2026 நவராத்திரி கவிதைகள் – 7
சன்னதி முன்னே ஏற்றிய தீபங்கள்
சங்கதி சொல்லாதோ
கன்னியாகுமரி கடை விழி பார்த்தால்
என் வலி நில்லாதோ
முன்னம் செய்தவை முள்ளாய் உறுத்தும்
மயக்கம் தீராதோ
அன்னை பராசக்தி ஆட்கொண்டால் என்
அச்சம் நீங்காதோ
இங்கு ஒரு பிறவி இன்னமும் உண்டோ
என்கிற கேள்விக்கு
லிங்க பைரவி பதில் தருவாய் நீ
லீலைகள் ஏதுக்கு
மங்கலை சங்கரி மகேஸ்வரி கருணை
மலர்கிற வாழ்வுக்கு
சங்கடமில்லை சஞ்சலம் இல்லை
சாட்சிகள் ஊருக்கு
வித்தகி நர்த்தகி சத்திய ரூபிணி
வருக நீ அபிராமி
நித்தமும் தாண்டவம் ஆடிடும் நாயகன்
நாடிடும் சிவகாமி
மொத்தம் என் வினைகளும் முற்றும் அழிந்திட
மனம் வைத்து அருள்வாய் நீ
தத்துவம் அறியா புத்தியில் புகுந்து
தெளிவுகள் தருவாய் நீ
_மரபின் மைந்தன் முத்தையா




