வித்தினில் இருப்பவள் பராசக்தி
விளைச்சலில் நிறைபவள் பராசக்தி
முத்தினைஎடுத்திட மூழ்குங்கால்
மூச்சினில் இருப்பவள் பராசக்தி
சித்திர வண்ணத்தில் பராசக்தி
சிலிர்க்கும் கவிதையில் பராசக்தி
எத்தனை அதிசயம் பிரபஞ்சத்தில்..
எல்லாம் எல்லாம் பராசக்தி

அசுரனை வதைத்த புராணங்கள்
அவளுக்கு ஆயிரம் நாமங்கள்
சிசுவின் மெல்லிய சிணுங்கலிலே சியாமளை குரல் வரும் நேரங்கள்
பசுவின் அழைப்புப் பாடலிலே
பராசக்தி மீட்டும் ராகங்கள்
அசையா பொருட்களின் ஆழத்தில் அம்பிகை நிலை கொள்ளும் கோலங்கள்

சக்தி நிகழ்த்திடும் விளையாட்டு
சொற்களில் எல்லாம் அவள் பாட்டு
பக்தி கனிந்திடும் நெஞ்சினிலே
பாலா இசைத்திடும் தாலாட்டு
முக்தர்கள் அருளும் மொழிகளிலே
மூல மந்திர ஜதி கேட்டு
நர்த்தனம் ஆடிடும் பைரவியை
நெஞ்ச கூட்டினில் நீ பூட்டு

_மரபின் மைந்தன் முத்தையா


Comments

  1. அன்னை பராசக்தி என்றும் வாலையாய்த் தரிசிப்பாள்.

    திரிபுரை மாலை காப்பு :

    சித்திதரும் பரகதி உண்டாம் நல்ல செல்வம் உண்டாம் ,
    பக்திதரும் புகழ் பெருகும் அருள் தரும் பொற்பாதமலர்,
    முத்திதரும் திரிபுரை மாலைதன்னைத் துணிந் துரைக்கவே,
    வித்தைதரும் தத்திமுக வெள்ளை விநாயகன் காப்பதுவே.
    ,,,,
    ,,,,
    வாழ்க மரபின் மைந்தன் முத்தையா அவர்கள்,

    அன்புடன்,
    சிவநேயச்செல்வர்,
    வாசுதேவன் இலக்குமணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *