ஆதங்கத்திலும் ஆற்றாமையிலும் வெளிப்படுத்தும் வருத்தங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் அந்த வீச்சிலேயே அபத்தங்களும் அபாண்டங்களும் புகார்ப்பட்டியலில் இடம் பெறும் போது உள்நோக்கம் குறித்த சந்தேகம் எழுகிறது.

ஈஷா யோக மையத்தில் தங்கள் மகள்கள் சந்நியாசம் பூண்டது பற்றி புகார் கொடுத்திருக்கும் தம்பதியர் அடுக்கியிருக்கும் குற்றச்சாட்டுகளில்,தங்கள் குழந்தைகள் தங்களுடன் இல்லையே என்னும் ஆதங்கமும் ஆற்றாமையும் நீங்கலாய் எதிலும் உண்மை இல்லை.

” தங்களின் இரண்டு மகள்களை விட5000 குழந்தைகளைக் காக்க வேண்டும்.அவர்களின் சிறுநீரகங்களைத் திருடுகிறார்கள்” என்கிறார். உணர்ச்சி மேலீட்டில் சொல்லப்பட்ட அபவாதம் என இதனைப் புறந்தள்ள வேண்டியதுதான்.

ஏனெனில் ஈஷா வளாகத்துக்குள் வசிப்பவர்களின் மொத்த எண்ணிக்கை கூட5000 த்தை நெருங்காது. ஈஷா ஹோம் ஸ்கூல் என்று குறிப்பிட்டுச் சொல்கிறார். சிலநூறு குழந்தைகளே அங்கே படிக்கிறார்கள். அவர்களும் ஈஷா தியான அன்பர்களின் குழந்தைகள். விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளை வந்து அழைத்துச் செல்கிறார்கள். பெற்றோர்களும் ஆசிரமத்தில் வந்து தங்கியிருந்து செல்கிறார்கள்.தங்கள் குழந்தைகளின் சிறுநீரகம் திருடு போயிருக்குமென்றால் இவர்களில் ஒருவருக்குக் கூடவா தெரியாது?

ஈஷா சன்ஸ்க்ருதி குழந்தைகளுக்கு நான் அடிக்கடி வகுப்பெடுப்பேன். யோகா நுண்கலைகள் களரி உட்பட அனைத்திலும் தேர்ச்சி பெற்று, தங்கள் பாடங்களிலும் மிகச்சிறப்பாகத் திகழ்கிறார்கள்.

அறிவில், ஆரோக்கியத்தில், விளையாட்டுகளில், தனித்திறமைகளில் சுடர் வீசும் சின்னச் சின்ன ஜோதிகள் அவர்கள்.எப்போதும் உயிர்ப்போடும் செயல்துடிப்போடும் இருக்கும் இவர்களை தேர்ந்த மருத்துவர்கள் பரிசோதித்தால் அதிசயித்துப் போவார்கள்.

காலை 7 க்கும் இரவு 7க்கும் தான் சாப்பாடு என்பதும் அடுத்த அபாண்டம்.காலை உணவு இரண்டு பந்திகள். காலை 10 மணி மற்றும் 10.45 மணி. இரவு பந்தி இரவு 7 மணி மற்றும் 7.45 மணி.

ஆசிரமத்தில் தங்கியுள்ள தன்னார்வத் தொண்டர்களில் தனியாகைருப்பவர்கள், குடும்பத்துடன் இருப்பவர்கள், குழந்தைகள், பிரம்மச்சாரிகள், சந்நியாசிகள் உட்பட எல்லோரும் ஒன்றாக அமர்ந்துதான் உண்போம்.

சந்நியாசிகளுக்கு சமைக்காத உணவுகள் பழ வகைகள் அதிகம். பத்தியமிருக்கும் போது பலமுறை நானே அவர்கள் உணவை சாப்பிட்டிருக்கிறேன்.ஏனக்கு எந்த போதையும் ஏற்பட்டதில்லை.

ஈஷா சந்நியாசிகள் நாளுக்கு 18 மணிநேரம் கூட சுறுசுறுப்பாக இருப்பவர்கள். ஊக்க மருந்தோ தூக்க மருந்தோ தேவைப்படாதவர்கள். ஆசனப் பயிற்சிகளும் தியானமும் அவர்களை அக்கினிக் குஞ்சுகளாய் வார்த்திருக்கின்றன.

தனிப்பட்ட வருத்தத்தில் தாய் தந்தையர் பேசுவதை நான் விமர்சிக்கத் தயாராக இல்லை. அதற்கான பதிலை அவர்களின் மகள்கள் தந்துவிட்டனர்.

ஆனால் அந்தத் தம்பதியர் சொன்ன அபாண்டங்களை தங்கள் முகநூல் பக்கங்களில் கொட்டை எழுத்துகளில் பகிர்ந்து கொள்பவர்களுக்காகவே இந்தப் பதிவு.

ஈஷாவில் என்னையும் சேர்த்து இலட்சக்க ணக்கானவர்கள் வகுப்புகள் பயின்று வருகிறோம். இவர்களில் சிலநூறு பேர்களே பிரம்மச்சர்யத்தை தேர்வு செய்கிறார்கள். அவர்களில் மிகச்சிலரே சந்நியாசத்தை தேர்வு செய்கிறார்கள், அதுவும் அத்தனை எளிதல்ல. பல்லாண்டுகள் காத்திருந்து தீவிர சாதனைகளையும் அசையாத உறுதியையும் கொண்டிருப்பவர்களாலேயே நீண்ட காத்திருப்புக்குப்பின் சந்நியாச நிலைக்கு செல்ல இயலும்.

இடையில் அவர்கள் அடிக்கடி இல்லம் சென்று வர அனுப்பப்படுவார்கள் இவர்கள் முழுநேரமாக யோகா பயிற்றுவிக்கவும், பசுமைக்கரங்கள் வழிமரங்கள் வளர்க்கவும் கிராமப் புத்துணர்வு இயக்கம் வழி கிராமங்களுக்கு இலவச மருத்துவம் ,விளையாட்டு போன்றவற்றை வழங்கி அவர்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் தங்களை அர்ப்பனிக்கிறவர்கள்

ஈஷாவின் சீடர்கள் எண்ணிக்கையைப் பார்த்தால் சந்நியாசிகள் மிகச்சிலரே. 18 வயதுக்கு மேல் ஆணோ பெண்ணோ விரும்பிய மனிதருடன் வாழத் தலைப்படுவதை ஆதரிக்கும் பக்குவமே சமூகத்தில் பலருக்கும் இல்லை.

தங்கள் அறிவும் ஆற்றலும் ஒரு குடும்பத்திற்கோ ஓர் அலுவலகத்திற்கோ மட்டும் பயன்படாமல் மனித சமூகம் முழுமைக்கும் பயன்படவேண்டும் என எண்ணி வருபவர்கள் வணக்கத்துக்குரியவர்கள்.தாங்கள் தேர்ந்த பாதையில் சேர்ந்த இடத்தில் முழுமையான தெளிவுடன் இயங்குகிறார்கள்.

ஈஷாவில் மட்டுமல்ல பல இடங்களில் தன்னலம் துறந்த பலரும் இப்படி அரிய பணிகளை ஆற்றி வருகிறார்கள். அவர்களை ஆதரிக்க வேண்டியதில்லை. முழுமையாகத் தெரியாத ஒன்றை முதுகில் சுமந்து அவதூறு பரப்ப வேண்டாமே!!

“நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்”
Attachments area

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *