2026 நவராத்திரி கவிதைகள்-5

ஓங்கி ஒலிக்குது வானம்-அதில்
ஓம் என்றுகேட்குது கானம்
தாங்கிப் பிடிக்குது பூமி-அது
தண்ணீர் குடிக்குது சாமி
ஏங்கிய உள்ளங்கள் ஆற -அட
எதிர்கொண்ட உஷ்ணம் மாற
பாங்குடன் பொழிந்தாள் மாரி-கடும்
பஞ்சங்கள் தீர்ப்பாள் காளி


நோய்கள் பரவிடும் நேரம் -எங்கள்
நாயகி அருள் வந்து சூழும்
தாய் அவள் உருட்டிடும் தாயம்-அது
தீர்மானிப்பதே காலம்
பாய்கிற கருணையின் வெள்ளம்-அது
பராசக்தி அம்பிகை உள்ளம்
தீயவை யாவையும் வீழும் -இங்கு
திரும்பவும் நன் நிலை சேரும்

அம்பிகை சூலத்தின் முனையில்-அவள்
அபயக் கரங்களின் நுனியில்
நம்பிய பேருக்குக் காவல் – அவள்

நாவினில் பக்தரின் பாடல்
கொம்பினில் கொடியெனப் படர்வாள்
கங்காதரன் உடன் சுடர்வாள்
அம்புவி படைத்தவள் அன்னை-அவள் ஆதரிப்பாளே என்னை

– மரபின் மைந்தன் முத்தையா








Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *