நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், முடிவுகள் எடுப்பதுதான். நிறுவனத்தின் வணிக நிலை மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் சில யூகங்களை செய்து நிர்வாகி தனிமனிதராக சில சமயம் முடிவுகள் எடுப்பதுண்டு. இது மிகவும் பழைய முறை.

நிறுவனம் பெரிதாக வளர வளர பலரும் சேர்ந்து கூட்டு முடிவுகளை எடுக்கும் சூழல் ஏற்படுவதுண்டு. இதற்கென்று சில நவீன அணுகுமுறைகள் ஏற்பட்டன.

அ) ஒவ்வொரு துறையின் தலைவரும், தங்கள் துறையின் உத்தேசமான செயல்திட்டத்தை முன்கூட்டியே வழங்குவது இந்த உத்தேச செயல் திட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பது.

உதாரணமாக, அடுத்த நிதியாண்டில் விற்பனை எத்தனை சதவிகிதம் அதிகரிக்கும் என்ற உத்தேசமான அறிக்கையை விற்பனைத்துறை மேலாளர் வழங்குவார்.

அதன் அடிப்படையில் கொள்முதல், உற்பத்தி, தொழிலாளர் எண்ணிக்கை போன்ற விவகாரங்கள் முடிவெடுப்பார்கள்.

ஆ) நிர்வாகக் கொள்கைகள் அடுத்த கட்டமாக நவீனமடைந்த போது இன்னொரு முறை பரவலாகப் பின்பற்றப்பட்ட ஒரு குழுவினர் அமர்ந்து, விவாதித்து கலந்து பேசுகின்ற முறை.

பல்லாண்டுகளாய் இந்த அணுகுமுறைதான் நடப்பிலிருக்கிறது.

இந்த முறையிலிருந்த குறைபாடு என்னவென்றால், மேல்நிலையில் இருக்கும் நிர்வாகி தன் கருத்தை சொல்லத் தொடங்கியதும், மற்றவர்கள் தங்கள் கருத்தை அதற்கு ஒத்துஊதும்படி சாதுரியமாக மாற்றிக்கொள்வார்கள். அல்லது தயக்கம் காரணமாக தங்கள் யோசனைகளை வெளிப்படையாக சொல்லாமல் போகலாம்.

இதுபோன்ற சிக்கல்களை தவிர்ப்பதற்காக “டெல்ஃபி” என்ற முறை உருவாக்கப்பட்டது. 1950இல், ராண்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் முதல் முதலாக இதனைப் பரிட்சித்துப் பார்த்தது.

அதன் முக்கிய நோக்கங்கள்
– ஒரு விஷயத்திற்கு இருக்கக்கூடிய பல வகையான தீர்வுகளைத் தொகுப்பது.

-பல்வேறு முடிவுகளை எடுப்பதற்கான வலிமையான ஆதாரங்களைத் திரட்டுவது

-பலவிதமான பார்வைகளையெல்லாம் பரிசீலனை செய்து, அனைவரும் ஒப்புக் கொள்ளக்கூடிய ஒருமித்த கருத்தை எடுப்பது.

-ஒரு சிக்கின் பல்வித அம்சங்கள் மற்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிர்வாகப் பிரிவுகள் பற்றி பங்கேற்கும் அனைவரும் நன்கு தெரிந்துகொள்வது.

உங்கள் நிறுவனத்திலும் டெல்ஃபி முறையைப் பின்பற்றி சுமூகமான முடிவுகளை எடுக்கலாம்.
டெல்ஃபி முறையில் ஒரு குழு உருவாக்கப்படும். இந்தக் குழுவில் உள்ளவர்கள் முடிவெடுக்கும் பணியில் தொடர்பு, அனுபவம், பொறுமை, சிக்கலை நிதானமாக ஆராய்தல் ஆகிய தகுதிகளுடன் இருப்பது அவசியம்.

இந்தக் குழு, விரிவான கேள்விகள் அடங்கிய ஒரு கேள்வித்தாளைத் தயார் செய்யும். அந்தக் கேள்விகள் தகவலைத் தூண்டிப் பெறும் விதத்தில் இருக்கும்.

பணியில் இருக்கும் பலதுறைப் பணியாளர்கள் மத்தியில் அந்தக் கேள்வித்தாள் விநியோகிக்கப்பட்டு பதில்கள் பெறப்படும். அந்த பதில்களில் கருத்துகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டால் சிக்கலுக்கு விதம்விதமான தீர்வுகள் கிடைக்கும். ஆனால், இது முதல் நிலை மட்டும்தான். இதற்குப் பிறகு, கிடைத்த பதில்களின் அடிப்படையில் இரண்டாவது கேள்வித்தாள் அமையும். இதில் நிர்வாகம் இந்த சிக்கலுக்கு எடுக்க உத்தேசித்திருக்கும் தீர்வுகள் 1,2,3 என்ற வரிசையில் குறிப்பிடப்பட வேண்டும்.

இதற்குக் கிடைக்கும் பதில்களிலேயே எந்தத் தீர்வு பெரும்பான்மையானவர்களால் ஏற்படுகிறது என்பது தெளிவாகும்.

பொதுவாகவே, நிர்வாகத்தில் ஏற்படும் சிக்கல்களின் தீர்வு என்பது கட்டாயமான சமரசம் என்று வரும்போதுதான் அதிருப்தியும் கருத்து வேற்றுமையும் ஏற்படுகிறது. அது நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும் தீங்கு.

மாறாக டெல்ஃபி முறையின்படி எல்லோரும் ஒருமித்த கருத்துக்கு வருகிறார்களே தவிர யாருக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு சமரசம் செய்து கொண்டோம் என்கிற அதிருப்தி ஏற்படுவதில்லை.

இதனை அடிக்கடி பயன்படுத்துவதைவிடவும் முக்கிய முடிவுகளை எடுக்குபம்போது மட்டும் கையாள்வது நல்லது. “பழகப் பழகப் பாலும் புளிக்கும்” என்பது டெல்ஃபி முறைக்கும் பொருந்தும் அல்லவா!

– மரபின் மைந்தன் ம. முத்தையா
(உலகப்புகழ் பெற்ற நிர்வாக உத்திகள் என்ற புத்தகத்திலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *