மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…
இத்தனை உயரமா பிரிவின் துயரம்!
அன்பின் பரப்புதான் எத்தனை அகலம்!
இரண்டு மனங்களில் எழுந்த காதல்
இன்னோர் இமயம் எழுப்பி முடித்ததே!
காதலிக்காக ஷாஜஹான் வடித்த
கண்ணீர் இங்கே கல்லாய்ச் சமைந்ததே!
மனசை இழைத்து மாடங்கள் சமைத்தான்!
வயசைத் தொலைத்த விந்தை படைத்தான்!
கல்லை முதல் உளி முத்தமிட்டதுமே
கல்லறைக்குள் அவள் கண்கள் விழித்தாள்;
பார்வையில் தாஜ்மஹால் பருகியபடியே
ஈர நிலாவுக்குள் இருக்கிறாள் மும்தாஜ்;
யமுனா நதியின் மௌனப் பிரவாகம்,
அனாதை அரசனின் அழுகைச் சோகம்;
காதலின் சுமையாய்க் கற்கள் இறங்கி
சாவை வென்று சரித்திரமானது;
ஷாஜஹான் வடித்த கண்ணீர்த் துளிதான்
பளிங்கை விடவும் பவித்திரமானது;
மஹாலுக்குள் பறந்த மணிப்புறா இரண்டு
ஷாஜஹான்-மும்தாஜ் சாயலில் இருந்தன.