொருத்திப் பார்க்க முடியும்.

கீதையில் கண்ணன் “நான்” என்று சொல்லும் இடங்கள் சில இடங்களில் கண்ணன் என்னும் ஆளுமையின் குரலாகவும் சில இடங்களில் பிரம்மத்தின் குரலாகவும் இருப்பதை சுட்டினார்.கீதையை அணுகுவதற்கான திறப்புகளை இந்த உரைத் தொடர்கள் வந்தன. கண்ணனே கீதைக்கு சிறந்த பாஷ்யம் என்றார் சுவாமி சித்பவானந்தர். ஜெயமோகனின் உரைகள் கண்ணனை மையமிடாமல் ஞானப்பெருவழியின் உன்னதப் பாதையாக கீதையை அணுகியது இதன் தனிசிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *