சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை  கடந்த   10 மணிநேரங்களுக்கு இல்லாத போதும் திறந்து விடப்படுகிற ஏரிகளின் தண்ணீர் வெள்ளப் பெருக்காய் வீதிகளில் உலா வருவதுதான் ஆகப் பெரிய சோதனையாய் அமைந்துள்ளது.

தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுவதும் தங்குமிடம் தேடி மக்கள் அலைவதும் ஓரளவு சமன்பட்டு பற்பல மண்டபங்கள் திரையரங்குகள் வழிபாட்டுத்தலங்கள் மக்கள் தங்கிக் கொள்ள திறந்து விடப்படுகின்றன.

மக்கள் நல அமைப்புகள் தங்கள் உறுப்பினர்களைத் திரட்டி மண்டபங்கள் பிடித்து உணவு தயார் செய்து சேரிப் பகுதிகளிலும் பிற தாழ்வான பகுதிகளிலும் இரவு பகலாக விநியோகம் செய்து வருகின்றனர்.

மதபேதம் இல்லாத மனித நேயம்

மசூதிகள் தேவாலயங்கள் சார்பில் வெவ்வேறு வகைகளில் உதவிகள் செய்யப்படுகின்றன. சென்னையில் சிருங்கேரி மட வளாகம் உட்பட பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து சமையல் செய்து உணவு விநியோகத்தில் ஈடுபடுகின்றனர்.சுழற்சங்க உறுப்பினர்களின் செயல்களை திரு. ஒளிவண்ணன், திரு.நா.வெங்கடேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்து செய்யும் பணிகளை உடனிருந்து பார்க்க முடிந்தது.

இவர்களின் இன்னோவா கார்கள் உணவுப் பொட்டலங்களை ஏற்றிக் கொண்டு திசைகள் தோறும் விரைவதைப் பார்க்க முடிந்தது. முண்டிக் கொண்டு வருகிற பொதுமக்கள்,இவர்கள் அறிவுறுத்தலின் பேரில் வரிசையில் நின்று உணவுப் பொட்டலங்களை வாங்கிச் செல்கிறார்கள்.

குவியும் பைகள் ; கனியும் மனங்கள்

மழை கொஞ்சம் விட்டதுமே ஓரளவு வசதி படைத்த மனிதர்கள் தங்கள் வீடுகளிலிருந்து உணவு, பால் உடைகளுடன் உதவி மையங்களை நாடி வந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.அதே போல பிற மாவட்டங்களிலிருந்து நிறுவனங்கள் தனி அமைப்புகள் ஆகியவை பெருமளவில் உதவிகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

கோவை பி.எஸ்.ஜி.நிறுவனங்கள் 15,000 போர்வைகளை அனுப்பிவிட்டதாக திரு. வெங்கடேஷுக்கு தகவல் அனுப்பினர். பார்க் கல்வி நிறு வனங்கள் 3000 போர்வைகள் அனுப்பியுள்ளதாய் அவருக்கு தகவல் வந்துள்ளது.

குழந்தைகளுக்கான ஆடைகள் பெரியவர்களுக்கான ஆடைகள் எவ்வளவு வந்தாலும் அதற்கான தேவைகள் இருக்கின்றன.

உதவும் உணவகங்கள்

சென்னையின் புகழ்பெற்ற உணவகங்களில் சில, ஆயிரக்கணக்கில் உணவுப் பொட்டலங்களைத் தயார் செய்து தொண்டு நிறுவனங்களின் துணையுடன் விநியோகித்து வருகின்றன.நான் நேரில் பார்த்தவரை சங்கீதா உணவகங்கள், ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆகியவை இப்பணியில் இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றன.

உணவு தயாரிக்கும் வசதி, விநியோகிக்க ஊரெங்கும் கிளைகள் ஆகிய இரண்டு அம்சங்களும் இருப்பது இவர்களின் நல்லெண்ணத்துக்கு துணை செய்கின்றன.

முதல்வர் புறப்பட்டார்

சென்னை ராதாகிருஷ்ணன் சாலை அருகே   காலை 10.45 மணியளவில் முதல்வர் கடந்து போவதைப் பார்த்தேன்.அப்போது மழை லேசாகத் தூறியது.இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் லேசாய் வெய்யில் அடிக்கிறது.காலையில் ஆகாயத்தின் நீலநிறம் கண்ணில் பட்டது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *