இந்தியாவில், இது வி.ஆர்.எஸ். காலம். அரசு நிறுவனங்களிலும் சில தனியார் நிறுவனங்களிலும் நாடெங்கும் விருப்ப ஓய்வு அமலுக்கு வந்திருக்கிறது.

நிர்ப்பந்தத்தின் பேரில் விருப்பு ஓய்வு பெறும் அலுவலர்கள் மற்றும் வேறு நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பிக்க நினைக்கும் அலுவலர்கள் அனைவரும் சில குறிப்புகளை மனதில் கொள்ள வேண்டும்.

விருப்ப ஓய்வுக்குப் பிறகு வேலைக்குப் போவது என்று நீங்கள் முடிவெடுக்கும் பட்சத்தில், ஏன் வேலைக்குப் போக விரும்புகிறீர்கள் என்பதை ஒரு காகிகத்தில் எழுதுங்கள்.

அ) பொருளாதாரத் தேவைகளுக்கு

ஆ) சும்மா இருக்கப் பிடிக்காமல்

இ) அனுபவத்தையும் – அறிவையும் பயன்படுத்த
இவை மூன்றுமே நியாயமான காரணங்கள்தாம். இவற்றில் எந்தப் பிரிவில் நீங்கள் இருந்தாலும் சரி, முந்தைய வேலையில் நீங்கள் எப்படி அங்கீகரிக்கப்பட்டீர்கள் என்பதைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். சிலர் கடும் உழைப்பாளிகளாக இருப்பதுடன் அந்த அளவுக்கு அங்கீகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள். நிர்வாகமே அவர்களை அங்கீகரித்திருக்கலாம். அல்லது தங்கள் சாதனைகளைச் சொல்லி அவர்கள் அங்கீகாரம் பெற்றிருக்கலாம். இதற்கு ஆளுமைமிக்க செயல்திறன் என்று பெயர்.

தங்கள் வேலைகளைச் சரியாக செய்து வந்திருப்பார்கள். அவர்கள்மீது எந்தப் புகாரும் இருக்காது. ஆனால் பெரிய அங்கீகாரமும் இருக்காது. இதற்கு அமைதிச் செயல்திறன் என்று பெயர். நீங்கள் ஆளுமைத் திறனாளியா? அமைதித் திறனாளியா? என்பதை முதலில் முடிவு செய்யுங்கள்.

அடுத்து, எந்த மாதிரியான நிறுவனத்தில் பணியாற்ற விருப்பம் என்று பாருங்கள். பெரும்பாலும் விற்பனைப் பிரிவில் இருந்து பல நிறுவனங்களுடன் தொடர்பு கொள்பவர்கள், காலப்போக்கில் வாடிக்கையாளரின் நிறுவனத்திலேயே பர்சேஸ் மேலாளராக சேர்ந்துவிடுவது வழக்கம்.

முதல்முதலாக வேலைக்குச் சேரும்போதுதான் நிறுவனம் உங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். போதிய அனுபவமும் தகுதியும் வந்துவிட்டால் நிறுவனத்தை நீங்கள் தேர்ந்தெடுத்து வேலைக்குச் சேரலாம். அதற்கு நிதானமான அணுகுமுறை தேவை.

பணிவாய்ப்பு தேடும் குழைவுகளோடு உங்கள் விண்ணப்பம் இருக்க வேண்டியதில்லை. உங்கள் தகுதிகளைப் பட்டியலிட்டு, அந்த நிறுவனத்திற்கு எப்படி உங்களால் உதவ முடியும் என்பதைக் குறிப்பிடலாம்.

உங்கள் அனுபவம் மற்றும் நம்பிக்கையின் முதிர்ச்சி அந்த விண்ணப்பத்திலேயே வெளிப்படும்படி எழுதுவது உத்தமம்.
இப்படிப் பணிக்குச் சேர்கிற காலத்தில் நேர்முகத் தேர்வாக இருந்தால் ஒரு முக்கியமான அம்சம், “சம்பளம்” பேசுபவரையே “என்ன தரமுடியும்” என்று கேட்பது நல்லது. உங்கள் எதிர்பார்ப்புக்கும் அதற்கும் பெரிய இடைவெளி இருந்தால், உங்கள் கருத்தை உறுதியாக முன் வைக்கலாம்.

முழுநேரப் பணிக்கு சேர விருப்பமில்லையென்றால் சில புராஜக்ட்களை (செயல்திட்டங்கள்) மேற்கொள்ளலாம். அதுபோன்ற சூழல்களில் எந்தத் துறையில் உங்களால் ஒரு செயல்திட்டத்தைக் கொண்டு வரமுடியும் என்று விளக்கிச் சொல்வது அவசியம்.

உதாரணமாக, “அன்றாட வேலைகளில் செலவைக் குறைத்தல்” என்கிறபோது, உங்கள் அனுபவ அடிப்படையில் ஒரு செயல்திட்டத்தை உருவாக்கலாம். அந்த செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் என்னென்ன தடங்கல்கள், அவற்றை எப்படி சீர் செய்வது, அதை எங்கு தொடங்குவது என்பதுபோன்ற விபரங்களில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

அதற்காக அனைத்தையும் எடுத்த எடுப்பில் அந்த நிறுவனத்திற்கு சொல்லிவிடக்கூடாது. இன்று பல நிறுவனங்களில் பார்த்தீர்களானால் உற்பத்தி செலவுக்கு நிகராக விநியோகச் செலவு வந்துவிடுகிறது. கணக்குகளை சரிவரப் பார்த்£ல் இந்த செலவைக் கட்டுப்படுத்தும் வழி தெரியவரும்.

அதை போல, மார்க்கெட்டிங் துறையில் நெடிய அனுபவம் உள்ளவரால், கைவிட்டுப்போன பழைய ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்து மீட்டுக்கொண்டு வரமுடியும்.

இதுபோல், உரிய துறைகளைக் கோடிட்டுக் காட்டு அந்த செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் எத்தனை சதவிகிதம் நிதி மேம்பாடு ஏற்படும் என்பதை உத்தேசமாகக் குறிப்பிடவேண்டும். இதைத் தனியாகக் கையாளும் மனநிலை இருக்குமானால் உரிய நிறுவனங்களை அணுகி இத்தகைய ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இதற்கு முன்னால் செய்த பணியில் இத்தகைய செயல்திட்டங்கள் எதையும் செய்திருந்தால், அதற்கான சான்றாதாரங்களைத் திரட்டிக்கொள்வது அவசியம்.

பொதுவாக, தன் விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு தன் திறமைகளைப் பழைய நிர்வாகம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றோர் எண்ணம் ஏற்படக்கூடும். அப்படியானால் என்னென்ன முடியும் என்பதை உறுதியாகவும் நம்பிக்கை ஏற்படும்விதமாகவும் சொல்வது நல்லது.

பெர்னாட் பரூச் என்ற தொழில் ஆலோசகர் சொன்னதை உங்களுக்குச் சொல்கிறேன். “எந்த ஓர் திறமைசாலியும், தன் அனுபவங்களிலிருந்து ஓய்வு பெறுவதில்லை. எனவே அவர் அதைப் பயன்படுத்த வேண்டும்” என்றார் அவர்.

கள்ளில் பழையது சிறந்தது என்பார்கள். வேலையிலும் அப்படித்தான். அனுபவம் வாய்ந்தவர்களுக்கு வணிக உலகில் எப்போதுமே தனி மரியாதை உண்டு. அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

– மரபின் மைந்தன் ம. முத்தையா
(உலகப்புகழ் பெற்ற நிர்வாக உத்திகள் என்ற புத்தகத்திலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *