சமீப காலமாய், இலக்கியத் துறையில் புத்தெழுச்சி காண்கிறது பொள்ளாச்சி. பூபாலன், அம்சப்பரியா போன்ற கவிஞர்கள் நெறிப்படுத்தும் பொள்ளாச்சி இலக்கிய வட்டமும் இதற்குக் காரணம்.
மூத்த தலைமுறையில் பூத்த தமிழ்க் குறிஞ்சிகள் பலரின் தமிழ்மணத்தையும் இந்நகரம் தக்க முறையில் தக்க வைத்துள்ளது.

குழந்தைகளைப் பற்றி எழுதுவதுபோல் எழுதிக் கொண்டுவந்து,

“இருள்கள் வெளிச்சப்படுத்தி
விடுகின்றன
பெண்ணில் ஒளிந்திருக்கும்
ஆண்மையையும்
ஆணில் ஒளிந்திருக்கும்
பெண்மையையும்”
என ஓங்கியடிக்கிற கீதா பிரகாஷ்

“பேரிரைச்சலுக்கு அப்பால் சென்று
புதிதாய் ஓர் அண்டத்தில்
என்னை விழைக்கிறேன்”
என் கையில் பதிய விஸ்வாமத்ரியாய் விகசிக்கிறார். “ஜனுக்குட்டியின் பூனைக் கண்கள்” எனும் தலைப்பில் அவருடைய கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது.

ஏதோ ஒன்றைச் சுட்டுவதன் வழி மொத்த பொழிவையும் விமர்சிக்கும் உருவகக் கவிதைகளில் ஆலாபனையே நிகழ்த்துகிறார் ஆன்மன்.
“உலர்ந்து கருகி
தூளாகிக் கொதித்துப்
பானமாகப் போவதறியாமல்
பசுமை
பரப்புகிற
தேயிலை” என்ற கவிதை தேயிலைக்கு மட்டுமின்றி எல்லாவற்றுக்கும் எல்லோருக்கும் பொருந்துகிறது.

“நீங்கள் மட்டும் கட்டித்தழுவி
வஞ்சக முத்தமிடாமல்
இருந்திருந்தால்
வெற்றியின் இலக்கை
அடைந்திருப்பேன்
கீறல்கள் இல்லாமல்”
என்னும் ஆன்மனின் ஆதங்கம் ஆதி மனிதனிடமே ஆரம்பமாகியிருக்க வேண்டும்.

“லெமூரியக் கண்டத்து மீன்கள்” அவரின் தொகுப்பு.
ஒளிபுகா
அடர்வனத்திலிருந்து
இரைதேடப் பறக்கிறது
பெயரிடப்படாத பறவை
சருகுகளால்
வேயப்பட்ட அக்கூட்டின்
தனிமையாய்
நான்” என்னும் அழகிய வரிகளில் மிளிர்கிறார் இ.இளையபாரதி.
பெய்தலால் சிலர்
கோபத்திற்கு ஆளாகும்
அது
இருகை ஏந்திப்
பிடிக்கும் சிறுமியின்
கரங்களில்
மழையாகிறது” போன்ற நல்ல கவிதைகளை, அவர் “மெல்ல எரியும் இரவு” என்னும் தன் தொகுப்பில் தந்திருக்கிறார்.

விஸ்வரூப மரத்தில்
சின்ன மெல்லிசை
சிட்டுக்குருவி,

பிரார்த்தனை இல்லா
பாதயாத்திரை
எறும்புக் கூட்டம்
என்று சுவாரசியமான கவிதைகளை, “காற்று வாசித்த கவிதை” என்னும் தன் நூலில் தந்துள்ளார் கோகிலா வேலுச்சாமி.

கூடுதலாய் ஒரு நுழைவுச் சீட்டு என்னும் தன் தொகுப்பில் சிறந்த கவிதைகளை வடித்திருக்கிறார் யாழிசை மணிவண்ணன்.
“அடிமாட்டு இடைத்தரகன்
தொழில் சிறக்கப் படைக்கிறான்
வெண்ணெய் அலங்காரம்
நந்தி சிலைக்கு”

வெட்டிக் கொண்டேயிருக்கிறது
என்னை
விளக்கொளியின் கீழ் சுழலும்
மின் விசிறியின் நிழல்

போன்ற அருமையான வரிகள் இத்தொகுப்பில்…
“உலகில்
தவறு தவிர்த்த இர-வுகள்
எங்கேயாவது
என்றாவது இருக்கிறதா?”
இது யாழ் தண்விகாவின் கேள்வி.

“இது அரசியல் இல்லை” என்னும் பின்தொடருடன் அவர் காட்டும் காட்சிகளில் ஒன்று,
“ஒரு பெரிய மீன் அறுக்கிறார்கள்
வயிற்று நீரினில் சுவாசம் செய்து
உயிர் பிழைத்திருந்த குறுமீன்கள்
துள்ளிக் குதிக்கின்றன”
இவருடைய தொகுப்பு அகறி வெளியீடு. ஏனைய தொகுதிகள் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் பதிப்புகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *