நித்தம் செய்கிற வேலைகள்தான் – அதில்
நிதானம் கலந்தால் தவமாகும்
புத்தம் புதியது விடிகாலை -அதில்
புதுநடையிட்டால் நலமாகும்
பித்து மனதின் பெருங்கவலை – ஒரு
புன்னகை மருந்தில் குணமாகும்
எத்தனை செல்வம் இருந்தென்ன – அட
ஏழைக்குதவுதல் வளமாகும்

வாழும் வாழ்க்கை பொதுவாகும் – அதில்
வசந்தமும் கோடையும் நம்திறமை
சூழும் வாய்ப்புகள் பொதுவாகும் – அதில்
சொர்க்கம் படைப்பது நம்பொறுமை
தாழ்வுகள் உயர்வுகள் வரும்போகும் – மனம்
தளரா திருப்பது நம்முரிமை
தோழமை பகைமை இயல்பாகும்- குணம்
தாழா திருப்பதே நம்கடமை

குழந்தையின் கைகளில் மண்பொம்மை – ஒரு
குயவனின் கைகளில் அதுபானை
உழவனின் கைகளில் விளைநிலமாம் – இந்த
உலகம் உன்னிடம் என்னாகும்
அழுதே பழகிய விழிகளிலே – இனி
ஆனந்தமின்னல்கள் பாயட்டும்
முழுதாய் வாழ்வை வாழ்ந்துவிடு – உன்
முயற்சியில் நம்பிக்கை ஜொலிக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *