(நான் முழுதாய் பங்கேற்கும் முதல் படம்)

இணையதளம் திரைப்படத்தில், காதல் உண்டு, நகைச்சுவை உண்டு, அதிரடி சண்டைக் காட்சிகள் உண்டு. குற்றங்கள் நடைபெறுவதும், குற்றவாளிகளைக் கண்டறிவதுமான உத்திகள் உண்டு.

ஆனால், உள்ளடக்கத்திலும், உருவாக்கத்திலும் இது முற்றிலும் புதுமையான படம். இந்தப் படத்திற்கு யார் கதாநாயகன்? யார் கதாநாயகி? என்று நண்பர்கள் கேட்டபோது சொன்னேன்.

“இந்தப் படத்தில் முதன்மைப் பாத்திரங்கள் உண்டு. கதைதான் கதாநாயகன். கதைதான் கதாநாயகி”.

தொடக்கவிழா பூஜையையட்டி சில காட்சிகள் எடுக்கப்பட்ட பின்னர், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு தொடர் படப்பிடிப்பு துவங்கியது.

திரைக்கதை வடிவமும், வசனங்களும் முன்னரே முடிவு செய்யப்பட்டுவிட்டதால், இணை இயக்குநர்களும், துணை இயக்குநர்களும், உதவி இயக்குநர்களும் காட்சியமைப்புகளைத் துல்லியமாகப் பிரித்திருந்தனர்.

இடைவெளியின்றி இரவு, பகலாய் தொடர்படப்பிடிப்புகள் நடந்ததால், கதையமைப்பின் விறுவிறுப்பு படப்பிடிப்பு அனுபவங்களிலும் இருந்தது.

சென்னையில், அண்ணா அறிவாலயம் அருகிலுள்ள தற்போது செயல்பாடுகளைக் குறைத்துக்கொண்ட, “ரெமிமால்” என்னும் பிரம்மாண்டமான வணிக வளாகத்தில் முதல்நாள் படப்பிடிப்பு.

முதன்மைப் பாத்திரங்களில் ஒருவரான ஸ்வேதா மேனன் அறிமுகக் காட்சி, அதனையட்டிய சில நகைச்சுவைக் காட்சிகள், ஒரு குற்றவாளி பிடிபடும் காட்சி, அவர் அதிரடிச் சண்டையில் அடிபடும் காட்சி ஆகியவை அந்த வணிக வளாகத்தில் ஒளிப்பதிவாயின.

இதே வரிசையில், படத்தில் கணபதி என்ற பெயரில் வரும் ஈரோடு மகேஷ் அறிமுகமாகும் காட்சியும் படம் பிடிக்கப்பட்டது.

ஈரோடு மகேஷ் என்றதுமே நம் மனதில் வரும் எதிர்பார்ப்பு நகைச்சுவை. அதற்கும் படத்தில் குறைவிருக்காது. ஆனால் அவர் ஒரு குணச்சித்திரப் பாத்திரத்தில் மிகவும் வித்தியாசமான ஆளுமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

படப்பிடிப்புத் தளத்தில் மகேஷ§ம், நானும் இருக்கும் இடங்களில் அவ்வப்போது வெடிச்சிரிப்பு கிளம்பும்.

படத்தில், திரு.ஒய்.ஜி.மகேந்திரன் காவல்துறை ஆணையராக வருகிறார். அவரை ஐ.ஜியாக மாற்றிவிட வேண்டுமென்று கோரிக்கை வைத்தார், காரணம் கேட்டேன்.

“இல்லை சார்! அவர் வரும்போது எல்லோரும் “ஐ.ஜி.வரார், ஐ.ஜி வரார்னு சொல்லட்டும். நான் நிமிர்ந்து பார்த்துவிட்டு “என்னங்க… ஐ.ஜி வரார்னு சொன்னீங்க ஒய்.ஜி. வராரே” & ன்னு கேட்கற மாதிரி வைச்சுக்கலாமே” என்றேன்.

ஆனால், ஒய்.ஜி. ஆணையராகத்தான் வரவேண்டுமென்று இயக்குநர்கள் ஆணையை எங்கள் இருவராலும் மீற முடியவில்லை.

படப்பிடிப்பு நடந்த ‘ரெமி மால்’ தான் ஒரு காலத்தில் சென்னையின் தலைசிறந்த திருமண மண்டபமாக விளங்கிய “ஆபடஸ்பரி மாளிகை” என அங்கு சென்ற பின்னரே அறிந்தேன்.

மகேஷிடம் சொன்னேன், “ இந்த மண்டபத்தில் தான் ஒருமுறை, செய்தியாளர் ஒருவர், கவியரசு கண்ணதாசனைப்பற்றி இழிவாக செய்தி போட்டார் என்ற கோபத்தில் அவர் சட்டையைப் பிடித்து ஒருவர் அடிக்கவே போனார்.

“அதுயார் சார்?” என்றார் மகேஷ். “மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்” என்றேன்.

பட்டுக்கோட்டையார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது சகோதரர் முதலில் தொலைபேசியில் கவியரசு கண்ணதாசனைத்தான் அழைத்தார்.

இருவருடைய பாடல்களையும் மக்கள் மத்தியில் சேர்க்கும் நல்ல நோக்கத்தில் “பட்டுக்கோட்டையா?” “கண்ணதாசனா?” என்று நடந்த பட்டிமன்றங்களே, அவர்களை ஏதோ எதிரிகள் போல் சித்தரிக்கும் சீர் குலைவையும் செய்துவிட்டன.

படப்பிடிப்புத் தளத்தில் ஒரே நேரத்தில் அறுபதிலிருந்து எழுபது பேர்களாவது வேலை செய்து கொண்டிருப்பார்கள். தொடர் படப்பிடிப்பில் அனைவரையும் நாம் அறிமுகம் செய்து கொள்வது சிரமம்.

ஆனால், ஒவ்வொருவரும் தங்கள் வேலையின் வழி, தங்களை வெளிப்படுத்தி விடுகிறார்கள். படப்பிடிப்பு அரங்குகளை அமைக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள், ஒலி ஒளி அமைப்பாளர்கள், ஒளிப்பதிவு உதவியாளர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், உபசாரக் குழுவினர் என ஒவ்வொருவரும் தங்கள் வேலை நேர்த்தியாலும், திறமையாலும் பிரமிக்க வைத்து “யார் இவர்”? என்று கேட்டுத் தெரிந்து கொள்ளும் அளவு, நம்மை மலைப்பில் ஆழ்த்தி விடுகிறார்கள்.

சினிமா என்னவோ கனவுத் தொழிற்சாலைதான். ஆனால் அதன் ஒவ்வோர் அம்சமும் மற்ற தொழிற்சாலைகள் போலவே வியர்வையாலும் வியப்பூட்டும் உழைப்பாலும், கூட்டு முயற்சியாலும் கட்டமைக்கப்படுகின்றன.

இணையதளம் படப்பிடிப்பை அதன் இயக்குநர்களாக சங்கர் & சுரேஷ் ஆகியோர் எவ்வளவு துல்லியமாகத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதைப் படப்பிடிப்பில் முதல்நாள் நிகழ்ச்சிகளே பறை சாற்றின.

இணை & துணை இயக்குநர்கள் குழுவினரின் துடிப்பும், உற்சாகமும் சுவாரஸ்யமானவை.

இந்தப் படத்தின் துணை இயக்குநர்கள், பெருமாள், பாக்கியநாதன் ஆகியோர் திரைத்துறையில் நல்ல அனுபவம் கொண்டவர்கள். வித்தியாசமான பார்வையும், கனவுகளும் கொண்ட ஷமீர், படம் பற்றிய தீவிரமான சிந்தனைகள் கொண்ட எபி எனும் எட்வர்ட், காட்சித் தொடர்பியல் படித்துவிட்டு ஆர்வத்துடன் வந்து சேர்ந்திருக்கும் சித்தார்த் என்றொரு திறமைப் பட்டாளம், இந்தப் படம் உருவாகத் துணை செய்கிறது.

இணையதளம் பாடல்கள் உருவாக்கமும்
ஓர் அற்புதமான அனுபவம்…….
(சொல்கிறேன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *