பொத்தப்பி என்கிற நாட்டில் வேடுவர் குலத்திற்கு தலைவராக நாகன் என்றொரு வேடுவ மன்னன் இருந்தான். அவனுடைய மனைவியின் பெயர் தத்தை. குழந்தைப் பேறு இல்லாமல் முருகப் பெருமானிடம் வேண்டினார்கள். ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையை கையில் ஏந்தியபோது கனமாக திண் என்று இருந்ததால் திண்ணன் என்று பெயர் வைத்தனராம்.

இங்கே ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். எழுத்தறிவில்லாத வேடர்கள்கூட தங்கள் குழந்தைகளுக்கு பெயரிடும் போது ஏதோ ஒரு காரணம் பற்றிப் பெயரிடுகிறார்கள். இன்று நவீன யுகத்தில் வைக்கப்படுகின்ற சில பெயர்கள், பெயர் வைத்தவர்களுக்கும் பொருள் தெரிவதில்லை. வளர்ந்த பிறகு பிள்ளைகளுக்கும் அதன் பொருள் புரிவதில்லை. வாயைத் திறந்து அழைத்தால் அவை வாயிலும் நுழைவதில்லை.

வில்வித்தையிலே தேர்ச்சி பெற்ற திண்ணன் பதினாறு வயது நிரம்பிய பிறகு திண்ணனையே வேடவர்களுக்கு தலைவனாக தந்தை ஆக்குகிறார். மிகப்பெரிய வேட்டைக்காரனாக திண்ணன் வளர்ந்து நிற்க அவர் வீரத்துக்கு சவாலாகும் விதமாக விரித்த வலைகளையெல்லாம் அறுத்துக் கொண்டு ஒரு பன்றி ஓடியது. பன்றியைத் துரத்திக்கொண்டு நாணன், காடன் என்ற இருவர் மட்டும் திண்ணனாருடன் ஓடினார்கள். நெடுந்தூரம் ஓடிய பன்றி ஒரு மரச்சரிவில் நின்றது. அதைக் கண்ட திண்ணார் தன் உடைவாளை எடுத்து குத்தி அதைக் கொன்றார்.

நாணனும் காடனும் திண்ணனாரிடம் அந்தப் பன்றியை அங்கேயே கொன்று தின்று பின் செல்லலாம் என்று சொன்னார்கள். ஒரு நீண்ட குன்றைக்காட்டி அதற்குப் பின் பொன்முகலி ஆறு இருக்கிறது என்று சொல்ல, அந்தப் பன்றியை எடுத்து வரச் சொல்லிவிட்டு, அந்தக் குன்றின் மேல் திண்ணனார் ஏறத் தொடங்குகிறார். ஏதோ ஓர் அன்பு அவர் இதயத்தை குழைவித்து அங்கே ஈர்த்தது. ‘அங்கே குடுமித்தேவர் இருக்கிறார். கும்பிடலாம்’ என்று நாணன் சொல்ல இன்னும் ஈடுபாட்டோடு போனார்.

குடுமித்தேவரை கண்டமாத்திரத்தில் அவர் மனம் சிலி-ர்த்தது. இறைவன் பால் அளவறியா ஈடுபாடு கொண்டார். கட்டித் தழுவி கண்ணீர் சொரிந்து இவர் இங்கு தனியாக இருக்கிறாரே. இவருக்கு துணையாக இருக்க வேண்டும் என்று அளப்பரிய அன்பு கொள்கிறார்.

சிவகோசரியார் என்ற சிவாச்சாரியார் முறைப்படி செய்த பூசனைகளை எல்லாம் பார்த்து விட்டு இதை யார் செய்தது என்று மனம் வருந்தி இறைவனுக்கு நல்ல இறைச்சியைப் படைக்க வேண்டும் என்று சொல்வார். பன்றியை நெருப்பிலே வதக்கி அந்த ஈறைச்சியை, தான் முதலில் சுவைத்து பிறகு அவற்றுள் நல்லவற்றை இறைவனுக்குப் படைத்தார்.

இவர் படைத்துவிட்டு போனபின் வருகிற சிவகோசரியார் அதையெல்லாம் கண்டு சுத்தம் செய்வார்; மனம் பதைப்பார். இருவரும் மாறிமாறி தங்கள் வழியில் மலையில் இருக்கிற குடுமித்தேவருக்கு வழிபாடு நிகழ்த்தினார்கள்.

திண்ணனாரின் உயர்ந்த அன்பை சிவகோசரியாருக்கும் மற்றவர்களுக்கும் காட்ட இறைவன் திருவுள்ளம் கொண்டார். கனவில் கடவுள் வந்து சொன்னதன் வண்ணம் சிவகோசரியார் மறைந்திருந்து பார்க்க இறைவனுக்கு அமுது செய்ய திண்ணனார் வந்தார். அப்போது சிவலிங்கத்தின் கண்ணில் இருந்து உதிரம் கொட்டியதைக் கண்டு பதறினார்; பதைத்தார்; நிலத்தில் வீழ்ந்தார்.

“வந்தவர் குருதிகண்டார்; மயங்கினார்; வாயின் நன்னீர்
சிந்திட கையில் ஊனும் சிலையுடன் சிதறிவீழ
கொந்தலர் பள்ளித்தாமம் குஞ்சி நின்றலைந்து சோர
பைந்தழை அலங்கன் மார்பர் நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார்”
என்று அவருடைய பதைபதைப்பை சேக்கிழார் விளக்குகிறார்.

மரபின் மைந்தன் ம.முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *