இந்தக் கேள்வி,வாழ்வின் எத்தனையோ தருணங்களில் தலைகாட்டியிருக்கிறது.நம்மால் ஏற்க முடியாத கருத்துக்களையோ,உடன்பட முடியாத யோசனைகளையோ யாரேனும்
சொல்லும்போது, சில சமயங்களில் மறுத்திருக்கிறோம்.பல சமயங்களில்
மென்று முழுங்கியிருக்கிறோம்.ஏன் மென்று முழுங்குகிறோம்?
விவாதங்களை,தெரிந்து கொள்வதற்கும் திருத்திக் கொள்வதற்குமான
சந்தர்ப்பங்களாய் சிந்திக்காமல்,சர்ச்சைக்கான வாசல்களாய்ப் பார்ப்பவர்கள்
மாற்றுக் கருத்துச் சொல்ல மணிக்கணக்கில் யோசிப்பார்கள்.

இது பொதுவான கருத்து.

இதையும் தாண்டிப் பார்த்தால் சில அடிப்படைக் காரணங்கள் உண்டு.
சின்னஞ்சிறிய வயது முதல் நமக்குப் போதிக்கப்பட்டுள்ள பால பாடங்களில் ஒன்று,”எதிர்த்துப் பேசாதே” என்பது.பெற்றோர்,ஆசிரியர்,மூத்தவர்கள் என்று எல்லோரோடும் இப்படி
ஒரு கட்டாய உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக மாற்றுக் கருத்தை மனந்திறந்து சொல்லும் உணர்வு,மழலைப்பருவத்திலேயே பலருக்கும் மரத்துப்போய் விடுகிறது.
இன்று காலம் மாறி வருகிறது.ஊடகங்கள் போதிக்கும் உலக அறிவும்,இணைய தளங்கள் மூலம் இளைய தலைமுறை பெறும் பன்முகப் பார்வையும்,பல விஷயங்களைத்
தீர்க்கமாக யோசித்து,தெளிவாக விவாதிக்கும் துணிவைத் தருகிறது.
வீட்டில் குழந்தைகள் எதையாவது பேசினால்,”பெரியவங்களை எதிர்த்துப் பேசாதே”என்று 144 போடாமல்,தங்கள் மறுப்புகளை அவர்கள் வெளிப்படுத்த வாய்ப்புக் கொடுங்கள்.அவர்கள் துணிவோடும் தெளிவோடும் வலர இது துணை செய்யும்.

எதிராக யாரிடமாவது எதையாவது சொன்னால் பெயர் கெட்டு விடும் என்றொரு மூட நம்பிக்கையும் காலங்காலமாகவே நிலவி வருகிறது.நாம் நினைக்கிற விஷயத்தை உறுதியாக,அதே நேரம் மென்மையாக எடுத்துச் சொல்லும்போது,நம்மீதான மதிப்பு அதிகரிக்குமே தவிர,பேர் கெட வாய்ப்பே இல்லை.

ஒரு கருத்துக்குச் சொல்லப்படும் மறுப்பு,சொன்னவருக்கான எதிர்ப்பு என்று தவறாக எடுத்துக் கொள்ளப்படுவதும் உண்டு.இந்த தர்மசங்கடத்தைத் தவிர்ப்பதற்காகவே பலர்,தப்புத் தப்பான கருத்துக்களுக்கும் தலையாட்டிவிட்டுப் போய் விடுகிறார்கள்.
“பள்ளமே இமயம் என்பான்
பாட்டியே குமரி என்பான்
வெள்ளியே ஈயம் என்பான்
வெந்தயம் இனிக்கும் என்பான்
கள்ளியே முல்லை என்பான்
காக்கையைக் குயில்தான் என்பான்
உள்ளவன் சொல்வதெல்லாம்
உண்மையல்லாமல் என்ன?”
என்றார் கவியரசு கண்ணதாசன்.
கருத்தைச் சொல்பவர் கனம் பொருந்தியவராக இருக்கும் பட்சத்தில்,
அவரைக் காக்காய் பிடிக்க வேண்டியிருந்தால்,காக்கையைக் குயில் என்று ஒப்புக் கொள்ளும் சமரசத்தைச் செய்து தீர வேண்டி வருகிறது.

மாற்றுக் கருத்தை மனம் நோகாமல் சொல்ல வேண்டிய முறையில் சொன்னால் யாரும் கேட்டுக் கொள்வார்கள்.சொல்லும் விதமும் சொல்வதன் நோக்கமுமே முக்கியம்.
மாற்றுக் கருத்துகளைச் சொல்வதும் கேட்பதும்,வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.ஒரு யோசனையை ஏற்க முடியாத போதுதான் அதைவிட நல்ல யோசனை ஒன்று பிறக்கிறது.
மாற்றுக்கருத்தை சரியான கோணத்தில் அங்கீகரிக்கிற போது, புதிய உறவும்,நம்பகத்தன்மையும் மலர்கிறது.
குளிர்காலத்தைக் கோடை மறுக்கிறது.வெய்யிலை மழை மறுத்துப் பேசுகிறது.
பருவ மாற்றங்களால் பூமி பயன் பெறுகிறது.

மறுப்புக் கருத்தைச் சொல்லவும் சரி,மாற்றுக்கருத்தை ஏற்கவும் சரி,
தயக்கம் காட்டாதீர்கள்.ஏற்க முடயாததற்கெல்லாம் தலையாட்டாதீர்கள்.
புதிய வளர்ச்சிகளைக் கட்டாயம் காண்பீர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *