பதின் வயதுகளின் பரவசம் கடந்து இருபதுகளின் நிதர்சனம் நுழைந்து முதிரும் பக்குவத்தின் முப்பதுகளில் வாழும் வாழ்க்கை வலிகளும் வரங்களும் விளைகிறபருவம்.

கற்று வந்த கல்வியின் நிமிர்வுகளை எல்லாம் பெற்று வரும் அனுபவங்கள் புரட்டிப் போடுகிற பருவம்.சின்னச் சின்ன சம்பவங்கள் வழியே ,வாழ்க்கை தன் உண்மையான முகத்தை உணர்த்தும் தருணம்.

எதிர்பாராத அனுபவங்களை எதிர்கொள்ள நேர்பவர்கள் இருவேறு விதங்களில் எதிர்கொள்வார்கள். ஒன்று,நிகழ்வதை திறந்த மனதுடன் எதிர்கொண்டு அதனை வாழ்க்கை தரும் அறிவுறுத்தலாய்,அறிந்து கொள்ள வேண்டிய அனுபவமாய் ஏற்பார்கள்.

அல்லது,இந்த வாழ்க்கை மிரட்சி தருவதாய் பயந்து தங்களைத் தாங்களே சுருக்கிக் கொள்வார்கள்.

உண்மையில் உங்களுக்குள் இருக்கும் உண்மையான திறன்களை வெளிக்  கொணரும் வாய்ப்பாகவே வாழ்க்கை பலநேரங்களில் தன் உண்மை முகத்தை உணர்த்துகிறது. வாழ்வின் போக்கறிந்து வருவதை எதிர்கொள்ளும் பக்குவத்தை முப்பதுகளில் இருந்து முனைப்புடன் வளர்ப்பவர்கள்,மிக விரைவில் மிகப் பெரிய உயரங்களை அடைவார்கள்.

நடைப்பழக்கம் உள்ளவர்கள் ஒரு நுட்பத்தை உணர்வார்கள்.நடக்கத் தொடங்கி சிலநாட்களிலேயே நடப்பதன் சுகத்தைக் கால்கள் கண்டுணரும்.ஓரளவு வேகமாக நடக்கத் தொடங்கும் போது,நடப்பவர்களின் முயற்சியையும் மீறி,புதிய வேகம் கால்களுக்கு வசப்படும்.தன்னையும்மீறிய தாளகதியில்,வீசப்பட்ட பந்தின் விசையில் கால்கள் நகரும் லாவகம் நடப்பவர்களுக்கே வியப்பைக் கொடுக்கும்.
நடையில்,நீச்சலில் எல்லாம்,இயங்கத் தொடங்கிய பிறகு இன்னும் கூடுதல்இயக்கம் தானாகவே நிகழ்வதை உணர்வீர்கள்.எந்தச் செயலிலுமே இதுசாத்தியம்.ஒரு நாளின் பணிநேரத்தை மெதுவாகக் கூட்டிக் கொண்டே போக வேண்டும் என்று கூட இல்லை.அதே வேலைநேரத்தில் கூட தீவிரமாகஇயங்கும் கால அளவைக் கூட்டினால் போதும்.
உங்கள் செயல்திறன்,எந்த நேரத்தில் உச்சத்தில் இருக்கிறது என்பதை முதலில் கண்டறியுங்கள்.அந்த நேரத்தில் மிக முக்கியமான வேலைகளை,அதீத பயன் தரக்கூடிய வேலைகளை விருப்பமாய்,
விறுவிறுப்பாய் செய்யுங்கள்.வேலையின் உற்சாகம் உங்களைத்
தொற்றிக் கொள்ளும் போதே,”இன்னும்,இன்னும்” என்று உள்ளுக்குள்
சொல்லிக் கொண்டேயிருங்கள்.பதட்டமில்லாமல்-பரவசமாக,
சலிப்பில்லாமல்-சந்தோஷமாக, வேலைகளை உற்சாகமாக
செய்யச் செய்ய சராசரி அணுகுமுறை மாறி சாதிக்கும் மனநிலை
உங்கள் இயல்பாகவே மாறிவிடும்.
வாழ்க்கை திறக்கும் வாசலில் எல்லாம்
வலக்கால் பதியுங்கள்
ஆழ்மனதுக்குள் ஆயிரம் திறமை
அவற்றை உணருங்கள்
சூழ்நிலை போடும் புதிர்களுக் கெல்லாம்
சோர்வது சரியில்லை

தாழ்வுகள் தாண்டி தலைநிமிர்ந்திடுக!தடையெதும் நிலையில்லை

எண்ணம் போலே எல்லாம் நடந்தால்
இருப்பில் சிறப்பேது
பண்ணும் செயலில் பதறாதிருந்தால்
பணியில் தவிப்பேது
கண்ணும் கருத்துமாய் காரியம் நிகழ்த்து
கலக்கம் இல்லாது
விண்ணைத் தொடவே விரியும் சிறகு

வலிகள் சொல்லாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *