மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…
பிடிக்கக் கூடிய தொலைவில் ரயிலை
விட்டு விட்டதாய் வருகிற கனவுகள்;
உணர்ச்சிப் பிழம்பாய் உரையன்று நிகழ்த்த
மைக் பிடிக்கும் முன் முடிகிற கனவுகள்;
இனம்புரியாத ஏதோ ஒரு கனம்
பலம்கொண்ட மட்டும் பாறையாய் நசுக்க
கலவரம் முற்றிக் கத்தும் முன் – இது
கனவென்று புரிந்து கலையும் கனவுகள்;
கனவில் மலம் வந்தால் பணம் வரும் என்று
கண்ணதாசன் சொன்னது போலவே
அடுத்த நாளின் ஆதாயத்தை
அறிவிக்க வருகிற அசுத்தக் கனவுகள்;
பள்ளிச்சீருடை போட்ட படியே
கல்யாணம் செய்வதாய்க் கலங்கல் கனவுகள்;
அபூர்வமான கவிதை வரிகளை
அள்ளிவந்து கொடுத்த கையோடு
விழிப்பு வருகிற விநாடிக்கு -முன்னால்
பிடுங்கிக் கொண்டு போகிற கனவுகள்;
இத்தனையோடும் அல்லாடும் என்னிடம்
“நேற்றென் கனவில் வந்தீர்கள்” என்கிறாய்
எப்படி வர முடிந்திருக்கும் என்னால்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *