கடலைக் கடைந்ததே வேண்டாத வேலை!

திரிபுரங்களை ஆள்பவள் திரிபுரசுந்தரி.மனிதனின் உடல் மனம்
உயிர் ஆகிய முப்புரங்களையும் அவளே ஆள்கிறாள்.
இந்த முப்புரங்களிலும் உள்ளும் புறமுமாய்ப் பொருந்துகிற
அபிராமவல்லியின் திருமுலைகள்
செப்புக்கலசங்களைப் போன்றவை.
தனபாரங்களால் அம்பிகையின் இடைகள் வருந்துகின்றன.

சைவசித்தாந்தத்தில் அம்பிகைக்குத் தரப்பட்டிருக்கும் மிக முக்கியமான திருநாமம் மனோன்மணி. நெற்றிப் புருவங்கள் நடுவிலான பீடம்அவளுடையது.மனவுறுதிக்கும் மேம்பட்ட ஆத்மசாதனைக்கும் அவளேஅதிபதி.கடலின் அலைகள் சலசலக்கின்றன.நடுக்கடல் சலனமில்லாமல்
இருக்கிறது. சலனம் கடந்த மனவுறுதியை தியானத்தினாலோ ஞானத்தினாலோ
அருள்பவள் மனோன்மணி. அவள் ஆற்றிய காரியம் ஒன்று இருக்கிறது.

தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம்
எழுந்தது.அதனை சிவபெருமான் அருந்தினார்.அம்பிகை தன்
திருக்கரத்தை பெருமானின் கண்டத்தில் வைக்க நஞ்சு அங்கேயே
தங்கியது.அது நீலகண்டமானது.இப்படித்தான் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் அபிராமிபட்டர் சொல்வது கொஞ்சம் புதுமையாய் இருக்கிறது.சிவபெருமான்அருந்திய நஞ்சு அம்பிகை கைபட்டு அமுதமாகிவிட்டதாம். இத்தனைக்கும் அந்த நஞ்சைக்கூட அவள் நேரடியாய்த் தொடவில்லை.பெருமான் நஞ்சை அருந்தியபின் வெளியே கழுத்தில்தான் அவள் கைபட்டது. அதற்கே நஞ்சு அமுதமாகிவிட்டது. அதாவது அமுதம் வேண்டுமென்று தேவர்களும்அசுரர்களும் கடலைக் கடைந்ததே வேண்டாத வேலை என்கிறார் அபிராமி பட்டர்.

ஒரு குடம் நஞ்சைக் கொண்டுவந்து அம்பிகையின்
திருமுன்னர் வைத்திருந்தால் அவள் அதனைத் தொட்டு அடுத்த விநாடியே அமுதமாக்கித் தந்திருப்பாள்!!

தாமரை மலர்மேல் அழகுற வீற்றிருக்கும் அம்பிகை என்னும் பொருளில் “அம்புயமேல் திருந்திய சுந்தரி” என்கிறார். தாமரையில்
வீற்றிருப்பவர்கள் கலைமகளும் அலைமகளும்தான். ஆயிரம்
இதழ்கள் கொண்ட சஹஸ்ரஹாரத்தின் உச்சியில் வீற்றிருக்கும்
பராசக்தி என்பது இங்கே கொள்ள வேண்டிய பொருள். அவள் சுந்தரி மட்டுமல்ல. அந்தரியும் கூட. நம் ஆன்மாவின்
அந்தரங்கமாய் நிற்கக்கூடியவள்.ஆகாயமாகிய அந்தரமெங்கும்
நிறைந்திருக்கக் கூடியவள்.அவளுடைய திருப்பாதங்கள் தன்
சென்னியின்மேல் பதிந்திருப்பதை பிரத்யட்சமாக உணர்கிறார் அபிராமி பட்டர்.

“பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே”

ஓர் உணர்வு நமக்குள் பிரத்யட்சமாக உருவாகிவிட்டால் அதையே
திரும்பத் திரும்பச் சொல்வதுதான் நம் இயல்பு.காய்ச்சல் கண்டவர்
கூட “குளிருதே! குளிருதே!”என்றே ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பார்.தன்னுடைய சிரசின் மேல் அம்பிகையின் பாதங்கள் பதிந்த அனுபவம்அபிராமி பட்டரின் உச்ச அனுபவம்.அதையே மகிழ்ந்து மகிழ்ந்துசொல்கிறார்.

தன் சிரசின் மீது அம்பிகையின் மலரனைய திருவடிகள்
பதிந்திருப்பதையும் அது பொன்போல் ளிர்வதையும் சதாசர்வ காலம்
மனக்கண்ணால் காணும் பேறு பெற்றவரல்லவா அவர்.

“சென்னியது உன்பொன் திருவடித்தாமரை”
என்கிறார். திருவடி தீட்சையே கிடைத்தபிறகு மந்திரதீட்சை
தானாகவேஅமையுமல்லவா!

“சென்னியது உன்பொன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன்திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
முன்னிய உன்னடியாருடன் கூறி முறைமுறையே
பன்னியது என்றும் உன் பர ஆகம பத்ததியே”

திருவடி தீட்சையும் மந்திர தீட்சையும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அடியார்களுடனான சத்சங்கம்.அதுவும் மூத்த அடியவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.

“பழ அடியீர் !புத்தடியோம்! புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ ” என்ற மணிவாசகரை அடியொற்றி அபிராமிபட்டரும் அபிராமியம்மை பதிகத்தில் “முன்னி உன் ஆலயத்தின் முன்போதுவார் தங்கள் பின்போத நினைக்கிலேன்
மோசமே போய் உழன்றேன்”என்று பாடுவார்.

இங்கே,அவர்களுடன் கூடி அம்பிகையின் பெருமைகளைப் பேசும்விதமாய்ஒழுங்குபடுத்தப்பட்ட பரஆகம பத்ததிகளை பலமுறை பாடிப்பரவும் பேறுகிடைத்ததில் அபிராமிபட்டர் ஆனந்திக்கிறார்.

“பன்னுதல்” என்றால் பலமுறைசொல்லுதல் என்று பொருள்.வசிட்டர் பரதனுக்குப் பெயர் வைக்கும்போது
அந்தப்பெயரை பலமுறை சொல்லி சொல்லிப் பார்த்து பிறகு வைத்தாராம்.
“பரதன் எனும்பெயர் பன்னினன்”என்பார் கம்பர்.

“முறைமுறையே” என்ற சொல் இன்னும் அழகு. ஒரு வழிபாட்டு நெறியில்நீண்டகாலமாய் இருப்பவர்களின் வழிகாட்டுதல் நமக்குக் கிடைக்கும்போது,
அவர்கள் பின்பற்றும் முறையே முறை எனும் தெளிவும் துணிவும்
ஏற்பட்டு விடுகிறது. முன்னோர் சொல்லைப் பொன்னேபோல் போற்றுதல்
என்பார்கள். முறைமை அறிந்தவர்களின் முறையையே பின்பற்றி
அம்பிகை வணக்கத்திற்கான ஒழுகலாறுகளில் ஈடுபட , அதேநேரம்
சிரசின் உச்சியில் அவள் திருவடிகளும் மனதுக்குள் அம்பிகையின்
திருமந்திரங்களும் நிலைபெற்று நிற்குமென்றால் இன்னும் வேறென்ன .வேண்டும்.

( தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *