ஒரு குழந்தையிடம் பத்து இலட்சம் ரூபாய்களைக் காட்டி “இதை
வைத்துக் கொண்டு என்ன செய்வே?”என்று கேளுங்கள்.”நெறய்ய
ஐஸ்க்ரீம் வாங்குவேன்” என்று சொல்லும்.இதற்கு இரண்டு காரணங்கள்.
ஒன்று, உலகத்திலேயே ஐஸ்க்ரீம்தான் உயர்ந்தது என்கிற அதன் அபிப்பிராயம்.
இரண்டாவது பத்து இலட்சம் ரூபாய்கள் என்றால் எவ்வளவு உயர்ந்தது
என்று குழந்தைக்குத் தெரியாது.

அம்பிகையின் பேரருள் எவ்வளவு பெரிய விஷயம் என்று தெரியாத
மனிதர்கள் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள்.தேவர்களுக்கே
உரிமையான நிலையான பல இன்பங்களையும் அதனினும்
மேம்பட்டதான முக்தியையுமே தரவல்லது அம்பிகையின் திருவருள்
என்பது புரியாமல்,நிலையில்லாத உலக இன்பங்களையே வரங்களாகக்
கேட்கிறார்கள். இப்படிக் கேட்பவர்கள் சாதாரண மனிதர்கள் என்றால்
பரவாயில்லை. பலகோடி தவங்களைச் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள்
கூட இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு அம்பிகையின்
பெருமையும் தெரியவில்லை.தங்கள் தவத்தின் அருமையும் தெரிவதில்லை.

அதற்காக அம்பிகை அவர்கள் கேட்டதை மட்டும் தந்துவிட்டு அப்படியே
விட்டுவிடப் போவதில்லை. அந்தத் தவத்திற்கு என்ன தர வேண்டுமோ
அதைத் தவறாமல் தருவாள்.

“தண்ணளிக்கென்று முன்னே பலகோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்?மதிவானவர்தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ”

அது இருக்கட்டும். இவற்றையெல்லாம் அம்பிகை தருவாள் என்று
அபிராமி பட்டருக்கு எப்படித்தெரியும்? அம்பிகை சொல்லித்தான்
தெரியும்.அவர் சொல்லும் வார்த்தைகளெல்லாம் அவளுடையவை.
“எனதுரை தனதுரையாக”என்று திருஞானசம்பந்தர் சொல்லும்
அனுபவமும், “நானுரைக்கும் வார்த்தையெல்லாம் நாயகன்தன்
வார்த்தைதென்று வள்ளலர்ர்சொல்லும் அனுபவமும் அபிராமி
பட்டருக்கும் வாய்த்தது.பிரபஞ்சத்தின் அசைவில் பிறந்த ஒலியில்
அம்பிகை குறிதத இரகசியங்களை அவளுடைய இனிய குரலிலேயே
கேட்டவர் அவர்.

இசைமணக்கும் அந்தாதியின் சொற்கள் ஒவ்வொன்றும் பச்சைப்
பசுங்கிளியின் குரல்போன்ற அம்பிகையின் தேன்குரலில் தன்
செவிகளில் விழ ஒரு கிளிபோல் அதனைத் திருப்பிச் சொன்னவர்
அபிராமி பட்டர். எனவே அந்தக் குரலைக் கேட்ட அனுபவத்தை,

“பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே”

என்கிறார்.
“தண்ணளிக்கென்று முன்னே பலகோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்?மதிவானவர்தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே”

Comments

  1. 13வது பாடலில்(பூ த்தவளே.)” மறை க்கண்ட னுக்கு மூத்தவளே” என்ற
    வரியின் பொருள் சொல்லு ம்ப டி
    வி ண்ணப்பித்து க் கொள்கிறேன்
    அண்ணா.நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *