அந்தாதியில் அம்பிகையின் திருமுலைகள் பற்றிய குறிப்புகள் ஏராளமான இடங்களில் தென்படுகின்றன. அவை பிரபஞ்சத் தாய்மையின் பெருஞ்சின்னங்கள். பரஞானம் அபரஞானம் ஆகியவற்றின் அடையாளங்கள். அம்பிகையின் அளப்பரிய கருணைப் பெருக்கத்தின் குறியீடுகள். அதன் பேரருட்தன்மையைத் தாங்கும் திறன் யாருக்கும் இல்லாததால் அவள் உண்ணாமுலை யம்மை என்று குறிக்கப்படுகிறாள்.

அன்னையின் திருமுலைப்பாலை அவளே குழைத்து ஊட்டி ஞானக்குழந்தைகளை உய்விக்கிறாள். அன்னையின் திருமுலைகள் கருத்திருக்கின்றன. சிவபெருமானின் திருவிழிகளை ஒத்திருக்கின்றன. இங்கொரு கேள்வி எழலாம். சிவபெருமானுக்கு மூன்று திரு விழிகளாயிற்றே! அதிலும் ஒரு பொருத்தம் இருக்கத் தான் செய்கிறது.

மதுரையில், பாண்டியனின் திருமகளாய் தடாதகைப் பிராட்டி என்னும் திருநாமத்துடன் அம்பிகை தோன்றியபோது அவளுக்கு மூன்று திருமுலைகள். சோமசுந்தரக் கடவுளை நேருக்கு நேராக பார்த்ததில் மூன்றாம் திருமுலை மறைந்தது.

குறும்புக்காராகிய காளமேகம் இந்தக் கதையைச் சொல்ல வரும்போது, “தென்னம் பிள்ளைக்கு ஓரு குலை மூன்று குரும்பை” என்கிறார். தென்னவனின் பிள்ளையாகத் தோன்றிய அம்பிகை என்று பொருள். சிவபெருமான் திருநோக்கில் ஒரு முலை குறைந்தது என்று சொன்னால் அவர் காளமேகம் அல்லவே.

“கொள்ளிக் கண்ணன் திருட்டியினால் ஒன்று குறைந்ததுவே” என்கிறார்.

“கருத்தன – எந்தை தம் கண்ணன – வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன – பால், அழும்பிள்ளைக்கு நல்கின”

அழுகிற பிள்ளைக்கு வேண்டிய அளவில் ஞானப் பாலை நல்கும் பரிவும் பக்குவமும் அம்பிகைக்குத்தான் உண்டு. உபமன்யு என்ற குழந்தை பாலுக்கழுதபோது சிவபெருமான் ஒரு பாற்கடலையே கொடுத்துவிட்டார். “பாலுக் கழுத பிள்ளைக்குப் பாற்கடல் ஈந்த பிரான்” என்று இதில் பெருமை வேறு!! திருமுலைப்பாலில் திருஞானத்தையும் குழைத்துத் தருபவள் அம்பிகைதான். சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாயத்தை விடவும் பெருமைமிக்கதாகிய அம்பிகையின் திருமுலைகள், அவள் சூடியிருந்த முத்தாரம், மயில்தோகையின் குருத்துபோல் வரிசையான அவளது பற்கள் ஒளிர்கின்ற புன்னகை இவற்றை மனதில் நினைத்து தியானிக்கிறபோது, அம்பிக்கையே நேரிலும் வர வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார் அபிராமி பட்டர்.

கருத்தன எந்தை தன் கண்ணன வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன பால் அழும்பிள்ளைக்கு நல்கின பேரருள் கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருந்தன மூரலும் நீயும்அம்மே வந்து என்முன்னிற்கவே”

நண்பர் ஒருவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம். வாயில்மணி ஒலிக்கிறது. கதவைத் திறந்தால் அதே நண்பர் நிற்கிறார். “உங்களைப் பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தேன். நீங்களே வந்து விட்டீர்கள்” என்று வியப்போடு வரவேற்கிறோம். விழிப்புணர்வில்லாத நிலையிலும் அவரின் வருகையை உள்ளுணர்வு முந்திக் கொண்டு முன்மொழிகிறது.

ஆனால் சதாசர்வ காலமும் தங்கள் ஈஷ்ட தெய்வத்தின் தியானத்திலேயே இருப்பவர்கள் அந்த அபூர்வ தரிசனத்திற்காக எப்போது தயாராகத்தான் காத்திருப்பார்கள்.

“நீலச்சிகண்டியில் ஏறும் பிரான் ஏந்த நேரத்திலும்
கோலக் குறத்தியுடன் வருவான்”

என்பார் அருணகிரிநாதர். உன் திருத்தோற்றத்தை மனதில் நிறுத்தி நான் தியானிக்கும்போதே அம்மா நீயும் வந்து நில் என்கிறார் அபிராமிபட்டர்.

ஒருவர் செய்து கொண்டிருக்கிற செயலுக்கும், அவர் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் நினைவுக்கும் சம்பந்தமிருக்க வேண்டும் என்றில்லை. பழக்கப்பட்ட பாதையில் வண்டிமாடு பயணம் செய்யும் போது வண்டிகாரர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார். தான் பயணம் செய்கிறோம் என்று கூட அவருக்குத் தெரியாது.ஆனால் அவர் வண்டியை ஓட்டிக் கொண்டிருப்பதாகத்தான் எல்லோரும் சொல்வார்கள்.

ஆனால் சதாசர்வ காலமும் அம்பிகையின் திருவுருவை தியானம் செய்யும் ஒரே வேலையைத்தான் செய்கிறார் அபிராமி பட்டர். அவருடைய உடம்புதான் நிற்கிறது, படுக்கிறது, அமர்கிறது, நடக்கிறது. வெளியிலிருந்து பார்த்தால் அவர் நிற்பது போல் தெரியும்.ஆனால் அவர் அம்பிகை தியானத்தில் இருக்கிறார். மற்றவர்களுக்குத்தான் அவர் படுத்து உறங்குவதுபோல் இருக்கும். ஆனால் உண்மையில் அவர் அம்பிகை தியானத்தில் இருக்கிறார்.

“நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை”

அபிராமி சந்நிதிக்கும் வீட்டிற்குமாகப் போய்வரும் பாதையில் எதிர்படும் பெண்களையும் ஆண்களையும் பார்க்கிறார் அபிராமி பட்டர்.

அனைவரும் அம்பிகையின் திருவடி நிழலில் சஞ்சரிக்கிறார்கள் என்று புரிகிறது. அத்தனை உயிர்களுக்கும் அடைக்கலமாய்த் திகழும் அம்பிகையின் திருவடிகளை வணங்குகிறார்.

எதிர்படுபவர்களோ, அவர் தம்மை வணங்குவதாக நினைத்து பதில் வணக்கம் சொல்கிறார்கள். “என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்”

வழிவழியாக எழுதாக்கிளவியாக வேதம் பயின்ற பரம்பரையில் வந்தவராகிய அபிராமி பட்டருக்கு வேதங்களின் முடிபாகக் காணப்படும் விழுப்பொருளே சந்நிதியில் அபிராமி வல்லியாய் அருள் புரிவதை மிக நன்றாக உணர முடிகிறது. வேதங்கள் முயன்று காணும் மேம்பட்ட உண்மையை தன் அன்னையாய் பாவிக்கும்போது வேறெதையும் சிந்திக்க வேண்டிய அவசியம் அவருக்கில்லை. வேதங்களின் விழுப்பொருளே அம்பிகை என்று அபிராமி பட்டருக்கு உணர்த்தியது எது? அதுவும் அன்னையின் அருள்தானே.

எந்த அன்னை உமையென்னும் திருநாமத்துடன் இமயத்தில் பிறந்தாளோ அவளே யாதுமாகி நிற்கிறாள். நிலை பேறான ஆனந்தத்தை தரும் முக்தி ரூபமாகவும் அவளே திகழ்கிறாள். இந்தத் தெளிவை உள்நிலையில் உணர்ந்தபிறகு அபிராமி பட்டரின் ஒவ்வோர் அசைவும்கூட அபிராமி தியானமாகவே இருப்பதில் வியப்பேதும் உண்டோ?

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள் – எழுதா மறையின்
ஒன்றும் அரும்பொருளே! அருளே! உமையே! இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *