எனக்குள் இருக்கிற நிர்வாகி
எழுந்து பார்க்கிற நேரத்தில்
கணக்குகள் நிரல்கள் திட்டங்கள்
கண்ணைக் கட்டும் காலத்தில்
தனக்குள் திட்டம் பலதீட்டி
தாளில் கணினியில் அதைக்காட்டி
கனக்கும் இமைகள் கசக்குகையில்
களத்தின் சூட்சுமம் விரிகிறது

கேடயம் கவசம் துணையின்றி
கத்தியை எடுப்பது வீரமல்ல
பாடம் இதிலே புரிகிறது
புதிதாய் வியூகம் அமைகிறது
மூடிக் கிடக்கும் திசைதிறந்து
முன்னே முன்னே நடைநடந்து
தேடலைத் தொடர்தல் வாழ்வென்னும்
திடமும் அதிலே வளர்கிறது

சீறும் அலைகள் சவால்களெனில்
செய்யும் தொழிலே ஒருபடகு
மாறும் நாட்களில் உன்படகை
மோதும் கப்பல் ஆக்கிவிடு
ஏறும் இறங்கும் அலைகளினால்
ஏதும் இடர்ப்படக் கூடாது
தேறும் மனதின் கனவுகளோ
தேய்பிறை ஆகக் கூடாது

எட்டுத் திசைகளும் திறந்திருக்க
எங்கோ பசுமை வளர்ந்திருக்க
தொட்டுத் திரும்பும் முடிவோடு
தினமும் எம்பிக் கிளம்பிவிடு
கட்டுமரத்தில் தொடங்கிய நீ
கப்பல் கட்டி முடித்திடுவாய்
பட்ட பாடுகள் மறவாதே
பொறுமை இருந்தால் ஜெயித்திடுவாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *