அழிவந்த வேதத்தழிவு மாற்றி
அவனி திருமகட்காக மன்னர்
வழிவந்த சுங்கந் தவிர்த்த பிரான்
மகன்மகன் மைந்தனை வாழ்த்தினவே

செருத்தந் தரித்துக் கலிங்கரோடத்
தென்தமிழ் தெய்வப் பரணிகொண்டு
வருத்தந் தவிர்த்து உலகாண்டபிரான்
மைந்தற்கு மைந்தனை வாழ்த்தினவே!

-இரண்டாம் இராஐராஐனை வாழ்த்தும் பழங்காலப் பாடல்

மாமன்னர் குலோத்துங்கச்சோழ தேவர் அரசாணையினை சிரமேற்கொண்டு செயல்படும் திருக்கடவூர் மகாசபை இன்று மாலை வேலைக் காணன் திரு மண்டபத்தில் கூடுகிறது. உறுப்பினர் அனைவரையும் வந்துசேரசொல்லி முரசறைய உத்தரவு! உத்தரவு!திருக்கடவூரின் நான்கு முக்கிய வீதிகளிலும் மடவிளாக வீதிகளிலும் விடியற் காலையில் முரசறையப்பட்டது.

மகாசபையின் உறுப்பினர்கள் நாற்பது வயதுக்கு மேம்பட்டவர்களாய், நல்லொழுக்கம் நிரம்பியவர்களாய் இருந்தனர். இந்த மகாசபையினர் கிராமசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஊரிலுள்ள ஆண் மக்கள் அத்தனை பேருமே கிராமசபை உறுப்பினர்கள்.

சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன்மீது மக்கள் அனைவருக்கும் மிகுந்த மரியாதையும் அன்பும் இருந்தது. அபயன், சயதரன், சயதுங்கன் என்று பல பட்டப் பெயர்கள் இருந்தாலும் திரு நீற்றுச் சோழன் என்ற பெயரும் திரிபுவனச் சக்கரவர்த்தி என்ற பெயரும் குடிமக்கள் மத்தியில் விளக்கம் பெற்றிருந்தன.

குலோத்துங்கனின் பட்டத்தரசியாயிருந்த மதுராந்தகியை புவனமுழுதுடையாள் என்றும் பிற அரசிகளை உலகுடையாள், ஏழுலகமுடையாள், திரிபுவனமுடையாள் என்பன உள்ளிட்ட சிறப்புப் பெயர்களில் அழைத்து வந்தனர். முதலாம் குலோத்துங்கன் ஆட்சியில் அம்பர்நாட்டுத் திருக்கடவூர் அடங்கியிருந்த வளநாடு, ராஐ நாராயண வளநாடு என்று பெயர் மாற்றம் பெற்றிருந்தது.

முன்மாலைப் பொழுதில் மகாசபை கூடிற்று. உரிமை கொண்டாட எவருமின்றி, மடப்புரமாய்க் கிடந்த ஒன்றரை வேலி நிலத்தை வாங்க கூரமங்கலத்தைச் சேர்ந்த வாணவராயர் மகாசபைக்கு வேண்டுகோள் வைத்திருந்தார். மாமன்னன் குலோத்துங்கள் நலனுக்காக வேதம் ஓதும் பத்து சிவயோகிகளுக்கு மார்க்கண்டேயர் மடத்தில் தினந்தோறும் அன்னம் பாலிக்க அவர் இசைந்ததன் பேரில் அந்நிலம் அவருக்கு உரிமையாக்கப்பட்டு கல்வெட்டிலும் பதிக்கப்பட்டது.

சபை முடிந்து கலைந்து சென்றவர்கள் வாணவராயரின் பண்பு நலன்களைப் பேசிக்கொண்டே சென்றனர். “வாணவராயரைப் பார்த்ததும் நான் சிறுவனாயிருந்த காலம் நினைவுக்கு வந்து விட்டது. நாற்பத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், விஐயராஜேந்திர தேவர் காலத்தில் கோவக் குடியிலிருந்து பிச்சன் ஆதித்தன் என்பவர் வந்தார். அவர் ராஜாதிராஜன் சத்திரத்தில் தினம் பதினேழு பேர்களுக்கு அன்னம் பாலிக்க சாலாபோகமாய் நிலங்கள் தந்தாராம். என் தந்தையார் அடிக்கடி சொல்வார்” என்றார் ஒருவர்.

“அவர் யார் தெரியுமா? அவருடைய குலப்பெயர் மூவேந்த வேளார். அவருடைய தந்தை ராஐராஐ மூவேந்த காலகால தேவரின் நித்திய நைவேத்தியத்திற்கும் எட்டுநாள் சிதிதிரைத் திருவிழாவுக்கும் நெல்லளக்க நேர்ந்து கொண்டாராம்.” பேசிகொண்டே செல்லச்செல்ல தூரத்தில் குரல் தேய்ந்தது. மெல்ல மெல்ல இருள் கவிழ்ந்தது.

நொடியொன்று கழிவதுபோல் ஒரு நூற்றாண்டு முடிந்தது. முதலாம் குலோத்துங்களின் ஆட்சிக்குப்பிறகு அவனுடைய நான்காம் மகன் விக்ரமசோழன் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றான். அவனது தமையன்மார் மூவரும் தந்தையின் ஆட்சிக்காலத்திலேயே இறந்திருந்தனர். திருக்டவூர் நாயகர் வழிபாட்டுக்கு மூன்றுவேலி நிலம் அருச்சனை போகமாய் அளித்தான்.

அடுத்த தலைமுறை தலையெடுக்கும் போதில் அரசனும் மாறியிருந்தான். இரண்டாம் இராஜராஜன் அரியனை ஏறி பதினான்கு ஆண்டுகள் முடிந்திருந்தன. வான் பொய்த்தால் வறட்சி நிலவியது. ஒற்றைப் பயிர்கூட விளையவில்லை. கிராம மத்யஸ்தர் கூட்டப் பெருமக்கள் எல்லோரும் ஒன்று கூடி விவாதித்தார்கள்.

“இப்படியொரு வறட்சி வந்ததில்லையே! மஹாராஜாவின் கவனத்துக்கு உடனடியாகக் கொண்டு போக வேண்டுமே.” ஆக்கூர் நாட்டிலுள்ள தலைச் சங்காட்டிலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். கூட்டத்தின் விவாதம் பரபரப்பாக நீண்டு கொண்டே போனது. முடிவில் திருக்கடவூர் வீரட்டானமுடையாருக்கான விளைநிலங்களில் வெற்றிலை பயிரிடுவதென்றும் நிலவரியை தலைச்சங்காட்டு சபையே செலுத்துவதென்றும் ஒரு கருத்து வலுவடைந்தது.

மத்யஸ்தரும், நிலங்களை மேற்பார்வையிடும் வேலி நாயகமும் கலந்து பேசத் தனியே போயினர். அங்கிருந்த ஒருவர் சொன்னார். “இப்படித்தான் விக்ரமசோழ மஹாராஜா காலத்தில் தொண்டை நாட்டிலும் நடுநாட்டிலும் பஞ்சம் ஏற்பட்டதாம். ஆனால் அது வறட்சியால் ஏற்பட்ட பஞ்சமல்ல. பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பஞ்சம். அரசரும் செல்வர்களும் நிறைய கொடைகொடுத்து மக்களைக் காப்பாற்றினார்களாம். கோயிலதிகாரியும் வேண்டிய அளவு கடன் கொடுத்தாராம்.”

அவருக்கு மைத்துனர் முறையுள்ள ஒருவர் இடைபுகுந்து, “நீரே பெரிய செல்வர்தானே! கொடை கொடுத்துத் தொடங்கி வைப்பது” என்றதும் சிரிப்பலை எழுந்தது. செல்லமாக்க் கையோங்கியவர் மத்யஸ்தரும் வேலிநாயகமும் வருவது கண்டு அமைதியானார்.

இருவரும் வந்து திருக்கோயில் நிலத்தில் வெற்றிலை பயிரிட ஒப்புக் கொண்டு, அதற்காக திருக்கோயில் சார்பில் முந்நூறு காசுகள் தருவதாக அறிவித்தனர். அதற்கான உடன்பாட்டில் மத்யஸ்தரும் வேலிநாயகமும் அடைப்பு முதலிகளின் உறுப்பினர் ஒருவரும் கையொப்பமிட்டபின் சபை கலைந்தது.

“எப்பாடு பட்டாவது சிவசொத்தைக் காக்க வேண்டுமென்றுதானே நாம் வழிவழியாய் பாடுபடுகிறோம். இந்த அநியாயத்தைக் கேள்விப்பட்டீர்களா?” பதட்டத்துடன் கூறிய பொன்னனை நிமிர்ந்துபார்த்தார் முத்தீசர்.

“நானும் கேள்விப்பட்டேன். திருக்கோயிலுக்கு பாத்தியப் பட்டவர்கள் விவகாரம்தானே! இன்று மாலை மகாசபை அதற்காகத்தானே கூடுகிறது. பார்ப்போம்!” என்றவர் முகம் அருளற்றிருந்தது.

திருக்கோயில் சொத்தினைப் பராமரிக்கும் பாத்தியதை உள்ளவர்கள் காலகாலதேவருக்காக விளையும் தாமரை மலர்களை சில செப்புக்காசுகள் பெற்றுக்கொண்டு விற்றுவிட்ட வழக்குதான் அன்று மகாசபைக்கு வந்தது. அவர்களில் ஒருவன், அந்தத் தாமரை மலர்களை உடலில் சூடிக் கொண்டு, “நான்தான் காலசம்ஹாரன்! என்னை பணிந்து வணங்கா விட்டால் எமனை உதைப்பது போல் எட்டி உதைப்பேன்” என்று நாக்கைத் துருத்தி விளையாடியதை கிராமசபைத் தலைவர் பார்த்துவிட்டதால் சிக்கல் பெரிதானது.

திருக்கடவூர் திருக்கோவிலில், “குலோத்துங்க சோழன் திருவெடுத்துக் கட்டி” என்னும் மண்டபத்தில் கிராம மகாசபை கூடியிருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சபை நடுவே நிறுத்தப்பட்டனர். “இவனுக்கும் ஒரு வைணவப் பெண்ணுக்கும் காதலாம், அதை விரும்பாத அவனுடைய சுற்றத்தவரே காத்திருந்து இறைவனுக்குரிய தாமரை மலர்களை விற்கும்போது காட்டிக் கொடுத்துவிட்டார்கள்.”

நடுவில் நின்ற இளைஞனை சுட்டிக்காட்டி கிசுகிசுப்பு எழுந்தது. “உங்கள்மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச் சாட்டுகளுக்கு என்ன சொல்கிறீர்கள்” மகாசபைத் தலைவர் கேட்டு முடிக்கும் முன்னரே நடுவிலிருந்த ஒருவர் சொன்னார்.”நாங்கள் தாமரை மலர்களை விற்பனை செய்தது எங்கள் தொப்பையில் உப்பை நிரப்புவதற்கல்ல. காலகாலதேவருக்கு விளக்கெரிக்க.”

சபையில் எழுந்த எதிர்ப்பொலிகளைக் கையமர்த்தி சபைத்தலைவர் கேட்டார். “ஒவ்வொரு விளக்கிற்கும் வேண்டிய அளவு நிவந்தங்கள் இருக்கின்றன. இறைவனுக்குரிய மலர்களை விற்று விளக்கெரிக்கத் தேவையில்லை. அதுவொரு புறமிருக்க, என் கண்முன்னரே இறைவனுக்குரிய மலர்களை இந்த இளைஞன் சூடிக் கொண்டிருந்தானே! அதற்கென்ன சொல்கிறீர்கள்?”

தயாரித்து வைத்திருந்த பதில் அவிழ்த்து விடப்பட்டது. “அவை அன்றலர்ந்த பூக்களல்ல. இறைவனுக்கு சூட்டிக் களைந்த பழைய மலர்கள்.” சினத்தில் கண்கள் சிவக்க இருக்கையைத் தள்ளியெழுந்தார் மகாசபைத் தலைவர்.

“இறைவனிடம் பத்திமை பூண்ட அரசர் பெருமக்கள் அளித்த நிலங்கள் இவை. அவற்றின் பாத்தியதைப் பொறுப்பில் இருந்துகொண்டு தவறிழைப்பதும் பூசனைக்குரிய மலர்களைத் தாம் சூடிக்கொள்வதும் தெய்வ நிந்தனை மட்டுமல்ல. அரச நிந்தனையும் ஆகும். இவர்களுடைய குற்றங்கள் பொறுக்கத்தக்கவை அல்ல. மீறுகிற காரணங்கள் ஏற்கத்தக்கவை அல்ல. இவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து திருக்கோயிலுக்கு சேர்ப்பிக்கத் தீர்மானிக்குமாறு மகா சபைக்குப் பரிந்துரைக்கிறேன்.”

மகாசபை ஏகமனதாய் அங்கீகரித்தது. 1160 ஆம் ஆண்டு வைகாசி மாதத்தின் பூசநாளில் அந்தத் தீர்மானம் நிறைவேறியது. இன்னும் சில ஆண்டுகள் சென்றன. திருக்கடவூரிலேயே இருக்கும் ஓர் அருளாளரை வெளிக் கொணர நதியைத் தேடிவந்த கடல்போல அவரைத்தேடி வந்தார் அருளாளர் ஒருவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *