(சாகித்ய அகாதெமியும் பொள்ளாச்சி என்.ஜி.எம். கலை அறிவியற் கல்லூரியும் நிகழ்த்திய அமரர்.அ.ச.ஞானசம்பந்தன் நூற்றாண்டு நினைவுக் கருத்தரங்கில் வாசித்த கட்டுரை)

தத்துவவ நுட்பங்களையும் தமிழிலக்கியங்கள் முன்மொழியும் விழுமங்களையும், காவியங்களின் கவினுறு காட்சிகளையும் சொற்பொழிவுகள் வழியே மக்கள் மத்தியில் பரவச் செய்த மூத்த முன்னோடிகளில் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர், அறிஞர் அ.ச.ஞா.

“பெருஞ்சொல் விளக்கனார்” என்று போற்றப்பெற்ற பேரறிஞர் அ.மு.சரவண முதலியார் அவர்களின் திருமகனாகிய அ.ச.ஞா, பிள்ளைப் பருவந்தொட்டு, தத்துவச் செறிவுமிக்க மேடைகளில் ஓடி விளையாடியவர் ஆவார்.

தூத்துக்குடியில் நிகழ்ந்த சைவசித்தாந்த மாநாட்டில், தானும் உரை நிகழ்த்த வேண்டுமென்று, சின்னஞ்சிறுவராய் இருந்த நிலையில் அடம்பிடித்து, காலதாமதம் ஆனமையால் மேடைக்குப் பின்புறத்திலேயே உறங்கிவிட்ட அவரை எழுப்பி, தன் கைகளில் தூக்கி வைத்துக் கொண்டு, “இப்போது பேசு” என ஊக்கி பேசவைத்தவர், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி என்பதை அ.ச.ஞா பின்னாளில் நினைவு கூர்ந்தார்.

தமிழாய்வு, தத்துவப் பின்புலம் ஆகிய மரபு வழிச் சிந்தனைகளோடு எதையும் புதிதாக அணுகும் புதுமைப் பார்வையும் சேர்ந்து கொண்டதால், அ.ச.ஞா அவர்களின் மேடை உரைகள் தனி முத்திரைகொண்டு ஒளிர்ந்தன.

முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழமையராய், பின்னைப் புதுமைக்கும் பெயர்த்துகிற பெற்றியராய் விளங்கிய அ.ச.ஞா அவர்கள் சொற்பொழிவுக் கலையில் ஒரு யுகசந்தி.

புராண மரபுகளின் உள்ளுறையாய் ஒளிவீசும் தத்துவங்களை அகிழ்ந்தெடுத்து புதிய நோக்கில் உரைவிருந்துகள் படைத்த அ.ச.ஞா அவர்களின் உரை முறையின் தனித்தன்மைகளை ஆராய்வோம்.

அணுகுமுறை

“அணிசெய் காவியம் ஆயிரம் கற்பினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்”
என்பது மகாகவி பாரதியாரின் ஆதங்கம். வரிகளினூடாக படைப்பாளியின் உயிர்த்துடிப்பை உணரும் பயணத்தை அனாயசமாய் மேற்கொள்வர், அ.ச.ஞா.

சங்க இலக்கியங்களில் ஒற்றை வரியை எடுத்து கொண்டு அன்றைய சமூகம் சார்ந்த விமர்சனங்களை மிகத்துணிவாக முன்வைப்பதோடு, அத்தகைய சூழலிலும் சங்க புலவர்கள் நிலைநிறுத்த முற்பட்ட விழுமங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவார்.

முதல் நாள் போரில் தன் தந்தையையும், மறநாள் போரில் கணவனையும் பறிகொடுத்த பெண்ணொருத்தி, முன்றாம்நாள் போருக்கு சின்னஞ்சிறிய தன் மகனைத் தயார் செய்ததை வர்ணிக்கிகக் கூடிய “கெடுக சிந்தை! கடிதிவள் துணியே” என்னும் பாடலை எடுத்துக் கொண்டு , அதனைப்பாடிய புலவரை சாடித் தீர்க்கும் அ.ச.ஞாவின அறச்சீற்றம் அவையை மெய்சிலிர்க்க வைக்கும்.
அரசர்கள் மத்தியிலான சிறுசிறு போர்களை ஊக்குவித்த புலவர்களை கடுமையாக கண்டிக்கும் அ.ச.ஞா

“இன்னாதம்ம இவ்வுலகம்
இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே”
என்பன போன்ற நிலைபேறுள்ள வரிகளை உச்சிமேல் வைத்துக் கொண்டாடுவார்.

வாழ்க்கை பற்றிய தவறான உறுதி மொழிகளைத் தராமல் வாழ்வின் துன்பங்களுக்கு நடுவிலும் இன்பம் காணும் பெற்றிமையை சங்க இலக்கியங்கள் உருவாக்க முற்பட்ட தன்மைகளைப் விரிவுறப் பேசுவார்.
ஒப்பீட்டளவில் சிறிய நிலப்பரப்பாகிய தமிழகம், மூவேந்தர்களாலும் குறுநில மன்னர்களாலும் பிரிவுண்டு நின்று, ஒருவரோடொருவர் போரிட்ட காட்சிகளைப் பாடுவதைக் காட்டிலும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பண்பட்ட சிந்தனைகளைப் பாடிய புலவர்களையே அ.ச.ஞா அடையாளம் காட்ட முற்படுவார்.

ஒரு சமூகத்தில் எப்போதும் இருக்கக்கூடிய சிறுமைகள் நடுவிலும் கொள்கைக் குன்றென நிமிர்ந்து நின்ற கவிதை வரிகளையே சங்க கால வாழ்வின் ஆகச்சிறந்த அம்சங்கள் எனக் கொள்வது அ.ச.ஞா வின் அணுகுமுறை ஆகும்.
பக்தி இலக்கியங்கள் இறைவனின் மேன்மையைப் பேசுவதற்குத் தரும் அதே முக்கியத்துவத்தை தொண்டு நெறிக்கும் பசியாற்றலுக்கும் தருவதை பற்பல உதாரணங்களுடன் அ.ச.ஞா தன் உரைகள் பலவற்றில் விளக்கியுள்ளார்.

தேவார மூவரின் தல யாத்திரையே இது போன்ற ஒருமையுணர்வை ஊக்குவிப்பதற்கே என்பது அவருடைய பார்வை.

சங்கத் தமிழாயினும, சமயத் தமிழாயினும் அவை சமூக மேம்பாட்டுக்கு எவ்விதம் வழிகோலின என்பதை தன் உரைகளில் அ.ச.ஞா திறம்பட விளக்குகிறார்.

தத்துவப்பார்வை

சொற்பொழிவாளர்கள், காவியங்களில் இடம்பெறும் சம்பவங்களை காவியச்சுவை காட்டும் நோக்கிலேயே பெரும்பாலும் காணுவர். மிகச்சிலரே அதன் தத்துவப் பின்புலத்தை காட்டுவிப்பர். அத்தகைய நுண்மான நுழைபுலம் மிக்க அரிய அறிஞர்களில் முதல் வரிசைக்குரியவர் அ.ச.ஞா.

அப்படி அவர் காட்டுவிக்க, தமிழுலகம் கண்ட நுட்பங்கள் ஏராளம். குறிப்பாக கம்ப ராமாயணத்தில் அத்தகைய காட்சி விளக்கங்கள் பலவற்றை அவர் தந்துள்ளார்.

தன்னுடைய வேள்வியைக் காக்க இராமனை அனுப்பி வைக்குமாறு தசரதனிடம் விசுவாமித்திரன் கேட்கிறான். தசரதன் தயங்க, வெகுண்ட விசுவாமித்திரன் பலவானாய் சினம் கொண்டு மேவிப் பேசுகிறான்.

ஆனால் தாடகையை பெண் என்று இராமன் கருதி கணை தொடுக்கத் தயங்கும் இடத்தில் விசுவாமித்திரன், திணறிப் போகிறான்.-

பற்பலவாய் விளக்கங்கள் தர அவன் தவிக்கும் தவிப்பு- காவியத்தில் தெற்றென வெளிப்படும் இடங்களை அ.ச.ஞா. சுட்டிக் காட்டுவதுடன் அதற்கான காரணத்தையும் சொல்வார்.

“தசரதன் முற்றாக முழுதாக உலகியல் சார்ந்தவன். அவனிடத்தில் ஒரு தவசி எளிதில் பேசி மனம் மயங்கச் செய்துவிட முடியும். ஆனால், அருளியலும் உலகியலும் கலந்த கலவையாய் அரியதோர் அவதாரமாய் வரும் இராமனுக்கு முன்னால், மேவிப்பேச விசுவாமித்திரன் திணறுகிறான் என்றால், இராமனின் இருப்பு அத்தகைய தன்மை கொண்டது” என்பார் அ.ச.ஞா.

அ.ச.ஞா. அவர்கள் மேடைப் பேச்சில் இயல்பான மேதைமை வெளிப்படுமேயன்றி, செயற்கை உத்திகளோ, கவனம் ஈர்க்கும் முயற்சிகளோ இராது. கணீர்க்குரலில், சிந்தனைகள் ஒன்றுடன் ஒன்று பின்னப் பின்ன மேற்கொண்ட தலைப்பின் மையம் நோக்கி நிதானத்தோடும் உறுதியோடும் முன்செல்லும் பாணி, அ.ச.ஞா அவர்களின் சொற்பொழிவுப் பாணி.

இராமன் உரையாடும் இடங்களை மிக நுட்பமாக ஆராய்ந்து, மூலப்பரம் பொருளாகிய இராமன் பேசுகிற இடங்கள் எவை, அவதார புருஷனாகிய இராமன் பேசுகிற இடங்கள் எவை என்று செம்மையுறச் சுட்டுகிற விதத்தில் அவருடைய உரை அமையும்.

தமக்கு முன்னே இருப்பவர்கள் எத்தன்மையராயினும் அவர்களின் கேள்வியறிவை மேம்படுத்தும் விதமாக அழுத்தமான எளிமையான விளக்கங்களை வழங்குவார் அ.ச.ஞா.

ஒருமுறை கோவையில் ஒரு கலையரங்கில் அறிஞர்கள் பலர் முன்னிலையில் சிலப்பதிகார விழாவில உரை நிகழ்த்தினார். அவர் வந்திருப்பதை அறிந்து உள்ளூர்க் கோவில் ஒன்றில் பட்டிமன்றம் ஒன்றிற்கு தலைமையேற்க அழைத்திருந்தனர்.

இராமாயணத்தின் எதிர் நிலைப் பாத்திரமாகிய இராவணன், மகாபாரதத்தின் எதிர்நிலைப் பாத்திரமாகிய துரியோதனன் ஆகியோரைப் பற்றிய விவாதம் மேடையில் நிழ்ந்தது.

அ.ச.ஞா தன்னுடைய தீர்ப்புரையில், அந்தப் பாத்திரங்களின் செயல்கள் வழியாக அவர்தம் உளவியலை ஆராய்ந்தார்.

இராவணனின் அத்தனை தவறுகளுக்கும் காரணம் அகங்காரம், துரியோதனனின் அத்தனை தவறுகளுக்கும் காரணம் அறியாமை என்று வகுத்துக்கொண்டு, அகங்காரத்திற்கும் அறியாமைக்கும் நடுவிலான வேற்றுமையின் பரிமாணங்களை விளக்கினார்.

ஒரு செயலை விடவும் அந்த செயலின் மூலம் எதுவென்று காண பாத்திரங்கள் ஊடாக பயணப்படும் பார்வை அ.ச.ஞாவின் தனித்தன்மை வாய்ந்த அம்சங்களில் ஒன்று.

ஆங்கில இலக்கியத்தில் பயிற்சி, அறிவியல் தெளிவு, ஆன்மீகத்தில் ஆழங்கால் பட்ட அனுபவம், சோதிடம் போன்ற கலைகளில் ஈடுபாடு ஆகிய பன்முகத் தன்மைகள் கொண்டவர் அவர்.

முன்னொரு காலத்தில் பட்டி மண்டபங்களில் அ.ச.ஞா அணித்தலைமையேற்று வாதிட்டதுண்டு. அப்போது எதிரணியில் பேசிய ஒருவர், தன் அணிக்கு ஆதரவாக அ.ச.ஞா அவர்கள் எழுதிய ஒரு நூலில் இருந்து மேற்கோள் காட்டினார்.

அ.ச.ஞா சற்றும் தயங்காமல், அந்தக் கருத்துகள் தன்னுடைய பழைய பார்வை என்றதோடு நில்லாமல், “என் நூல்கள் எதையாவது தீயிலிட்டுக் கொளுத்தச் சொன்னால் இந்த நூலைத்தான் கொளுத்துவேன்” என்றார்.

வெறும் வாதத்திற்காக இல்லாமல் உள்ளம் திறந்து வெளிப்படையாகச் சொன்ன வார்த்தைகள் அவை. அ.ச.ஞா வின் பேச்சுப் பாணியும் அதுவே ஆகும்.

சொற்பொழிவுக் கலைகளில் பல புதுமைகள் உருவான காலங்களில் எல்லாம், அ.ச.ஞா அவர்களை முன்னிலைப்படுத்தியே அவை நிகழ்ந்தன.

“பாத்திரங்கள் பேசினால்” என்பன போன்ற புதிய உத்திகளை மிகவும் ஊக்குவித்தார். அவர் தலைமையில் தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்ற வினாவிடை அரங்குகள் மிகப் பெரிய அளவில் அவையோருக்கு பயன்பட்டன.

இலக்கியங்கள் குறித்து எவர் கேட்கும் கேள்விகளுக்கும் அறிஞர் ஆயம் விடைகூறும் விதமாய் அமைக்கப்பட்ட அரங்குகளில் பெரும்பாலானவற்றுக்கு அ.ச.ஞா தலைமையேற்று நெறிப்படுத்தினார்.

அத்தகைய அரங்க விளக்கங்களில் இருந்தொரு பகுதி!

கேள்வி – கோள்கள் எல்லாம் இறைவனின் ஆணைப்படி நடப்பவை. திருஞாசம்பந்தத்தைக் கோள்களின் நிலையைச் சுட்டிக்காட்டித் திருநாவுக்கரசர் தடுத்தார். திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடிப் புறப்பட்டார். இறையடியாராகிய திருநாவுக்ரசர் கோள்களுக்கு அஞ்சுபவராகத் தோன்றுவது சரியா?

அ.ச.ஞா – இதுபற்றி நான் ஏற்கெனவே சிந்தித்ததுண்டு. மனித சமுதாயம் முழுவதிலுமுள்ள சில அடிப்படைகளை வைத்து பல செயல்கள் பெரிய புராணத்தில் நடைபெறுகின்றன. இன்றைக்கும் பஞ்சாங்கத்தை எடுத்து கடைசிப் பக்கத்துக்கு இரண்டு பக்கங்கள் முன்னதாகப் பார்த்தீர்கள் என்றால் சில நட்சத்திரங்களைக் கொடுத்து, இந்த நட்சத்திரங்களில் “பாயில் படுத்தவர் எழுந்திரார் பயணம் போனவர் மீளார்” என்று எழுதியிருக்கும். எனக்கு ஜோதிடம் பார்க்கிற பழக்கம் உண்டு. ஆனால் அதற்கும் கோளறு பதிகத்திற்கும் தொடர்பு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

“ஒன்பதோடு ஒன்றோடேழு
பதினெட்டு முடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே”

என்ற பாடலுக்கு என் மகள் விளக்கம் கேட்டாள். இன்னதென்று சொன்னேன். “அந்தப் பாட்டுதாம்பா இங்க இருக்கு” என்று என் மகள் பஞ்சாங்கத்தைக் காட்டிச் சொன்ன பிறகுதான் சம்பந்தருடைய பாடல் இங்கே இருப்பதைப் புரிந்துகொண்டேன். எனவே அவையெல்லாம் அந்தக் காலத்தில் இருந்த சில பழக்க வழக்கங்கள்.

நாவுக்கரசரைப் பொறுத்தவரை அவர் பெற்ற அனுபவம் இங்கே குறுக்கே நிற்கிறது. “மீண்டாய அமண்கையர் வஞ்சனை” என்பது அவர் ஏதோ கேள்விப்ட்ட விஷயம் இல்லை. அவருடைய அனுபவம். அவருக்கு திருஞானசம்பந்தருடைய அருள் நிலைகளும் பெருமைகளும் தெரியும். ஆனால் குழந்தை குழந்தைதான். மீனாட்சி அம்மன் பிள்ளைத் தமிழ் பாடுகிறபோது திருஷ்டிப் பொட்டு வைப்பதாகப் பாடல் வரும்.

அவள் அகில சராசரங்களை எல்லாம் படைத்தது அப்போது நினைவுக்கு வராது. அம்மை குழந்தையாகிவிட்டால் அதுதான் வழி. சம்பந்தர் பாடிய கோளறு திருப்பதிகத்தில் நமக்கு என்னவெல்லாம் நம்பிக்கை உண்டோ அவற்றை வரிசையாகச் சொல்லி அவை ஒன்றும் செய்யாது என்று பாடியிருக்கிறார். இதில் இன்னொரு கருத்து- பத்துப் பாடல்களையும் வீட்டில் போய்ப் படித்துப் பாருங்கள். இறைவனை வர்ணிக்கிறபோது மூன்றே விஷயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியிருப்பார். ஏந்திழையுடன் எருகேறியவன். ஊமத்தம் பூ குடியவன். சந்திரனைத் தலைக்கணிந்தவன்.

பத்துப் பாடல்களிலும் இது இருக்கும். ஏனென்று யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது இது தியான சுலோகம். பத்துப் பாடல்களிலும் இதே வர்ணனையைத் தருவதன் மூலம் அந்த உருவத்தை நம் மனதில படமாக வரைகிறார். சம்பந்தப் பிள்ளையார். எனவே திருநாவுக்கரசர் அச்சம் கொண்டாரா என்றால அச்சம் என்ற சொல்லைப் பலபகைகளில் பார்க்கவேண்டும். ஒரு தாய் இருட்டைக் கண்டு கொள்கிற அச்சம் வேறு. தன் குழந்தையைப் பற்றிக் கொள்கிற அச்சம் வேறு.

திருநாவுக்கரசர் விடம்தீர்த்த பதிகம் பாடினார். “ஒன்றுகொலாம்” என்று- இந்தப் பாட்டுக்குப் பொருள் எழுத மாட்டேன் என்று எழுதியிருக்கிறேன். ஏனென்றால் இந்தப் பாடலும் தியான சுலோகம். அதை லட்சக்கணக்கான முறை உருவேற்றினால் நீங்களும் பாம்புக் கடிக்கு மந்திரிக்கலாம்.

உவப்பத் தலைகூடி உள்ளப்பிரிதல்

தமக்கு இணை வைக்கக் கூடுய அறிஞர்களையும். தம்மினும் இளையோரையும் இனங்கண்டு பாராட்டும் இனிய இயல்பு கொண்டவர் அ.ச.ஞா ஆவார்.

ஒவ்வொருவரும் எந்தத் துறையில் சிறந்து விளங்குகின்றனரோ அந்தத் துறையில் அவர்களை உரையாற்ற விட்டு ஆரவாரம் செய்து ஆதரிக்கும் பாங்கினைக் கைக்கொண்டவர் அ.ச.ஞா.

எனவே ஒவ்வோர் உரையாளரையும் அவையோர் உன்னிப்பாக கவனித்தனர். உரையாளர்களும் தங்களை மேன்மேலும் தகுதிப்படுத்திக் கொண்டே வந்தனர்.

இதன் விளைவாக, சொற்பொழிவுக் கலையில் ஒரு பொற்காலத்தை அ.ச.ஞா. அவர்கள் உருவாக்கினார்.
மாலையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு, காலையிலேயே வந்துசேரக்கூடிய அறிஞர்கள், அ.ச.ஞா முன்னிலையில் அவருடைய அறையில் கூடி பற்பல செய்திகளைக் கலந்துரையாடி, விளக்கங்கள் கேட்டுப் பெற்று, நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரிய மனமில்லாமல் பிரிவார்கள்.

உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

என்னும் திருக்குறளின் இலக்கணத்திற்கு, அ.ச.ஞா அவர்களின் உறைவிடங்களே இலக்கியமாய்த் திகழ்ந்தன.
ஞானிகள், சித்தர்கள், மெய்யறிவாளர்களுடன் அ.ச.ஞா கொண்டிருந்த தொடர்பு, மகாகவி பாரதியின் சித்தர்கள் தொடர்பினை ஒத்திருந்தது.

பாரதியார் – குள்ளச்சாமி சந்திப்பை நேரில் கண்பாற் போன்ற ஈடுபாட்டுடன் கேட்பவர் உள்ளங்களைக் கொள்ளும் விதமாக விரிந்துரைப்பார். அப்போது அருளாளர்களுடன் தனக்கு ஏற்பட்ட தொடர்புகளையும் நினைவு கூர்வார்.

உலகம் தட்டையானதென்று பலரும் சொல்லிக் கொண்டிருந்த போது “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்” என்று திருவண்டப் பகுதியில் மாணிக்கவாசகர் பாடியிருப்பதைக் குறிப்பிட்டு, மெய்யறிவாளர்களின் அறிவியல் பார்வையை மிக அழகாக விளக்குவார் அ.ச.ஞா.

அவருடைய அயல்நாட்டுப் பயணங்களில் தமிழ் ஆர்வலர்கள் சூழ அமர்ந்திருந்து அவர் மேற்கொண்ட பல உரையாடல்கள் வெளிவந்துள்ளன.

குடும்பங்கள் சீர்குலையக் கூடிய சமூக நிலையினைப் பற்றி விவாதங்கள் வருகையில், மனமொப்பிய காதல் வாழ்வின் மாண்புபற்றி சராமாரியாக பண்டைய இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டும் மேதைமையை அந்த உரையாடல்களில் காணலாம்.

குறிப்பாக, “தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றுபோல தோன்றும் இன்ப துன்பங்களே” என்னும் திருக்கோவையாறு வரியை அவருக்கே உரிய பாணியில் அவர் விவரிக்கும் பாங்கு கேட்டு இன்புறத் தக்கது.

சொல்லப்போனால், அ.ச.ஞா. அவர்களின் உரைப்பாணியே உரையாடல் பாணிதான். தனக்கு முன்பு ஆயிரம் பேர் இருந்தாலும் ஒவ்வொருவரோடும் தனித்தனியே உரையாடுவது போன்ற உணர்வை அவருடைய உரைகள் ஏற்படுத்தும்.

சொற்பொழிவுகள் என்பவை உரையாற்றுபவரின் மேதைமையை உணர்த்துவதற்கான களமன்று. அவையில் இருப்பவர்களை ஆழமாக சிந்திக்கத் தூண்டி, அவர்களின் பார்வையில் புதிய தெளிவைப் படைப்பவையே சிறந்த சொற்பொழிவுகள்.

ஒரே சீராக வரும் சிந்தனைகளைக் குறித்து அ.ச.ஞா அவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொல், “தைல தாரை போல” என்பதாகும்.

அத்தகைய சீர்மையை அ.ச.ஞா. அவர்கள் சொற்பொழிவுகளில் தமிழுலகம் கண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *