ஞானிகளுக்கு கல்வி தேவையில்லை. நாம் வாசிக்கும் அளவு அவர்கள் வாசிக்கிறார்களா என்பது கூட ஐயமே.ஆனால் நாம் நினைத்தும் பாராத பல நுட்பங்கள் அவர்களுக்குப் புரிபடுகின்றன.காணாதன காண்கிறார்கள்.காட்டாதன காட்டுகிறார்கள். ஒரு நூலைப் புரட்டிய மாத்திரத்தில் அதன்
உட்பொருள் இன்னதென உணர்த்துகிறார்கள்.

ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஒருமுறை சொன்னார்,”ஒரு புத்தகத்தைப் புரட்டிய மாத்திரத்தில் அதை எழுதியவரின் மனம்
எத்தகையதென்று பிடிபடுகிறது.அந்த மனத்திலிருந்து என்ன வெளிவரும்என்று தெரியுமாதலால் அதை முழுவதும் படிக்காமலேயே அதில்
என்ன இருக்கிறதென்று தெரிந்து விடுகிறது” என்று.

எல்லோராலும் அறியப்படாத அளவு ரகசியமும் ஆழமும் கொண்டவைநான்மறைகள். நான்மறைகளாலும் அறியப்பட முடியாத அற்புதமாய்
விளங்குபவள் அம்பிகை. ஆனால் அம்பிகையை துணையாய் தொழும்தெய்வமாய் பெற்ற தாயாயுணர்ந்துவிட்டால் வேறென்ன வேண்டும்?
அம்பிகையையே நேரடியாக விளங்கிக் கொண்டபிறகு அம்பிகையை விளக்க முற்படும் வேதங்கள் விளங்காதா என்ன?
“அறிந்தேன் எவரும் அறியா மறையை” என்கிறார் அபிராமி பட்டர்.

யாராலும் அறியப்படாத மறையை அறிந்து கொண்டதன்மூலம் அபிராமிபட்டர் தெளிந்ததென்ன?

“அறிந்தேன் எவரும் அறியா மறையை;அறிந்து கொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே”

ஏற்கெனவே அனுபவரீதியாக அபிராமியின் திருவடிகளே அனைத்தும் என உணர்ந்திருந்த உண்மையை நால்வேதங்களையும் கற்றதன்மூலம் உறுதிசெய்து கொள்கிறார் அபிராமி பட்டர். அம்பிகையின் திருவடிகளே சதம்என்பது எல்லா வகைகளிலும் உறுதிப்பட்ட பிறகு,அதுவரை நம் உறவு
வட்டத்தில் தென்பட்ட மனிதர்களில் சிலர் தாமாகவே விலகி விடுவதுஇன்றும் கண்கூடாய் பலரும் காண்கிற ஒன்று.எந்தப் பயனையும்
தராத வெற்றுத் தொடர்புகள் விலகுவது தாமாகவும் நிகழும். நாமாகவும்முயன்று விலக்குவோம்.

அப்படி விலகிச் செல்பவர்கள் யாராக இருப்பார்கள் என்றால்,அம்பிகையின் அடியார்களுடைய பெருமைகளை எண்ணும் நற்பேறு வாய்க்காத அளவு தீய வினைகளில் கட்டுண்டு,நரகத்தில் தலைகீழாய் விழக்கூடியவர்களாகத்தான்
இருப்பார்கள்.அவர்கள் அருள்நெறி சாராதவர்களாக, தங்கள் குறுகிய விருப்பங்களன்றி வேறொன்றும் பாராதவர்களாக இருப்பார்கள்.

அம்பிகையை உணர்ந்தவர்களுக்கு வேதங்கள் கல்லாமலே கூடப் புலப்படும்.
ஆனால் அதுபோதாது. சராசரிக்கும் கீழான எண்ண ஓட்டங்கள் கொண்ட மனிதர்களைவிட்டு விலகுவதும் நிகழ வேண்டும்.
அதுதான் அருள்நெறிவிட்டு வழுவாத வாழ்க்கைப் பயணத்தை உறுதி செய்யும்.

“அறிந்தேன் எவரும் அறியா மறையை;அறிந்து கொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே;திருவே;வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தேவிழும் நரகுக்கு உறவாய மனிதரையே”

அப்படியானால் அம்பிகையின் அன்பர்கள் பெருமையை எண்ண வேண்டுமல்லவா!அபிராமியின் அடிதொழும் அன்பர்களின்
பட்டியலை வெளியிடுகிறார் அபிராமி பட்டர். இது முழுப்பட்டியல் அல்ல,முதல் பட்டியல்.தேர்தல் காலத்தில் வேட்பாளர்களின்
முதல் பட்டியல் ஒன்று வெளியாகுமல்லவா! அப்படித்தான் இதுவும்..

“மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோமளமே”

அம்பிகையை வழிபடுவதில் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும்மாயா முனிவர்களுக்கும் போட்டா போட்டிதான். இதில் மாயா
முனிவர் என்பது நீண்டகாலம் சூட்சும வடிவில் வாழும் முனிவர்களைக்குறிக்கும்.அதேநேரம், திருக்கடவூரில் மரணமில்லாத சிரஞ்சீவி நிலைபெற்றமார்க்கண்டேயரையும் குறிக்கும்.

அம்பிகையை அன்றாடம் வணங்குபவர்கள் பட்டியலில் மார்க்கண்டேயர்இடம் பிடித்திருப்பதில் ஒரு சுவாரசியமான காரணம் உண்டு. எமதர்மனை
காலசம்ஹாரமூர்த்தியாகிய சிவபெருமான் இடது திருவடியால் உதைத்தார்.இடது பாகம் அம்பிகைக்குரியது.ஒரு தரப்பினருக்கு சார்பாக அரசாணைவருகிறதென்றால் அந்த அரசாஆஇயை நிறைவேற்றுபவர் அரசாங்க உயர் அலுவலராக இருப்பார்.ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் முதலமைச்சரைசந்தித்து நன்றி தெரிவிப்பார்கள். முதலமைச்சர் சொல்லி அலுவலர் செய்தார் என்பதுதான் காரணம். அதுபோல் கூற்றுதைத்தவர் சிவபெருமான் என்றாலும்வாமபாகம் அம்பிகைக்குரியது. எனவே மார்க்கண்டேயர் நன்றி தெரிவித்து வணங்குவதில் வியப்பென்ன??

அம்பிகையின் திருவடித் தாமரைகளை எத்தனைபேர் வணங்கினாலும் அது வாடுவதில்லை.”சேவடிக் கோமளமே” என்பதற்கு திருவடித்தாமரை என்றும்பொருள். அனைவராலும் வணங்கப்படும் திருவடிகளைக் கொண்ட தாமரையேஎன்றும் பொருள்.

கொன்றைத்தார் சூடிய தன் சடாபாரத்தில் குளிர்ந்த நிலவையும், நாகத்தையும் கங்கையையும் சூடியவராகிய சிவமெருமானும் அம்பிகையும் தன்னுள்ளத்தில் வந்துபொருந்தி நிற்க வேண்டுமென்று கேட்கிறார் அபிராமிபட்டர்

மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றைவார் சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே

அம்பிகையின் திருவடிகளை சிவபெருமானே வணங்குகிறார் என்னும்செய்தியைப் பின்னர் காணப் போகிறோம்.எனினும் தம்பதி சமேதராக
வருகிறபோது உன் கணவரும் நீயும் என்று சொல்வதுதானே மரபு.தன் மகள் கணவனுடன் வருகிற போது தந்தையின் நாவில் வரும்
முதல் வார்த்தை “வாங்க மாப்பிள்ளை”என்பதாகத்தான் இருக்கும்.அதுபோல் பெருமானின் மேன்மைகளை முதலில் சொல்லி அவரும்
நீயுமாய் என் புந்தியில் வந்து பொருந்துங்கள் என்று வேண்டுகிறார்.

ஒரு பீடம் அமைக்கப்படுகிறதென்றால் அதில் எழுந்தருளப் பெறவுள்ள மூர்த்திக்கு மிகச்சரியாக அந்த பீடம் அமைக்கப்படும்.மூர்த்தியைக்
கொணர்ந்து பீடத்தில் அமர்த்துகையில் அது மிகச்சரியாகப் பொருந்தும்.தன்னுடைய புந்தியானது, அம்மையும் அப்பனும் வந்தமரும் விதமாய்
வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக,”புந்தியில் வந்து பொருந்துகவே”என்கிறார் அபிராமி பட்டர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *