ஒலியும் அவளே ஒளியும் அவளே

அழகும் குரலினிமையும் வாய்ந்த கிளி நாம் சொல்வதைத் திரும்பச்
சொல்கிறது. நாம் சொன்ன வார்த்தைகளைக் கிளி பேசினால் நமக்கு
எவ்வளவோ மகிழ்ச்சி.ஏன் தெரியுமா?கிளி நாம் சொன்னதைப்பேசுகிறது என்பது மட்டுமல்ல.அது நமக்காகப் பேசுகிறது.
ஒரு குழந்தையிடம் அதன் தாய் பேசுவதைப்பாருங்கள்…! அந்தத் தாய் எவ்வளவு தேர்ந்த அறிஞராக இருந்தாலும்
குழந்தையின் மழலை உச்சரிப்பைத்தான் தன் குரலில் பேசுவாள்.
சரியான சொற்களைத் தேர்ந்த உச்சரிப்பில் சொல்ல அவளுக்குத்
தெரியும்.ஆனால் அன்னை தன்னைப்போலவே பேசுகையில்
குழந்தை அடையும் குதூகலம் அவளுக்கு மிகவும் உகப்பானது.
அதுபோல் அம்பிகையாகிய அன்னை அடியவர்களின் சிரமங்களை
இறைவனிடம் எடுத்துச் சொல்வாளாம் .

“வேய்முத்துப் பந்தரின்கீழ் இறைவனும் நீயும் இருக்கையில் என் மனக்குறை சொன்னால் உன் வாய்முத்து உதிர்ந்திடுமோ”

என்று அடியவர் ஒருவர் கேட்டதும் இந்த உரிமையில்தான்.
எனவே அபிராமிபட்டர் அன்னையை கிளியே என்று அழைக்கிறார்.

அம்பிகை எங்கே இருக்கிறாள்?அவளை வெளியில் தேட வேண்டாம்.
எல்லா உயிர்களிலும் அவள்தான் நிரைந்திருக்கிறாள். அவள்தான்
எல்லாம் என்னும் உணர்வு யாருக்கு வருகிறதோ அவர்கள் உள்ளங்களில்
மெல்ல மெல்ல மேலெழும்பி ஒளி வீசுகிறாள்.

கதிரவனுக்கு அஸ்தமனமில்லை. சுழற்சியின் போது சூரிய ஒளியை
பூமியின் ஒரு பகுதி புறக்கணிக்கிறது. மீண்டும் சூரியனின்
பக்கம் திரும்பும் போது அந்த வெளிச்சம் மேலே விழுகிறது.

“கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே!’
என்கிறார் அபிராமி பட்டர்.அடியவர்களை அம்பிகையின் கிளைஞர்
என்று சொல்வதில் இன்னொரு பொருத்தமும் இருக்கிறது.ஒரு
மரத்தில் இருக்கும் அத்தனை உயிர்ப்பும் சக்தியும் அதன்
விதையிலிருந்தும் வேரிலிருந்தும் வருகிறது. நம் வாழ்வுக்கு
விதையாகவும் வேராகவும் அம்பிகையே இருக்கிறாள். அவள்
தரும் பலமே கிளைஞர்களாகிய நம் பலம்.

அம்பிகை தன்னுடைய ஒளிவெள்ளத்தை தன் அடியவர்களுக்கும்
அருள்கிறாள். அது மட்டுமா? எங்கெல்லாம் ஒளி பிறகிறதோ
அந்த ஒளியின் மூலமாகவும் அவளே இருக்கிராள். விசும்பில்
வெய்யில் வருகிறது. விசும்பும் அவளே.பூமியில் நெருப்பு பிறக்கிறது.
பூமியும் அவளே. மனித உடலின் சக்திநிலைகளாகிய சக்கரங்களில்
சுடர் எழுகிற்ச்து. அந்தச் சக்கரங்களை ஆள்பவளும் அவளே
“ஒளிரும் ஒளிக்கு இடமே” என்கிறார்.

அம்பிகையின் பேரருள்திறத்தை உனர்ந்து கொள்பவர்கள் அவள்
வழியாக பிரபஞ்ச ரகசியத்தையே அறிந்து கொள்கிறார்கள்.சூனியத்தில்
தான் எல்லாம் தொடக்கம். எண்ணிப் பார்த்தால் அந்த சூனியமும்
அவளே. உதாரணமாக,ஒரு குழந்தை கருப்பையில் கருக்கொள்கிறது
என்றால், அந்தத் தாய்மை எங்கே இருக்கிறது? கருப்பையில் உள்ள
வெற்றிடத்தில் இருக்கிறதுறாந்தக் கருப்பையின் வெற்றிடத்தில்தான்
சில துளிகள் கருவாக உருவாக விரிகிறது.அந்தக் கருப்பையின்
சூனியமே தாய்மையின் ஆதாரம்.அம்பிகை இந்தப் பிரபஞ்சத்தைக்
கருக்கொள்ளும் சூனியமாக வெளியாகவும் இருக்கிறாள். அந்த வெளியில் ஒவ்வொன்றாகப்
பிறந்த பூதங்களாகவும் அவளே விரிகிறாள்.
“எண்ணில் ஒன்றுமில்லா வெளியே!வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே!”
சூட்சுமமான ஒலியாகவும்,,ஒளியாகவும் ஓளியின் தோற்றுவாயாகவும்
சூனியமாகிய வெளியாகவும்,வெளியில் தோன்றும் வளிமுதலாய
பூதங்களாகவும்,விரிகிற பெருமையாய் பிரம்மாண்டமாய் திகழும் அன்னை தன்னுடைய பேரருட்தன்மையால் என்ன செய்கிறாள்தெரியுமா?

மனிதனுடைய சின்னஞ்சிறிய சிற்றறிவின் எல்லைக்குள்கூட
அறிந்து கொள்ளப்படக்கூடிய அளவுக்கு தன்னை வெளிப்படுத்திக்
கொள்கிறாள். ஒளிவந்த பெருமையின் எளிவந்த தன்மையை விட
அதிசயம் உண்டா என்ன?

“கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும்
ஒளியே!ஒளிரும் ஒளிக்கிடமே!எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே!வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *