
காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த கவியரசு கண்ணதாசன் 1981 அக்டோபர் மாதம் 17ஆம் நாள் காலமானார் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் அவர் காலத்தை எப்படிப் பார்த்தார் என்பது தனியே ஆராயத்தக்க சுவையான செய்தி.
கண்ணதாசனின் பாடல்களில் காலம் வெறுமனே கடிகார முள்ளின் நகர்வல்ல. சில இடங்களில் அது உருவமற்ற பெரும் சக்தி. சில இடங்களில் விதியை எழுதும் விரல்கள் கொண்டது. சில இடங்களில் கண்ணீரைத் துடைக்கும் கருணை கொண்டது. இன்னும் சில இடங்களில் அந்த உருவமற்ற காலத்திற்கே உருவம் கொடுத்து, “காலமகள்” என்று கருணைமிக்க அன்னை வடிவில் நம் முன்னே நிறுத்துகிறார் கவியரசர்.
காலத்தின் தீர்ப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாத தருணங்களில் அதனை “காலமகள்” என்று மென்மைப்படுத்தாமல், நேரடியாக “காலம்” என்று அழைப்பதும் கவியரசரின் பாணி என்று தோன்றுகிறது.
நேரு மறைந்தபோது அவர்,
“அய்யய்யோ காலமே ஆண்டவனே
எங்கள் துயர் ஆறாதே ஆறாதே
அழுதாலும் தீராதே”
என்று பாடுகிறார்.
இங்கே காலம் வடிவமற்ற, நடுநிலையான, மனிதனைவிடப் பெரிதான ஓர் அண்ட சக்தியாகவே நிற்கிறது.
கண்ணதாசன் எல்லா இடங்களிலும் காலத்திற்குப் பெண்ணுருவம் கொடுக்கவில்லை. சில இடங்களில் அது மாற்றத்தின் பேராற்றலாக வருகிறது.
“காலம் ஒருநாள் மாறும்
நம் கவலைகள் யாவும் தீரும்”
(பாவ மன்னிப்பு)
என்ற வரி தமிழர்களின் நம்பிக்கை மொழியாகவே மாறிவிட்டது.
இன்றைய நிலையே நிரந்தரம் என்று நினைத்துக் கலங்காதே; காலத்தின் அடிப்படை இயல்பே மாற்றம் என்று அவர் சொல்லுகிறார்.
துன்பப்படுகிற மனிதனிடம் “கவலைப்படாதே” என்று வெறுமனே ஆறுதல் கூறாமல், “காலம் மாறும்” என்று காரணத்தையும் தருகிறார்.
அதே நேரத்தில் நல்ல எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டு எளிய நிலையில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் உழைத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்குரிய காலம் வரும்; வாழ்வு வரும்; தாங்கள் வாழ்வதோடு மற்றவர்களையும் வாழவைக்கும் நிலை வரும் என்று சொல்கிறார்.
“எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே”
(பாசமலர்)
இந்தப் பாடலில் சரியான காலம் கனிவதற்காக காத்திருக்கும் வாழ்க்கைப் படிநிலைகளை அவர் மிக அழகாக விளக்குகிறார்.
“பூ மலர்ந்தால் பிஞ்சு வரும்
பிஞ்சு வந்தால் காய் கிடைக்கும்
காய் கனிந்தால் கனிந்தவுடன் பழம் பறிப்போமே”
என்பது வெறும் இயற்கைச் சுழற்சியின் விவரணம் அல்ல.
அது காலம் கனிவதற்காக காத்திருப்பது என்ன என்பதற்கான எளிய தத்துவ விளக்கம்.
காலம் ஒரு பிரம்மாண்டமான சக்தி என்பதை காட்டிய கவியரசர், படைப்பாளிக்குரிய உரிமையோடு அதன் மீது குற்றமும் சுமத்துகிறார்.
ஒரு படைப்பாளியின் பார்வையில் நடந்த சம்பவங்களுக்கு ஏற்ப காலம் சில நேரங்களில் நீதிபதியாக நிமிர்கிறது; சில வேளைகளில் குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்தப்படுகிறது.
ஒரு காதல் தோல்வியைப் பாடும்போது,
“உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி”
(குலமகள் ராதை)
என்று காலத்தையும் கடவுளையும் நோக்கித் தன் சுட்டுவிரலை நீட்டுகிறார்.
அதே நேரத்தில் காலம் என்கிற பெரும் சக்தி இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகிறது என்ற புரிதல் அவரிடம் இருந்தாலும், வாழ்க்கை அற்புதங்களும் அபத்தங்களும் கலந்த ஒன்றாக இருப்பதை உணர்ந்த கவிஞர், அந்த அபத்தங்களைப் பார்க்கும்போது காலத்தையே கிண்டல் செய்கிறார்.
“காலம் செய்த கோமாளித்தனத்தால் உலகம் பிறந்தது
ஐயா, உலகம் செய்த கோமாளித்தனத்தால் உள்ளம் பிறந்தது”
(படித்தால் மட்டும் போதுமா)
என்று எழுதுகிறார்.
ஒரு நேரத்தில் உயரத்தில் இருப்பவன் இன்னொரு நேரத்தில் கீழே வருகிறான். நேற்று இல்லாதவன் இன்று புகழின் உச்சியில் நிற்கிறான். இன்று கொண்டாடப்படுபவன் நாளை மறக்கப்படுகிறான்.
இந்த முரண்களையெல்லாம் பார்த்த கவிஞனுக்கு உலகமே காலம் நடத்தும் கோமாளித்தனமாகத் தோன்றியிருக்க வேண்டும்.
இதற்கு அடுத்த படிநிலையில் காலத்தை கருணைமிக்க அன்னையாகக் காட்டும் பாடல்களில் முக்கியமானது:
“காலமகள் கண் திறப்பாள் சின்னையா
நீ கண்கலங்கி கவலைப்பட்டு என்னையா”
(ஆனந்த ஜோதி)
இயக்கத்தில் இருக்கும் சின்னஞ்சிறுவனுக்குத் தமக்கை பாடும் இந்தப் பாடல், காலத்தையே அங்கு தாயாக நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
இங்கே காலம் வெறுமனே நகரவில்லை; கண் திறக்கிறது.
மனிதனுடைய துன்பத்திற்கு ஒரு முடிவு இருக்கிறது. இருள் நிரந்தரமானதல்ல. இன்று நம்மைக் கைவிட்ட வாழ்க்கை நாளை நம்மை அரவணைக்கலாம். அதற்கு நாம் காத்திருக்க வேண்டும்.
அந்த நம்பிக்கைக்குக் கண்ணதாசன் வைத்த பெயர் — காலமகள்.
காலத்தை ஓர் அன்னையாகப் பார்க்கிற மனம் இருந்ததால்தான் அவள் ஒருநாள் கண் திறப்பாள் என்று அவரால் பாட முடிந்திருக்கிறது.
பூமியாகிய அன்னை தன் மடியில் எத்தனையோ நதிகளை ஏந்தித் தாலாட்டுகிறாள். அதுபோல் காலம் என்கிற பெண் நம் வாழ்க்கை நதியைத் தன் மடியில் இட்டுத் தாலாட்டுகிறாள் என்று உருவகப்படுத்தும் இடமும் உண்டு.
“காலமகள் மடியினிலே ஓடும் நதி”
(ஓடும் நதி)
என்கிறார்.
இந்த வரியை ஒரு நிமிடம் காட்சிப்படுத்திப் பாருங்கள்.
காலத்திற்கு ஒரு மடி இருக்கிறது. அந்த மடியில்தான் வாழ்க்கை என்னும் நதி ஓடுகிறது.
நதிக்கு அதன் தொடக்கம் தெரியாது; முடிவும் தெரியாது. அது ஓடிக்கொண்டிருக்கிறது. மனித வாழ்க்கையும் அப்படித்தான். நாம் பிறப்பதற்கு முன்னரே காலம் இருந்தது; நாம் மறைந்த பின்னரும் அது இருக்கும்.
நாம் காலத்தைக் கடந்து செல்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால் கண்ணதாசனின் பார்வையில் காலத்தின் மடியில்தான் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
பெற்றோர் பார்த்து முடித்து வைக்கும் திருமணங்கள் அதிகம் நடந்த காலம் கவியரசர் வாழ்ந்த காலம்.
ஒரு நல்ல கணவனோ மனைவியோ கிடைத்துவிட்டால் காலம் என்கிற அன்னையே தன் பிள்ளைக்கு நல்ல வாழ்க்கைத்துணையைத் தேடித் தந்ததாகப் பொருள் கொள்ளலாம் என்கிறார் கவிஞர்.
அந்தத் திருமண வாழ்க்கை தவறிப் போனால் என்ன செய்வது என்ற கேள்விக்கும் அதே பதில்தான்.
“யாரோடு யார் என்று காலமகள் எழுதியதை
யார் மாற்ற முடியுமடி”
(நிலவே நீ சாட்சி)
என்று கேட்கிறார்.
இங்கே காலமகளின் கையில் எழுத்தாணி வந்துவிடுகிறது.
யார் யாரைச் சந்திக்க வேண்டும்? யார் யாரைப் பிரிய வேண்டும்? எந்த உறவு எங்கே தொடங்க வேண்டும்? எங்கே முடிவடைய வேண்டும்?
மனிதன் திட்டமிடுகிறான். ஆனால் வாழ்க்கை எப்போதும் மனிதனுடைய திட்டப்படி நடப்பதில்லை.
அந்த மர்மத்தை வெறும் “விதி” என்று சொல்லிவிட்டுப் போகாமல், “காலமகள் எழுதியது” என்று கவிதையாக்குகிறார் கண்ணதாசன்.
பெரும்பாலும் போதிய எச்சரிக்கையோடு வாழ்கிற மனிதர்களுக்கு காலம் தவறான பாதையைக் காட்டுவதில்லை. அது சரியான பாதையில் தான் கொண்டு செலுத்துகிறது; தவறான தடுமாற்றங்களால் மனிதன்தான் தடம் மாறுகிறான்.
“காலமகள் பாதையிலே
போடா கண்ணே போ”
(தங்கதுரை)
என்று வழியனுப்புகிறார்.
இங்கே காலமகள் அன்னையாக மட்டுமில்லை; வழிகாட்டியாகவும் மாறுகிறாள்.
வாழ்க்கையில் சில பாதைகளை நாமே தேர்ந்தெடுக்கிறோம். சில பாதைகளை வாழ்க்கை நமக்காகத் தேர்ந்தெடுக்கிறது.
அப்படித் தெரியாத பாதையில் பயணிக்கிற மனிதனுக்கு, “போ! அங்கே உனக்கான ஒன்று காத்திருக்கிறது” என்று முதுகில் தட்டிக் கொடுப்பது போலிருக்கிறது இந்த வரி.
கண்ணதாசனின் காலமகள் விதியை எழுதுவதோடு நின்றுவிடுவதில்லை. அவளுக்குக் கருணையும் இருக்கிறது.
“காலமகள் ஜானகிக்கு ஆறுதல் சொன்னாள்
என் கண்மணிக்கும் அவளேதான் ஆறுதல் சொல்வாள்”
(கொடிமலர்)
என்ற வரிகளில் அது மிக அழகாக வெளிப்படுகிறது.
ராமகாவியத்தில் சீதை வனவாசத்தில் துயருற்றிருந்தபோது அவளுக்குத் துணையாக இருந்தவள் திரிசடை. “திரிசடை” என்பதை மூன்று சடைகள் என்று பொருள் கொள்ளலாம்; அதே நேரத்தில் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று காலங்களின் உருவகமாகவும் வாசிக்கலாம்.
அந்த நோக்கில் பார்த்தால், திரிசடையின் வடிவில் காலமகளே ஜானகிக்கு துணையிருந்தாள் என்ற கவியரசரின் கற்பனை அழகாகப் பொருந்திப் போகிறது.
சீதையின் துயரத்தையே காலம் ஆற்றியது என்றால், நம்முடைய துயரத்தையும் காலம் ஆற்றாதா?
மனித வாழ்க்கையின் மிகப்பெரிய உளவியல் உண்மையை எவ்வளவு எளிமையாகச் சொல்கிறார்!
சில துயரங்களுக்கு அறிவுரை மருந்தாவதில்லை.
சில காயங்களுக்கு வார்த்தைகள் மருந்தாவதில்லை.
காலம்தான் மருந்தாகிறது.
அதனால்தான் கண்ணதாசனிடம் காலம் வெறும் சக்தியாக இல்லாமல், காயம்பட்ட குழந்தையை மடியில் போட்டுத் தேற்றும் அன்னையாகிறது.
திரைப்பாடல்களில் மட்டுமல்ல; கண்ணதாசனின் தனிக் கவிதைகளிலும் இந்த “காலமகள்” தொடர்ந்து நடமாடுகிறாள்.
“காலமகள் கைவரிசை
காட்டத் தொடங்கிவிட்டால்
ஞானமகள் கூடத்தன்
நல்லறிவை இழந்து நிற்பாள்”
(தனிக்கவிதை)
என்று பாடுகிறார்.
அறிவு பெரியது. ஞானம் அதைவிடப் பெரியது. ஆனால் காலம் அவற்றையெல்லாம் விடப் பெரியது.
எத்தனை அறிவாளிகளின் கணக்குகளை காலம் மாற்றியிருக்கிறது! எத்தனை பேரரசுகளின் எல்லைகளை அழித்திருக்கிறது! எத்தனை புகழ்களின் மீது தூசியைப் படிய வைத்திருக்கிறது!
ஞானமகளே காலமகளின் முன்னால் திகைத்து நிற்கிறாள் என்ற கண்ணதாசனின் கற்பனை, காலத்தின் பேராற்றலை ஒரே படிமத்தில் காட்டிவிடுகிறது.
இப்படி பற்பல இடங்களில் காலத்தை ஓர் அன்னையாக உருவகம் செய்து “காலமகள்” என்று பெயர் சூட்டி கவியரசர் தன் கவிதைகளிலும் பாடல்களிலும் எழுதிவந்தாலும், அந்த உருவகம் உச்சம் தொட்ட இடம் என நான் எண்ணும் பாடல் ஒன்று உண்டு.
“ஆறுமுகம் ஆன பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்”
என்ற கந்தன் கருணை திரைப்படப் பாடலில்,
“காலமகள் பெற்ற மகன்
கோல முகம் வாழ்க”
(கந்தன் கருணை)
என்று ஒரு வரி வருகிறது.
எளிதில் கடந்து விட முடியாத ஆழமான வரி இது.
சிவபெருமான் தவமிருந்தபோது மன்மதன் மலர்க்கணை எய்ய, நெற்றிக்கண் திறந்து மன்மதனைச் சாம்பலாக்கினார். பின்னர் தேவர்களும் முனிவர்களும் வேண்டியதற்கிணங்க, தன் திருமுகங்களிலிருந்து தோன்றிய நெருப்புப் பொறிகள் வழியாக முருகப்பெருமான் தோன்றியதாகப் புராணம் சொல்கிறது.
மன்மதன் ஆசையின் வடிவம். அவனைச் சிவன் எரித்தபின் அதே நெற்றிக்கண் வழியாக ஞானத்தின் வடிவமான குமரன் தோன்றுகிறார் என்றால், ஆசையை அழித்தால் ஞானம் பிறக்கும் என்ற தத்துவம் அங்கே செயல்வடிவம் பெறுகிறது.
இதற்கு இன்னொரு கோணமும் உண்டு.
உமையம்மை அருகில் இல்லாத நிலையில், தந்தையின் தவ ஆற்றலால் மட்டுமே தோன்றியவர் முருகன் என்கிறபோது அவருக்குத் தாய் யார் என்ற கவித்துவக் கேள்வி எழலாம்.
ஆனால் கந்தன் தோன்றி சூரபத்மனை அழிக்க வேண்டியது காலத்தின் தேவையாகவும் காலத்தின் அவசியமாகவும் இருந்தது.
எனவே காலத்தின் தேவை கருதி கந்தன் தோற்றுவிக்கப்பட்டதால், அந்தக் காலத்தையே ஒரு பெண்ணாக உருவகித்து,
“காலமகள் பெற்ற மகன்”
என்று புத்தம் புதிய கோணத்தில் கந்தனை அறிமுகப்படுத்துகிறார் கவியரசர்.
இதுவே “காலமகள்” என்ற கண்ணதாசனின் உருவகம் தனது உச்சமான தத்துவ ஆழத்தை அடையும் இடம் என்று சொல்லலாம்.
முதுமையின் வருகையைப் பற்றிச் சொல்லும்போதுகூட அவருடைய காலமகள் வருகிறது.
“காதலியாய் வேடமிட்ட
கட்டழகு நடிகை எல்லாம்
தாயாக வேடமிட்டு
தடியூன்றி வருவதெல்லாம்
காலமகள் விட்டெறிந்த
கல்லால் விழுந்த கதை.”
(தனிக்கவிதை)
இங்கே காலமகள் ஆறுதல் சொல்லும் அன்னை அல்ல.
அவள் தவிர்க்க முடியாத மாற்றத்தின் சக்தி.
இளமை அழகை முதுமை மாற்றுகிறது. உடல் மாறுகிறது. முகம் மாறுகிறது. மனிதன் மாறுகிறான்.
ஆனால் காலம் மட்டும் தன் வேலையை இடைவிடாமல் செய்துகொண்டிருக்கிறது.
காலம் என்பது அவரவர் வாழ்வில் வெவ்வேறு படிநிலைகளைக் கொண்டு வந்து சேர்க்கும் சக்தி என்பதை கடவுளே சொல்வதாகவும் கவியரசர் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.
“காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே”
(மகாகவி காளிதாஸ்)
என்ற பாடலில், காளிதாசர் முன்னிலையில் மகாகாளியே ஒரு முதியவள் வடிவில் வந்து பாடுவதாக,
“வாழ்வென்றும் தாழ்வென்றும்
வளமென்றும் குறைவென்றும்
சக்கரம் சுழல்கின்றது
அதில்தான் சரித்திரம் நிகழ்கின்றது”
என்று எழுதுகிறார்.
ஜோதிடம் இந்த மாற்றங்களைத் தூண்டும் அண்ட அமைப்பை காலபுருஷன் என்கிறது.
கவிஞர் அதையே தன் கவிதை மொழியில் காலமகள் என்கிறார்.
இப்படி எத்தனையோ கோணங்களில் காலத்தைப் பாடியவர் காலமானார்.
ஆனால் அவருக்குக் காலம் அதிகமாக வழங்கப்படவில்லை.
ஐம்பத்து நான்கு ஆண்டுகள்தான்.
ஆனால் அந்தக் குறுகிய காலத்திற்குள் அவர் எழுதிய பாடல்களின் எண்ணிக்கையும், கவிதைகளின் எண்ணிக்கையும், நூல்களின் எண்ணிக்கையும், தொட்ட துறைகளின் பரப்பும் வியக்க வைக்கின்றன.
சிலர் நீண்ட காலம் வாழ்கிறார்கள்.
சிலர் வாழ்ந்த காலத்தையே நீளமாக்குகிறார்கள்.
கண்ணதாசன் இரண்டாவது வகை.
அவர் வாழ்ந்த ஆண்டுகளைக் கொண்டு அவரது வாழ்க்கையை அளக்க முடியாது. அவர் விட்டுச் சென்ற வார்த்தைகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்கின்றன என்பதைக் கொண்டுதான் அளக்க வேண்டும்.
அதனால்தான் ஒரு கேள்வி எழுகிறது:
காலத்தைப் பாடிய கண்ணதாசன் காலமானாரா?
அல்லது காலமே ஆனாரா?
“காலம் ஒருநாள் மாறும்” என்று அவர் எழுதிய காலம் மாறிக்கொண்டே இருக்கிறது.
தலைமுறைகள் மாறுகின்றன.
இசையின் வடிவங்கள் மாறுகின்றன.
திரைப்படங்கள் மாறுகின்றன.
ரசனைகள் மாறுகின்றன.
ஆனால் காதலில் விழுகிற இளைஞனுக்கும் கண்ணதாசன் தேவைப்படுகிறார்.
காதலை இழந்தவனுக்கும் கண்ணதாசன் தேவைப்படுகிறார்.
வாழ்க்கையில் தோற்றவனுக்கும் அவர் ஒரு வரி வைத்திருக்கிறார்.
வெற்றி பெற்றவனுக்கும் ஒரு வரி வைத்திருக்கிறார்.
குடும்பத்திற்கும், நட்பிற்கும், தாய்மைக்கும், இறைவனுக்கும், தத்துவத்திற்கும், மரணத்திற்கும் அவர் வார்த்தைகளை விட்டுச் சென்றிருக்கிறார்.
அதனால்தான் கண்ணதாசன் பாடல்கள் பழைய பாடல்களாகவில்லை.
அவை ஒவ்வொரு தலைமுறையிலும் புதிதாகப் பிறக்கின்றன.
ஒரு கவிஞன் தன் காலத்திற்காக மட்டும் எழுதினால் அவன் அந்தக் காலத்தின் கவிஞன்.
தனக்குப் பின்னால் வரும் காலங்களுக்கும் பொருந்தும்படி எழுதினால் அவன் காலத்தின் கவிஞன்.
கண்ணதாசன் இன்னும் ஓர் அடி மேலே செல்கிறார்.
காலத்தை உருவமற்ற சக்தியாகப் பார்த்தார்.
அதற்குக் “காலமகள்” என்று உருவம் கொடுத்தார்.
அவளுக்குக் கண் கொடுத்தார்.
மடி கொடுத்தார்.
கை கொடுத்தார்.
எழுத வைத்தார்.
பாதை காட்ட வைத்தார்.
ஆறுதல் சொல்ல வைத்தார்.
மகனையும் பெற்றெடுக்க வைத்தார்.
கடைசியில் அந்தக் காலமகளே கண்ணதாசனை அழைத்துச் சென்றாள்.
ஆனால் ஒரு வேடிக்கை நிகழ்ந்தது.
கண்ணதாசனை அழைத்துச் சென்ற காலத்தால்
கண்ணதாசனின் பாடல்களை அழைத்துச் செல்ல முடியவில்லை.
அதனால்தான்
கண்ணதாசன் காலமானார் என்பது வரலாறு.
கண்ணதாசன் காலம் ஆனார் என்பதே நிதர்சனம்.





காலத்தால் அழியாத காவிய கட்டுரை. மிகச் சிறப்பு!
மரியாதைக்குரிய நண்பர் முத்தைய்யா அவர்களுக்கு …
இன்று நீங்கள் எழுதியிருக்கும் இந்த கட்டுரை மற்றவர்களோடு இப்பொது பகிர்ந்து கொள்ள மனம் ஒப்பவில்லை… ஏனெனில் …இது கண்ணதாசனின் படைப்புகளிலுள்ள எத்தனையோ
வார்த்தைகளில் “காலம்” என்ற ஒரு சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டு இவ்வளவு தெளிவாக ,ஆழமாக .. ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள்…
இது கண்ணதாசனின் கவிதைகள் பற்றியும்… அவற்றின் ஆழத்தை பற்றியும் நீங்கள் படைத்த ஒரு ஆராய்ச்சி கட்டுரை..
கண்டிப்பாக பல்கலைக்கழகங்கள் இதை ஏற்று “டாக்டர் “ பட்டம் கொடுத்து சிறப்பிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது …கண்ணதாசனை பற்றி எவ்வளவோ ஆய்வுகள் வந்திருக்கின்றன…ஆனால் இது போன்ற ஒரு தீர்க்கமான ஒரு ஆய்வை உங்களால் மட்டும் தான் செய்ய முடியும்
கண்ணதாசனை வாசித்து
இரசித்து கொண்டே இருக்கும் எண்ணற்ற
இரசிகர்களில் ஒருவன் என்ற முறையில்
உங்களை மனமாற வாழ்த்துகிறேன்
நன்றி வணக்கம்
ச. பழனியப்பன்
அன்பு அண்ணன் முத்தையா அவர்களுக்கு, இவ்வளவு ஆழமான சொற்களை கண்ணதாசனுடைய இயற்பெயரை தன் பெயராக கொண்டு இருக்கிற உங்களால் மட்டும் தான் வடிக்க முடியும். காலம் என்கின்ற வார்த்தையை பற்றி கண்ணதாசன் என்ன எண்ணியிருப்பார் என்று நினைத்துப் பார்த்து சொல்வதற்கு ஒரு உரையாசிரியரின் திறன் வேண்டும். தொல்காப்பியருக்கு ஒரு நச்சினார்க்கினியர் கிடைத்தது போல கண்ணதாசனுக்கு தாங்கள் கிடைத்துள்ளீர்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. அருமையோ அருமை. காலத்தால் அழியாத ஒரு சிறந்த ஆராய்ச்சி உரை.
காலன், காலம் அதன் காரணத்தால் மாறிவரும் உலகம் – உலகத்தார், வெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பார்க்க வைக்கிறது. எதார்த்தமாய் கவிஞர் தந்த பாடல் வரிகளுக்குத் தாங்கள் எழுதிய ஆழமான ஆராய்ச்சி உரை வாசித்ததில் மகிழ்கிறேன். இனிய நல்வாழ்த்து ஐயா.
அன்புடன்,
சிவநேயச்செல்வர்,
வாசுதேவன் இலக்குமணன்,
ஸ்கூடாய், ஜொகூர்,
மலேசியா