நான் முழுதாய் பங்கேற்கும் முதல் படம்

இளம் வயதிலேயே புகழ்ப்பாதையில் வளர்ந்து வரும் இளைஞர் அரோல் கரோலி, படத்திற்கு இசையமைக்கிறார் என்பதை இயக்குநர் சங்கர் சொல்லியிருந்தார்.

பிசாசு படம் வண்ணத்திரையுலகில் அவர் மேல் வெளிச்சம் பாய்ச்சியிருந்தது. அருள்முருகன் என்ற பெயர் அரோல் கரோலி ஆகியிருந்தது. மிகச்சிறந்த வயலின் கலைஞர் என்றும் அவரைப்பற்றி கேள்விப்பட்டிருந்தேன்.

மலேசியாவில் வெளியான என் 60 வது நூலாகிய “இணைவெளி” கவிதைத் தொகுப்புக்கு சிஸ்மான்டெக் திரு.வெங்டேஷ், வெற்றித் தமிழர் பேரவையின் சென்னை மாவட்டச் செயலாளர் திரு.வி.பி.குமார் உள்ளிட்ட நண்பர்கள் சென்னையில் அறிமுகவிழா ஏற்பாடு செய்திருந்தனர்-.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தலைமையில் அந்த விழா நடந்த அதே நாள் இரவு பத்து மணிக்கு மேல் பாடல் உருவாக்கம் என்று திட்டமிடப்பட்டிருந்தது.

ஃபிஷர்மென்ஸ்கோவே எனும் கடற்கரை விடுதியில் ஒரு வில்லா. இரவு உணவுக்குப்பின் அரோல்கரோலி என்னிடம், “சார்! இன்ஸ்பிரேஷனுக்காக சில வரிகள் எழுதிக் கொடுங்கள் என்றதும் சங்கரைப் பார்த்து மெல்ல முறுவலித்தேன்.

ஏனெனில், படத்தில் பாடல்களுக்கான சூழல்கள் முடிவானதுமே உரிய பாடல்களை எழுதி அனுப்பியிருந்தேன். அவை இயக்குநர்கள் இருவருக்குமே பிடித்திருந்தன. ஆனால், மெட்டுக்குப்பாட்டா , பாட்டுக்கு மெட்டா என்பதை இசையமைப்பாளர் முடிவுக்கே விட்டுவிடுவோம் என்று மூவருமே ஒத்துக் கொண்டிருந்தோம்.

எனவே அரோல் கரோலி கேட்டதும், ஏற்கனவே எழுதி வைத்திருந்த பாடலை எடுத்து நீட்டினேன்.

பாடலைப் படித்துப் பார்த்த அரோல் கரோலி முகம் மலர்ந்தார். தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, பாடல்களை எழுதச் சொல்லி இசையமைப்பதுதான் தனது பாணி என்பதை அரோல் கரோலி தெரிவித்திருந்தார்.

படத்தில் ஓர் இளம்பெண் தன் சகோதரியின் மகள் பிறந்த நாளில் வீணை வாசிப்பார். வீணையில் விரல்கள் வழுக்கும். அந்தப் பெண்ணுக்கும் திக்குவாய் இரண்டையும் இணைத்து கூட்டத்தில் சிலர் கேலியாகப் பேசிவிடுவார்கள்.

அந்தப் பெண் மீது காதல் கொண்டிருக்கும் இளைஞன் ஒருவன், அவளை ஆறுதல்படுத்தியும் தன் காதலை வெளிப்படுத்தியும் பாடுவதாக சூழல்.

பல்லவியைச் சற்றே சீரமைத்து, பாடிக்காட்டிவிட்டு, அனுபல்லவியாய் இரண்டு வரிகளுக்குச் சந்தம் அமைத்து எழுதித் தரச் சொன்னார்.

அதன்பின் சரணத்திற்கு இசையமைத்து முழுமை செய்தார்.

திக்கும் போது சொற்கள் நடுவில் விழும் இடைவெளியும்.

ஒருவித அழகுதான் என்று ஆறுதலாய் தொடங்கும் சரணம்.

“ஸ்வரங்களின் இடைவெளி ராகமென்றால்
நிறங்களின் இடைவெளி பூக்களென்றால்
அருவியின் இடைவெளி ஓசையென்றால்
இதழ்களின் இடைவெளி ஆசையென்றால்
மொழியினில் இடைவெளி கூடாதோ & நம்
இடையினில் இடைவெளி தீராதோ”
என்னும் வரிகளை அரோல் வெகுவாக ரசித்தார்.

அதற்குப்பிந்தைய வரிகளில் முதல் வரி மீண்டும் நம்பிக்கையைப் பேசுவதைக் கவனித்த அரோல் கரோலி, “ஏற்கனவே நம்பிக்கையிலிருந்து நகர்ந்து, காதலுக்கு வந்துவிட்டோம். எனவே காதலை வெளிப்படுத்தும் வரியாகவே கொடுங்களேன்” என்று நுட்பமாக சுட்டிக் காட்டினார்.

படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். மீதமுள்ள மூன்று பாடல்களின் உருவாக்கத்தைக் கோவையிலுள்ள வெஸ்டர்ன் வேலியில் முடித்தோம்.

கவிஞர் சக்தி ஜோதி, “மூங்கிலரிசி வெடிக்கும் பருவம்” என்ற தன் கவிதைத் தொகுப்பை எனக்கு அனுப்பியிருந்தார். மூங்கில் வெடிக்க நாற்பதாண்டுகள் ஆகும். அதுபோல ஒரு பெண்ணின் உண்மையான சுதந்திரம் உள்மன எண்ணங்களும் நாற்பதுகளில் வெளிப்படுகின்றன என்று, அந்தத் தலைப்பை விளக்கியிருந்தார்.

இந்தப் படத்திலும் நாற்பதுகளில் இருக்கும் பெண்மணம் பற்றிய பாடல் ஒன்று உண்டு.

பாடலின் சரணத்தில் தனிமையில் ஓர் அம்சமான விரகத்தைத் தொட்டுக் காட்டும் விதமாய்

“இருளின் திரைகள் விலக விலக
பழைய பிம்பமே
இரவு முழுதும் மனதில் அலையும்
விரக மிருகமே”
என்ற வரிகளை இயக்குநர்களும், இசையமைப்பாளரும் புன்னகையுடன் அங்கீகரித்தனர்.

சரணத்தில் அடுத்தடுத்த வரிகள், விரகத்திற்கு விளக்கவுரை எழுதும்போது அரோல் கரோலியின் குறும்பான குறுக்கீடு, அணை போட்டதுடன் பாடலின் கருநோக்கி மீண்டும் ஆற்றுப்படுத்தியது.

“சார்! ரணகளத்திலேயும் ஒரு கிளுகிளுப்பு இருக்கே… பரவாயில்லையா”

இப்படி அவர் கேட்டதும் புரிந்து கொண்டு பின்னர் வந்த வரிகளை மாற்றிக் கொடுத்தேன்

சமூக ஊடகங்களின் பயன்பாடு பற்றி அதிரடியாய் ஒரு பாடல் படத்தில் உண்டு.

படத்தின் தலைப்புப் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.
(இன்னும் சொல்வேன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *