திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலையின் கலமறுத்தருளி
வேங்கைநாடும் கங்கபாடியும்
தடிகைபாடியும் நுளம்ப்பாடியும்
குடமலைநாடும் கொல்லமும் கலிங்கமும்
முரட்டொழிற் சிங்களர் ஈழமண்டலமும்
இரட்டபாடி ஏழரை யிலக்கமும்
முந்நீர்ப்பழந்தீவு பனராயிரமுந்
திண்திறல் வென்றித் தண்டாற்கொண்டதன்
எழில்வலர் ஊழியுளெல்லா யாண்டுந்
தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத்
தேசுகொள்கோ ராசகேசரி வர்மரான
உடையார் ராசராச தேவர்க்கு!

-இராஐராஐ சோழன் மெய்க்கீர்த்தி

தண்டுக்குக் கீழே தண்ணீர் குறைந்தாலும், புதுப்புனல் வந்து புகுந்தாலும் தன்னிலை மாறாத தாமரை போல், பேரரசுகள் பெயர்ந்தாலும் புதிய ஆட்சி புகுந்தாலும் திருக்கடவூர் மக்கள் வாழ்வின் அடிப்படை மாறவில்லை. முப்போகம் விளைகின்ற மண்ணின் மடிகீற, பிரவாகமெடுத்தது பசுமை. பல்வகை மாற்றங்களால் பண்பாட்டின் அடர்த்தி கூடினாலும் வேரோடியிருந்த விழுமங்கள் மாறவில்லை.

முற்காலச் சோழர்தம் பொற்கால ஆட்சியின் பாங்கினைப் பார்த்த திருக்கடவூர், களமிறங்கிக் கொடி நாட்டிய களப்பிரர் காலத்தையும் கண்டது. பிற சமயங்கள் தலையெடுத்த நிலையிலும் சோழர் பரம்பரை குறுநில மன்னர்களாய்க் குறுகியிருந்த காலத்திலும் இரையுண்ட மலைப் பாம்பாய் வரலாறு புரண்டு நிமிர்ந்த பொழுதுகளிலும் சலனமில்லாத அகலின் சுடராய் மௌனம் காத்தது.

மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பாண்டிய மண்ணிலும் பின்னர் சோழ மண்ணிலும் காலூன்றிய களப்பிரர் அரசு ஐந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஆட்டம் கண்டது. பாண்டிய நாட்டை ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய மன்னன் கடுங்கோன் மீட்டெடுக்க, அதே காலத்தில் களப்பிரரை வென்று சோழநாட்டை சிம்ம விஷ்ணு எனும் பல்லவன் கையகப்படுத்திகனான்.

பல்லவர் காலம்வரை பிற சமயங்களுக்கிருந்த செல்வாக்கு சரியத் தொடங்கிய காலமிது. சோழப் பேரரசு மீளும் முன்னரே பல்லவர் காலத்தில் சைவம் மீண்டது. திரு நாவுக்கரசரால் பல்லவ மன்னனும் திருஞானசம்பந்தரால் பாண்டிய மன்னனும் தாய்மதமாம் சைவத்திற்குத் திரும்பிய காலத்தில் அரும்பிய சைவ மறுமலர்ச்சி வேதநெறியையுட் சைவநெறியையும் புதுப் பொலிவோடு மீட்டது.

சைவ சமயம் பேரியக்கமாய் வடிவெடுத்த பல்லவர் காலத்தில் ஆங்காங்கே குறுநில மன்னர்களாய்க் குறுகியிருந்த சோழர்கள் அவரவர் எல்லைக்குட்பட்டு சைவம் வளரத் துணை நின்றனர். தேவார மூவர் வருகை தந்து பதிகங்கள் அருளிய தலங்கள் பாடல்பெற்ற தலங்களென்று போற்றப்பட்டன.

நாயன்மார்கள் அருளிய சொல்வண்ணமும் பல்லவர்களின் கைவண்ணமும் திருக்கோவில்களுக்குப் பொலிவு சேர்த்த பொழுதில், தமிழக வரலாற்றின் திசை மாற்றமாய்த் திகழ்ந்தது திருப்புறம்பியம் போர். பிக்ôலச் சோழர்கள் பல்லவர்களையும் பாண்டியர்களையும் வென்று தங்கள் மண்ணை மீட்டனர். எட்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் விஐயாலயசோழனும் அவனுக்குப் பின் அவன் மகன் ஆதித்த சோழனும் பிற்காலச் சோழர்களின் எழுச்சிக்கு வித்திட்டனர்.

புத்தம்புதிய நிறங்களின் சேர்க்கை தமிழ்ப்பண்பாட்டில் செழுமை சேர்த்த காலமிது. செங்கற் தளியாக இருந்த திருக்கோவில்கள் கருங்கற் தளிகளாய் கலைநலம் பொலிந்தன. திருக்கடவூர் திருக்கோவிலும் புதிய அழகில் ஒளிர்ந்தது.

பல்லவரும் பிற்காலச் சோழரும் அடுத்தடுத்து திருப் பணிகள் செய்து வந்த வேளையில் திருமுறை நெறியும் அருள்மறை நெறியும் செழித்தாலும் அந்த சீரிய பணிகள் சிகரம் தொடும்விதமாய் வல்லாண்மை மிக்க வெற்றியாளன் ஒருவன் சிம்மாசனம் ஏறியதில் சிலிர்த்து நின்றது சோழநாடு. ஒன்பதாம் நூற்றாண்டின் விளிம்பில் அருள்மொழி வர்மன் சோழ மன்னனாய் அரசுக் கட்டில் ஏறினான்.

ஆட்சி பீடமேறிய மூன்றாம் ஆண்டிலேயே அரசர்க் கரசன் என்னும் பொருள்பட “இராஐராஐன்” என்று அருள்மொழி வர்மனை கல்வெட்டுகள் கொண்டாடின.

ஒரு வைகறைப் பொழுதில் திருக்கடவூர் வீதிகளில் கடலலை புகுந்தது போல “கலகலெ”ன ஒலித்தது குளம்படி ஓசை. வடக்கு வீதி வழியே நுழைந்து, கிழக்கு வீதியிற் புகுந்து தெற்கு வீதியிலும் மேற்கு வீதியிலும் பரந்து நால்வீதிகளிலும் அணிவகுத்தது குதிரைப்படை. சிறிது நேரத்திலேயே வீறு நடையிட்டு வந்து சேர்ந்தது காலாட்படை. சோழ வீரர்கள் ஊரைச் சூழ்ந்து நின்றது கண்டு ஊரே திரண்டது.

படைத்தலைவர் போல் தோற்றமளித்தவரை மெல்ல நெருங்கினார் ஒருவர். “வணக்கம் அய்யா. என் பெயர் மயிலாட்டி. வாணிகம் செய்து வருகிறேன். சக்கரவர்த்திகள் உத்தரவு பெற்று இந்தத் திருக்கோவில் நிலத்தை வாங்கி உழுதும் வருகிறேன். தாங்கள் இப்படி படைதிரண்டு வந்திருப்பது பற்றித் தெரிந்து கொள்ளலாமா?”

படைத்தலைவர் புன்னகைத்தார். “சக்கரவர்த்திகள் உத்தரவுப்படி நாங்கள் வந்திருக்கிறோம். திருக்கடவூரில் சோழர் படை ஒன்று நிலை கொண்டிருக்க வேண்டுமென்பது அவரின் திருவுள்ளம். இன்று மாலை கிராம சபையைக் கூட்டுங்கள். குதிரைப்படை, காலாட்படை மற்றும் கடற் படையின் தளபதிகள் சபையாருக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுவார்கள். வீரர்கள் ஊர் மக்களுக்கு உற்ற நண்பர்களாக இருப்பார்கள். யாரும் அசசப்பட வேண்டாம்.”

கிராமசபைத்தலைவர் அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்தார். அவரிடம் சோழப்பேரரசின் தலைமை அமைச்சர் தந்தனுப்பிய ஓலைநறுக்கு தரப்பட்டது. அன்றுமுதல் எந்நேரமும் ஏவுதற்குத் தயார் நிலையில் முப்படைகளும் திருக் கடவூரில் நிலை பெற்றன. ஆட்சியாளர் குறிப்பிலும் திருக்கோவில் கல்வெட்டிலும் “படை ஏவிய திருக்கடவூர்” என்றே குறிக்கப்பட்டது.

சோழ மண்டலத்தை ஒன்பது வளநாடுகளாகப் பிரித்து ஒவ்வொரு வளநாட்டிலும் அமைந்திருந்த மாவட்டங்களுக்கு நாடு எனும் பெயரை நல்கியிருந்தான் இராஐராஐ சோழன். அவன் காலத்தில் உய்யக் கொண்டான் வளநாட்டின் அம்பர் நாட்டுக் கடவூர் என்றழைக்கப்பட்டது திருக்கடவூர். திருவிடையாட்டமாய் பேரரசன் தந்த நிலக்கொடைகள் ஆழ்த்தின.

அரச குடும்பத்தினரும் பக்தர்களும் உவந்து தந்த நிவந்தங்கள் காலகாலதேவர் திருமுன்னர் தொடர்ந்து விளக்குகள் ஒளிர வகைசெய்தன.

மாற்றார் அஞ்சவும் நெருங்கும் படைபலன் பெற்றிருந்த இராஐராஐனின் வெண்கொற்றக்குடை நிழலில் சோழ தேசத்தின் பிற பகுதிகள் போலவே அறத்திலும் அமைதியிலும் செழித்துத் தழைத்தது திருக்கடவூர்.

சோழப்பேரரசின் விழுதுகளாய் வளர்ந்த வெவ்வேறு மன்னர்களின் அருட்கொடைகள் திருவீரட்டானத்துப் பரம சுவாமியின் சந்நிதி சேர்ந்தன. சிவாலயங்களுக்கு நல்கப்படும் திருவிளையாட்டம், நித்திய பூசை நியமங்களுக்காகத் தரப்படும் அர்ச்சனா போகம் என்று பலவகையிலும் நிலமாகவும் தனமாகவும் தந்தனர் சோழ மன்னர்கள்.

நில்லாத பேராறாய் நடைபோடும் கால வெள்ளத்தில் நிகழ்ந்து கொண்டேயிருக்கும் மகுட சுழற்சிகளுக்கு மௌன சாட்சியாய் நின்றது திருக்கடவூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *