மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…

தலை தடவும் மேகம்; தொடுந்தொலைவில் வானம்;
மலைகளெங்கும் மோனம்; மனம் முழுதும் ஞானம்;

கண்கள் மெல்ல மயங்கும், கனவுகளின் மடியில்;
விண்ணளந்த மனமோ கவிதைகளின் பிடியில்;

உலகிலிதுதானே உயரமான உறவு
சிகரம் சென்று காணும் துறவு என்ன துறவு?

மைகுழைத்த வானம் மௌனமொழி சொல்லும்
கையசைத்துக் கொண்டே கதிர் உறங்கச் செல்லும்;

பூமலரும் விசையில், பனியிறங்கும் தரையில்;
பூமியெங்கும் நிறையும், வான்மறையும் வரையில்;

அம்புலி நிலாவில் வரும் அந்த பனிக்காற்று
கம்பளியைத் தாண்டி வரும் கம்பன் தமிழ்ப் பாட்டு;

குயிலிசையின் சுதியில் ரயிலின் இசை பொசியும்
விரல்கள் எதுவும் இன்றி வயலின் இசை கசியும்

உறங்கும் பொழுது கனவில் பசுமை வந்து கொஞ்சும்
இறங்கும் பொழுது மலைகள் திரும்ப சொல்லிக் கெஞ்சும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *