உருட்டிய தாயத்தின் எண்ணிக்கை
ஒவ்வொரு தடவையும் கலந்துவரும்
விரட்டிய பாம்பால் விழுந்தவரும்
ஏணியில் ஏறவே பரமபதம்!

தோற்பதும் வெல்வதும் தொடருவது
தொடக்கத்தில் யாருக்கும் இருப்பதுதான்
ஆட்டத்தின் சூட்சுமம் விளங்கிவிட்டல்
அதன் பின்னர் வெற்றி தொடர்கதைகள்

வீசிய விதைகள் முளைக்குமென்ற
விருப்பத்தின் பேர்தான் விவசாயம்
ஆசைகள் எல்லாம் விதைத்துவிடு
அனைத்தும் ஒருநாள் பயிராகும்!

வானம் பார்க்கிற பூமியைப்போல்
வாய்ப்புகள் பார்த்தே வாழ்ந்திருப்போம்
தானாய் கனியா வாய்ப்புகளைத்
தருணம் பார்த்துக் கனியவைப்போம்!

வெற்றி நமக்கொரு விருந்தாளி
வருத்தி அழைத்தால் வருகைதரும்
பற்றி உன் வீட்டில் அமர்ந்திவிடும்
புகழை அதுவே பரிமாறும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *